Thursday, February 24, 2011

கச்சத்தீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் ஆய்வு

By ரெ. ஜாய்சன்
24 Feb 2011 02:58:22 AM IST

கச்சத்தீவு அருகே எண்ணெய்க் கிணறுகள் அமைக்க இங்கிலாந்து நிறுவனம் ஆய்வு

தூத்துக்குடி: கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் அமைக்கவிருக்கும் எண்ணெய்க் கிணறுகளால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள், கடல் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடாப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் ஆமை போன்ற அரிய கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமாக இப்பகுதி திகழ்கிறது. எனவே, இங்குள்ள 21 குட்டித் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கச்சத்தீவு பகுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா என்ற நிறுவனம் எண்ணெய் வளம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் கச்சத்தீவு அருகே சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் இந்த ஆய்வை மேற்கொள்ள கெய்ர்ன் லங்கா நிறுவனத்துக்கு இலங்கை அரசு 2008-ல் அனுமதி அளித்தது.
இதற்காக, அந்நிறுவனம் பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளதாகவும், இப் பகுதியில் 3 எண்ணெய்க் கிணறுகளை இந்த ஆண்டு மத்தியில் அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்தார் கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.புஷ்பராயன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற அந்த இங்கிலாந்து நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய கெய்ர்ன் இந்தியா என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற கெய்ர்ன் லங்கா என்ற பெயரிலும் துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது.
கச்சத்தீவு பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த திசைக்கே தமிழக மீனவர்கள் மட்டுமல்ல, இலங்கை மீனவர்கள் கூட செல்ல முடியாது. புயல், காற்று நேரத்தில் கூட அப் பகுதியில் ஒதுங்க முடியாத நிலை உருவாகும். மீனவர்களை கடல் பகுதியிலிருந்து விரட்டிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடல் பகுதிகளைத் தாரை வார்க்கும் முயற்சிதான் இது. மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இந்தியா, இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என 1974 இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்படுகிறது. அதனை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்றார் அவர்.
இந்த எண்ணெய்க் கிணறுகளால் மீனவர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் கடல் சூழல் ஆராய்ச்சியாளரான முனைவர் மன்னர்மன்னன்.
பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவுக்கு மிக அருகில் இந்த எண்ணெய்க் கிணறுகள் அமையவிருப்பதால், அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்.
கச்சா எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படும்போது, கசிவு ஏற்பட்டு கடலில் பரவ வாய்ப்புள்ளது. இளம் கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணியிரிகளை உண்டுதான் வாழ்கின்றன. எனவே நுண்ணியிரிகள் அழியும். அதன்மூலம் இளம் கடல்வாழ் உயிரினங்களும் அழிய நேரிடும்.
மேலும், மீன் இனங்கள் உள்ளிட்ட அரிய கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லவும் வாய்ப்புள்ளது என பல ஆபத்துகளைப் பட்டியலிட்டார் அவர்.

© Copyright 2008 Dinamani

Sunday, February 20, 2011

18.02.2011 - ஊடகச் செய்தி - மீனவர் சமுதாய மேதை சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலருக்கு தமிழக அரசு சார்பில் 151 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்.

18.02.2011

ஊடகச் செய்தி

மீனவர் சமுதாய மேதை சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலருக்கு தமிழக அரசு சார்பில் 151 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்.

தமிழக மீனவர்களின் சிறந்த தலைவராக விளங்கிய சிறந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர் அய்யா சிங்கார வேலருக்கு தமிழக அரசு சார்பாக பிறந்தநாள் கொண்டாட்டம். தமிழக மீனவர்களின் குலவிளக்கான அவரை தேர்தலுக்கு முன் தூசி தட்டி எடுத்திருக்கிறது தமிழக அரசு. ஒரு சமூகத்தின் தலைவரைக் கொண்டாட வேண்டுமென்றால் முதலில் அவர் சார்ந்த இனத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் முதல் கடமை, அந்த இனத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது தமிழக அரசின் தலையாகியக் கடமை. அதைச் செய்யாமல் தங்களது ஆட்சிக் காலங்களில் அவர் சார்ந்த மீனவ இனத்திற்கு எதிரான சட்டங்களையும்,திட்டங்களையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றி விட்டு, பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களுக்காக தமிழக மீனவர்களை காவு கொள்ளச் செய்து விட்டு, மீனவர்கள் சிங்களப் படையினரால் வேட்டையாடப்படும் போது வேடிக்கைப் பார்த்து விட்டு, அந்த படுகொலைகளுக்கு துணை போகி விட்டு தனது ஆட்சியின் இறுதி நாட்களில் அந்த மாபெரும் தலைவருக்கு தமிழக அரசு சார்பில் பிறந்த நாள் விழா எடுப்பது என்பது அந்த மாபெரும் தலைவருக்கு செய்யும் மாபெரும் துரோகச் செயல்.

