18.02.2011
ஊடகச் செய்தி
மீனவர் சமுதாய மேதை சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலருக்கு தமிழக அரசு சார்பில் 151 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்.
தமிழக மீனவர்களின் சிறந்த தலைவராக விளங்கிய சிறந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர் அய்யா சிங்கார வேலருக்கு தமிழக அரசு சார்பாக பிறந்தநாள் கொண்டாட்டம். தமிழக மீனவர்களின் குலவிளக்கான அவரை தேர்தலுக்கு முன் தூசி தட்டி எடுத்திருக்கிறது தமிழக அரசு. ஒரு சமூகத்தின் தலைவரைக் கொண்டாட வேண்டுமென்றால் முதலில் அவர் சார்ந்த இனத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் முதல் கடமை, அந்த இனத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது தமிழக அரசின் தலையாகியக் கடமை. அதைச் செய்யாமல் தங்களது ஆட்சிக் காலங்களில் அவர் சார்ந்த மீனவ இனத்திற்கு எதிரான சட்டங்களையும்,திட்டங்களையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றி விட்டு, பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களுக்காக தமிழக மீனவர்களை காவு கொள்ளச் செய்து விட்டு, மீனவர்கள் சிங்களப் படையினரால் வேட்டையாடப்படும் போது வேடிக்கைப் பார்த்து விட்டு, அந்த படுகொலைகளுக்கு துணை போகி விட்டு தனது ஆட்சியின் இறுதி நாட்களில் அந்த மாபெரும் தலைவருக்கு தமிழக அரசு சார்பில் பிறந்த நாள் விழா எடுப்பது என்பது அந்த மாபெரும் தலைவருக்கு செய்யும் மாபெரும் துரோகச் செயல்.
சிங்காரவேலர் நினைவு நாளில் மீனவக் குடிகளின் ஓட்டுகளை மட்டும் குறி வைக்காமல், மீனவர் நலன் காக்க , அவர்களின் உரிமைகள் காக்க அரசு உறுதி எடுக்க வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய மீனவர்களின்,உயிருக்கும், உடைமைக்கும், வாழ்வாதாரத்திற்கும் அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
கிடப்பில் போடப்பட்ட சிங்காரவேலர் நினைவு இலவச மீனவர் தொகுப்பு வீடுகள் திட்டம்
கடலோரக் கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் 1970-80-ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. மீனவர் இலவச குடியிருப்புத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் 1986-ம் ஆண்டில் சிங்காரவேலர் நினைவு இலவச மீனவர் தொகுப்பு வீடுகள் திட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
தொடக்கத்தில் இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ரூ. 27 ஆயிரமும், பின்னர் ரூ. 37 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது அந்தத் தொகை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தொகையிலும் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது சிரமம் என்பதால் ரூ. 70 ஆயிரமாக உயர்த்தலாம் என்று அரசு பரிசீலித்து வருகிறது..
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் பயனாளிகள், தங்களுக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தில் அரசு ஒதுக்கியுள்ள நிதியில் வீடுகள் கட்டித்தரப்படும்.
புதிய வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் போது நிலப் பட்டாவையும் அளிக்க வேண்டும். ஆனால் பயனாளிகளுக்கு பட்டா அளிக்கப்படாமல் ஒப்படைப்பு நமுனா என்ற கடிதம் மட்டுமே அரசு சார்பில் அளிக்கப்படுகிறது.
இதனால் நிலம் மற்றும் வீட்டின் பெயரில் வங்கிகளில் கடன் பெறமுடிவதில்லை. மீன்வளத்துறையிடமிருந்து ஆட்சேபம் இன்மைச் சான்று (என்.ஓ.சி.) அளித்தால் பட்டா வழங்கத் தயார் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. அவ்வாறு கட்டித்தரப்படும் வீடுகளை 10 ஆண்டுகளுக்குப் பின் புனரமைத்து கட்டித்தர வேண்டும் என்ற விதியும் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால்,தமிழக கடலோர மாவட்டங்களில் பழைய வீடுகள் எதுவும் தற்போது புதுப்பித்து கட்டித்தரப்படவில்லை. ÷இதனால் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பல வீடுகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. வீடுகளின் கூரைகளில் இருந்து சிமெண்ட் கான்கிரீட் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த வீடுகளில் குடியிருப்போர் எப்போதும் அச்சத்துடனே நாள்களை கழிக்கிறார்கள்.
இரவு வேளைகளில் பலர் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களது வீடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.
சேதமடைந்த வீடுகளைக் கணக்கிட்டு அரசுக்குப் பரிந்துரை செய்து புதிய வீடுகள் கட்டித்தரும் முயற்சிகளும் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு மேலாகவே சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் தமிழக கடலோரக் கிராமங்களில் எந்த புதிய வீடுகளும் கட்டித்தரப்படவில்லை.
வீடில்லாத ஏழை மீனவர்கள் 3 சென்ட் நிலத்தை கொடுத்தால் புதிய வீடு கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி என்ன ஆனது? என்றும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகள், கட்டப்பட வேண்டிய வீடுகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து, அரசுக்கு அனுப்புவதில் அதிகாரிகள் தொடர்ந்து காட்டிவரும் அலட்சியத்தால் புதிய வீடுகள் கட்டப்படவில்லை.
ஆனால் இந்திரா குடியிருப்புத் திட்டம், ராஜீவ்காந்தி புனரமைப்புத் திட்டம், சுனாமி அவசர கால திட்டம் என்றெல்லாம் பல்வேறு திட்டங்களில் மீனவர்களுக்கு வீடுகள் கட்டத்தரப்படுவதால் சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படுவதில்லை என்றும், அத்திட்டத்தில் மீனவர்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய தேவையும் எழவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு க்கு பிறகு, இந்தத் திட்டங்களினால் கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவக் குடும்பங்கள் எல்லாம் பயனடைந்து மீனவர்கள் அனைவரும் சொகுசாக வாழ்வதாக அரசு கருதி அந்தத் திட்டத்தை அரசு கைவிட்டு விட்டது.
அதே நேரத்தில் பல ஆண்டுகளாகவே இத்திட்டத்தில் வீடுகள் கேட்டு பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் மனு செய்துள்ளனர்.
வீடில்லாத ஏழை மீனவர்களுக்கு வீடு வழங்கும் தொகுப்பு வீடுகள் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதுடன், சமத்துவபுரம் வீடுகளுக்கு ரூ. 1.90 லட்சம் வழங்குவதுபோல இத்தகைய மதிப்பீட்டிற்கு இணையாக , இந்திய நாட்டில் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் தற்சார்பு மீனவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி சிங்காரவேலர் தொகுப்பு வீடுகளுக்கும் தலா ரூ. 1.90 லட்சம் ஒதுக்கீடு செய்யது சிங்காரவேலர் இலவச தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்
தேர்தலுக்கு முன், கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும்., சட்டங்களையும் உடனே ரத்து செய்தால் மட்டுமே மீனவ மக்கள் தற்போது ஆளும் அரசுகளை மன்னிப்பார்கள். நீங்கள் அவ்வப்பொழுது போடும் அரசியல் நாடகங்களை இனியும் மீனவர்கள் நம்பத் தயாரில்லை. எங்கள் வயிறுகள் மீது கனத்த அடிகள் விழுந்து விட்டன. நாங்கள் அரசுகளின் துரோகங்களை மறக்கத் தயாரில்லை.
கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பாக மார்ச் மாதம் மீனவர் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
நன்றி,
இவண்,
ம.புஷ்பராயன்,
அமைப்பாளர்.
கடலோர மக்கள் கூட்டமைப்பு , தூத்துக்குடி.
No comments:
Post a Comment