Sunday, April 3, 2011

தமிழக மீனவர் தேர்தல் அறிக்கை வெளியீடு – 23.03.2011 ஊடகச் செய்தி

கடலோர மக்கள் கூட்டமைப்பு

எண்: 7, எஸ்.வி.எம். பெட்ரோல் நிலையம் (பின்புறம்)

வெளிப்பட்டணம், இராமநாதபுரம் – 623526.

தொலைபேசி: 04567 – 229072 மின்னஞ்சல்: cpfsouth@gmail.com. கைபேசி: 9442322393

23.03.2011

இராமநாதபுரம்.

தமிழக மீனவர் தேர்தல் அறிக்கை வெளியீடு 13.04.2011

ஊடகச் செய்தி

கடலோர மக்கள் கூட்டமைப்பின் சார்பாக கடந்த 16.03.2011 புதன் கிழமை அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மீனவர்களின் அரசியல் கோரிக்கைகள் அடங்கிய தமிழக மீனவர் தேர்தல் அறிக்கையானது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மக்கள் போராளி மானமிகு.மேதா பட்கர் அவர்களால் சென்னை ஊடகவியலாளர்கள் அரங்கத்தில் (Chennai Press Club) வைத்து வெளியிடப்பட்டது. இன்று கடலோர மக்கள் கூட்டமைப்பின் முக்கிய வடக்கு மாவட்டமான இராமநாதபுரத்தில் வைத்து தமிழக மீனவர் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

தமிழகத்தில் 15 இலட்சத்திற்கும் மேலான மீனவர்கள் தங்களின் உழைப்பால்,தங்களின் உயிரை நாள்தோறும் பணயம் வைத்து, நாள்தோறும் இந்திய நாட்டிற்கு அந்நிய செலாவணியையும், இந்திய மக்களுக்கு புரதச் சத்து நிறைந்த ஆரோக்கியமான மீன் உணவையும் பல்லாண்டுகளாக வழங்கி வருகிறோம். இந்த நாட்டின் கடலோர எல்லைகளை பாரம்பரியமாக எந்த ஊதியம் இல்லாமல், இரவும் பகலும் கண் விழித்து பாதுகாத்து வருகிறோம்.இயற்கையை எதிர்த்து, கடல் அலைகளோடு போராடி, ஆழிப்பேரலைகளை எல்லாம் எதிர் கொண்டு, எவருக்கும் மனதளவில் கூட ஒரு தீங்கு நினைக்காமல், நாட்டு மக்களுக்கு நன்மை மட்டுமே செய்து கொண்டு வருகிறோம்.எங்களின் வாழ்க்கை முழுவதும் கடலோடும்,கடற்கரையோடும் முடங்கிப் போய்விடுகிறது. எங்களுக்கு எங்களது ஊர் எல்லைகளைத் தாண்டி இருக்கும் கரைப் பகுதிகளில்,உள்நாட்டுப் பகுதிகளில் (PLAINS) நடப்பது எதுவும் எங்களுக்கு தெரிவதில்லை.நாங்கள் எல்லாமே நன்றாகவே இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தோம்.ஆனால் கரையில் நடக்கும் அரசியல் முடிவுகள், சதித் திட்டங்கள்,தொழில் போட்டிகள் எல்லாம் தமிழக மீனவர்களை கடலில் இருந்தும்,கடற்கரையில் இருந்தும்,கடல் மீன்பிடித் தொழிலில் இருந்தும் விரட்டுவதற்கான மாபெரும் சதியாகவே இருப்பதை உணர்ந்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். இவைகள் எங்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் திட்டமிட்ட சதியாகவும் இருப்பதை , எங்களை அடியோடு அழிக்க நடக்க நடைபெறும் சதியே என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறோம்.

இதன் பின்னணியில் அலசும் போது, மீனவர்கள் இதுவரை கிள்ளுக்கீரையாகவும், ஓட்டு வங்கியாகவும், இலவசங்களுக்கு மயங்கிப் போகும் செம்மறியாட்டுக் கூட்டம் என்று அரசியல் கட்சிகள் முடிவு கட்டிவிட்டது தெரிய வந்தது. நாங்கள் எவர்க்கும் துரோகம் செய்ய நினைக்காத போது,அரசியல் கட்சிகளும், நாட்டின் ஆளும் வர்க்கங்களும், அதிகார வர்க்கங்களும், முதலாளிகளும் கைகோர்த்துக் கொண்டு இந்த நாட்டில் இருக்கும் பாரம்பரிய மீனவர்களை கடலில் இருந்தும்,கடற்கரைகளில் இருந்தும்,கடல் மீன்பிடித்தொழிலில் இருந்தும் விரட்டி அடிப்பதற்கான அனைத்து சதிகளையும் அரங்கேற்றி விட்டனர் என்பது நினைத்து மிகவும் வருத்தம் அடைகிறோம். எங்கள் வாழ்வாதாரங்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தாக்குதல்களைப் பார்க்கும் போது, எங்களை வாழ்வின் விளிம்பிற்கே தள்ளிவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்டோம். இனியும், எங்களுக்கு அரசியல் கட்சிகளின் இலவசங்களால் எந்தப் பயனும் இல்லை. இலவசங்களால் எங்களுக்கு வாழ்வு கிடைக்கப் போவதில்லை.

இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மீண்டும் தி.மு.க கட்சியின் தேர்தல் அறிக்கை 2011, மற்றும் வெளியிடப்பட்டிருக்கும் இன்னும் பல அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இலவசங்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை வெளியிடுவது என்பது, வாழ்க்கை பறிக்கப்பட்ட உழைக்கும் மக்களாகிய மீனவர்களின் வாழ்வாதார சிக்கல்களுக்கு எந்த தீர்வுகளையும் கொடுக்கப்போவதில்லை. ஆகவே, நாங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கும் அனைத்து ஓட்டு மைய கவர்ச்சி இலவசங்கள் அனைத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். வெறுக்கிறோம்.

எங்களது தேவை எல்லாம் எங்கள் வாழ்வாதாரங்கள், இருப்பிடங்கள், மீன் பிடித் தளங்கள் மீது, எங்களின் மடி மீது தொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து திட்டங்களும், அரசின் கொள்கை முடிவுகளும் ,அரசாணைகளும், முதலீடுகளும், ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் உடனே கைவிடப்பட வேண்டும் என்பதே எங்களின் முழு எதிர்பார்ப்பு. அதுவே, அரசியல் கட்சிகளிடம் நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக எதிர்ப்பார்ப்பது. இந்தக் கடல் பரப்புகளில், இந்தத் தீவுகளில் எங்களின் பாரம்பரிய உரிமைகள் நிலை நாட்டப்பட தேர்தல் வாக்குறுதி வெளியிட வேண்டும். எங்கள் கடற்கரைப் பகுதிகளில் அரங்கேறிவரும் கட்டுக்கடங்காத வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட தேர்தல் வாக்குறுதி வெளியிடப் படவேண்டும். கடல் வளங்கள் மாசடையாமல் பாதுகாக்க தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படவேண்டும்.

ஆகவே, கடல் மேலாண்மை ,கடல் வளப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு ,மீன் பிடித் தொழில் வளர்ச்சி, மீன் விற்பனை, கடலோர வளர்ச்சி, நாடுகளின் கடல் எல்லைகளில் மீன் பிடித்தல் போன்ற ஆணையங்களில் அரசியல் கட்சிகள் தலையீடு இல்லாத மீனவர் சங்கள், மீனவர் அமைப்புகள் அங்கம் வகிக்கும் வகையில் பிரநிதித்துவம் அளிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, மதிக்கப்பட்டு, மீனவர் உயிர் மற்றும் வாழ்வுரிமைகள் பாதுகாக்க உத்திரவாதம் அளிக்கும் அரசியல் வாக்குறுதிகளே எங்களுக்குத் தேவை. இலவச, கவர்ச்சி அறிவிப்புகள் அல்லஎன்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம். இலவசங்களால் மக்களின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதுவும் உழைக்கும் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளே எங்களிடம் ஓட்டு கேட்டு வருமுன், எங்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து , மதித்து வாக்கு கேட்க முயற்சி எடுங்கள். உங்களது கவர்ச்சி ஆரவாரங்களை நாங்கள் அறுவருக்கிறோம். அவற்றில் எங்களுக்கு உடன்பாடில்லை.

எங்களின் உடனடித் தேவைகள் என்பது

மன்னார் வளைகுடாவின் 21 தீவுகளில் எங்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமைகளை நாங்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை . மீனவப் பெண்கள் கடலில் பாசி எடுக்கும் பாரம்பரிய உரிமையை நாங்கள் இழக்கத் தயாரில்லை. கடல் வளங்களைப் பாதுகாக்காமல், தீவுகளில் சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க நாங்கள் ஒரு போதும் அனுமதியோம். கிழக்குக் கடற்கரைச் சாலையை சுற்றுலாத் திட்டங்களுக்கும், நாசகாரத் தொழில் திட்டங்களுக்கும் அனுமதிக்கும் நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டும். தமிழகக் கடலில் மீன் பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினால் தாக்கப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க, கட்சத்தீவு பகுதிகளில் தமிழக மீனவர்களும் , இலங்கை மீனவர்களும் சுதந்திரமாக மீன் பிடிக்க எங்களுக்கு உத்திரவாதம் தர முடியுமா? எல்லை தாண்டி மீன் பிடிக்கும் உரிமையைச் சட்டமாக்கி, அதற்கு பாதுகாப்பு கொடுக்க முடியுமா?

இவைகள் எங்களின் உடனடித் தேவைகள். இவைகளுக்கு உங்களின் பதில் என்ன? நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்க ,உங்கள் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால் , உங்களின் முதல் கையெழுத்துக்கள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற கையொப்பமிட இன்று எங்களுக்கு உத்திரவாதம் தருமா?

இதுவரையிலும் முதலாளிகளிடம் மட்டுமே கருத்து கேட்டு,அவர்களின் ஆலோசனைகளுக்கு மட்டும் செவிமடுத்து,அவர்களின் மனம் வருந்தாமல் , அவர்களின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் முடிவுகளை எடுத்து வந்த அரசியல் கட்சிகளே ! உழைக்கும் மக்கள் நலன் காக்கும் வகையில் , இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் ஆட்சி நடத்த சிந்தியுங்கள்! ஆட்சி நடத்த வாருங்கள்! ஓட்டு கேட்க வாருங்கள்.!

கடல் கப்பல்களையும் தாங்கும் ! அதே கடல், கப்பல்களையும் கவிழ்க்கும் என்ற இயற்கை நியதியை நினைவு படுத்த விரும்புகிறோம்!

நன்றி.

இப்படிக்கு,

பால்சாமி.

தலைவர் ,

கடலோர மக்கள் கூட்டமைப்பு.

இராமநாதபுரம் மீன் பிடித் தொழிலாளர் யூனியன் .

No comments:

Post a Comment