சிங்காரவேலர் நினைவு நாளில் மீனவக் குடிகளின் ஓட்டுகளை மட்டும் குறி வைக்காமல், மீனவர் நலன் காக்க , அவர்களின் உரிமைகள் காக்க அரசு உறுதி எடுக்க வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய மீனவர்களின்,உயிருக்கும், உடைமைக்கும், வாழ்வாதாரத்திற்கும் அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

கிடப்பில் போடப்பட்ட சிங்காரவேலர் நினைவு இலவச மீனவர் தொகுப்பு வீடுகள் திட்டம்

கடலோரக் கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் 1970-80-ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. மீனவர் இலவச குடியிருப்புத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் 1986-ம் ஆண்டில் சிங்காரவேலர் நினைவு இலவச மீனவர் தொகுப்பு வீடுகள் திட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

தொடக்கத்தில் இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ரூ. 27 ஆயிரமும், பின்னர் ரூ. 37 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது அந்தத் தொகை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தொகையிலும் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது சிரமம் என்பதால் ரூ. 70 ஆயிரமாக உயர்த்தலாம் என்று அரசு பரிசீலித்து வருகிறது..

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் பயனாளிகள், தங்களுக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தில் அரசு ஒதுக்கியுள்ள நிதியில் வீடுகள் கட்டித்தரப்படும்.

புதிய வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் போது நிலப் பட்டாவையும் அளிக்க வேண்டும். ஆனால் பயனாளிகளுக்கு பட்டா அளிக்கப்படாமல் ஒப்படைப்பு நமுனா என்ற கடிதம் மட்டுமே அரசு சார்பில் அளிக்கப்படுகிறது.

இதனால் நிலம் மற்றும் வீட்டின் பெயரில் வங்கிகளில் கடன் பெறமுடிவதில்லை. மீன்வளத்துறையிடமிருந்து ஆட்சேபம் இன்மைச் சான்று (என்.ஓ.சி.) அளித்தால் பட்டா வழங்கத் தயார் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. அவ்வாறு கட்டித்தரப்படும் வீடுகளை 10 ஆண்டுகளுக்குப் பின் புனரமைத்து கட்டித்தர வேண்டும் என்ற விதியும் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால்,தமிழக கடலோர மாவட்டங்களில் பழைய வீடுகள் எதுவும் தற்போது புதுப்பித்து கட்டித்தரப்படவில்லை. ÷இதனால் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பல வீடுகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. வீடுகளின் கூரைகளில் இருந்து சிமெண்ட் கான்கிரீட் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த வீடுகளில் குடியிருப்போர் எப்போதும் அச்சத்துடனே நாள்களை கழிக்கிறார்கள்.

இரவு வேளைகளில் பலர் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களது வீடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.

சேதமடைந்த வீடுகளைக் கணக்கிட்டு அரசுக்குப் பரிந்துரை செய்து புதிய வீடுகள் கட்டித்தரும் முயற்சிகளும் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு மேலாகவே சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் தமிழக கடலோரக் கிராமங்களில் எந்த புதிய வீடுகளும் கட்டித்தரப்படவில்லை.

வீடில்லாத ஏழை மீனவர்கள் 3 சென்ட் நிலத்தை கொடுத்தால் புதிய வீடு கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி என்ன ஆனது? என்றும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகள், கட்டப்பட வேண்டிய வீடுகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து, அரசுக்கு அனுப்புவதில் அதிகாரிகள் தொடர்ந்து காட்டிவரும் அலட்சியத்தால் புதிய வீடுகள் கட்டப்படவில்லை.

ஆனால் இந்திரா குடியிருப்புத் திட்டம், ராஜீவ்காந்தி புனரமைப்புத் திட்டம், சுனாமி அவசர கால திட்டம் என்றெல்லாம் பல்வேறு திட்டங்களில் மீனவர்களுக்கு வீடுகள் கட்டத்தரப்படுவதால் சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படுவதில்லை என்றும், அத்திட்டத்தில் மீனவர்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய தேவையும் எழவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு க்கு பிறகு, இந்தத் திட்டங்களினால் கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவக் குடும்பங்கள் எல்லாம் பயனடைந்து மீனவர்கள் அனைவரும் சொகுசாக வாழ்வதாக அரசு கருதி அந்தத் திட்டத்தை அரசு கைவிட்டு விட்டது.

அதே நேரத்தில் பல ஆண்டுகளாகவே இத்திட்டத்தில் வீடுகள் கேட்டு பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் மனு செய்துள்ளனர்.

வீடில்லாத ஏழை மீனவர்களுக்கு வீடு வழங்கும் தொகுப்பு வீடுகள் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதுடன், சமத்துவபுரம் வீடுகளுக்கு ரூ. 1.90 லட்சம் வழங்குவதுபோல இத்தகைய மதிப்பீட்டிற்கு இணையாக , இந்திய நாட்டில் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் தற்சார்பு மீனவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி சிங்காரவேலர் தொகுப்பு வீடுகளுக்கும் தலா ரூ. 1.90 லட்சம் ஒதுக்கீடு செய்யது சிங்காரவேலர் இலவச தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்

தேர்தலுக்கு முன், கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும்., சட்டங்களையும் உடனே ரத்து செய்தால் மட்டுமே மீனவ மக்கள் தற்போது ஆளும் அரசுகளை மன்னிப்பார்கள். நீங்கள் அவ்வப்பொழுது போடும் அரசியல் நாடகங்களை இனியும் மீனவர்கள் நம்பத் தயாரில்லை. எங்கள் வயிறுகள் மீது கனத்த அடிகள் விழுந்து விட்டன. நாங்கள் அரசுகளின் துரோகங்களை மறக்கத் தயாரில்லை.

கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பாக மார்ச் மாதம் மீனவர் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

நன்றி,

இவண்,

ம.புஷ்பராயன்,

அமைப்பாளர்.

கடலோர மக்கள் கூட்டமைப்பு , தூத்துக்குடி.

Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa