Sunday, April 3, 2011

“இலவசத்” தேர்தல் அறிக்கைகள் ? - 28.03.2011

கடலோர மக்கள் கூட்டமைப்பு

11/106 B, கேப்டன் குடியிருப்பு,

ஆரோக்கியபுரம் முதன்மைச் சாலை

தூத்துக்குடி-628002

தொலைபேசி : 04612361699 மின் அஞ்சல்: cpfsouth@gmail.com. கைபேசி: 9842154073

நாள்: 28.03.2011

ஊடகச் செய்தி

“இலவசத்” தேர்தல் அறிக்கைகள் ?

தமிழக அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளைப் படிக்கும் போது , தமிழக அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு பன்னாட்டு கம்பெனி போல (CORPORATE HOUSE) செயல்படுவது போலவும்,அந்த கார்பரேட் கம்பெனிகள் தங்கள் இலாபத்தில் இருந்து சமூக சேவை செய்யும் திட்டமான CSR (CORPORATE SOCIAL RESPONSIBILITY) திட்டம் போல தங்களது கொள்ளையை மறைக்க ,தங்களின் மாசுபடுத்தும் செயல்பாடுகளை நியாயப்பபடுத்த, இயற்கை விரோத செயல்களை சரிசெய்ய,வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் இருந்து விடுபட,மக்களை தொடர்ந்து ஏமாற்ற, இந்த கார்பரேட் திட்டம் ஒரு வடிகாலாக இருப்பது போல, இலவசங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள் .

இவர்கள் மக்களுக்கான, மக்கள் ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது கார்பரேட் கம்பெனிகளின் திட்டங்களை முன்மொழிந்து, அவற்றிற்கு சிபாரிசு செய்து, அதை தங்கள் கட்சிகளின்,தங்கள் அரசின் கொள்கை திட்டமாக்கி, அவைகளை மட்டுமே நடைமுறைப்படுத்தும்,அவர்களின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் கட்சிகளாக,அரசுகளாக, அவர்களின் ஊது குழல்களாக செயல் படும் முறைதான் மக்கள் ஆட்சியா? இது தான் சனநாயகமா? இது தான் அரசியல் சாசனத்தின் உள்ளடக்கமா? இதற்குப் பெயர் தான் பாட்டாளியின் நண்பனா?

கட்சிகள் வெளிப்படையாகவே கம்பெனிகளுக்கு சார்பாக செயல்படுவது என்பது ஒரு புறம். இது தவிர, தேர்தல் நேரங்களில் உழைக்கும் மக்களின் ஒட்டுக்களை பெற எண்ணிலடங்காத இலவசங்களை அறிவித்து ,ஏழைகளின் மனம் குளிர வைக்கும் முயற்சி கூட அடிப்படையில் (அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து இலவசங்களிலும்,நலத்திட்டங்களிலும் உள்ளுக்குள்ளே ஒளிந்திருப்பது) 100 விழுக்காடு பன்னாட்டுக் கம்பெனிகளின் திட்டங்களே, நலன்களே என்பது மிகவும் வேதனையான உண்மை.

கடலோர மக்கள் கூட்டமைப்பின் சார்பாக கடந்த 16.03.2011 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட மீனவர் தேர்தல் அறிக்கையிலே, இலவசங்களால் மீனவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடாது மீனவர்களின் வாழ்வாதாரங்கள், வாழுமிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,கடல் வளங்கள் பாதுகாக்கபடவேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை கோரிக்கை. ஆனால், அனைத்து தேர்தல் அறிக்கைகளும் எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருகின்றன. இது தவிர, இந்த தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்டிருக்கும் நலத்திட்ட வாக்குறுதிகள் மீனவர்களின் வாழ்வாதாரங்களை இன்னும் அதிகமாக சீரழிப்பதற்கான நாசகாரத் திட்டங்களே என்பதை அறியும் போது, இவைகள் எங்கள் மீது பல சுனாமிகள் வந்து தாக்குவதுபோல இருக்கின்றன.இவைகள்,கடற்கரையை தொழில்மயமாக மாற்றவும், கடல் வளங்களை அழிக்கும் திட்டங்கள், மீன்பிடித்தல் , மீன் பதப்படுத்துதல், மீன் விற்பனை தொழிலை தனியார்மயமாகும் திட்டங்களே.

மீனவர் உயிர் மற்றும் வாழ்வுரிமைகள் பாதுகாக்க உத்திரவாதம் அளிக்கும் அரசியல் வாக்குறுதிகளே எங்களுக்குத் தேவை. இலவசக் கவர்ச்சி அறிவிப்புகள் அல்லஎன்பதை அழுத்தமாக பதிவு செய்தும் ,அரசியல் கட்சிகள் எங்களது தார்மீகக் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி விட்டு,மீனவர்களை ஏமாற்ற , ஓட்டுகள் பெற மீனவர் விரோத நலத்திட்ட வாக்குறுதிகளை அறிவித்து மீனவ நண்பன் போல நாடகமாடுகின்றன. மொத்தத்தில், இவைகள் அனைத்தும் மீனவர்களுக்கு உலை வைக்கும் திட்டங்களே!

பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்காக உழைப்பதற்கு உனக்கு நான் ஒன்றும் சளைத்தவன் அல்லன் என்று ஒருவரை ஒருவர் விஞ்சும் விதமாக அமைந்துள்ளது.

கட்சிகள் மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களே மிகவும் குறைவு , அதிலும்,

குறிப்பாக , அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள

13 குளிர் சாதன மீன் பூங்காக்கள் (FISH PROCESSING PARKS), ,பூங்காக்கள் என்றாலே பூர்வீகக் குடிகளின் வாழ்வுரிமையைப் பறிப்பதாகும். இது அதிக முதலீடுகளை எதிர்பார்க்கும் திட்டம். தனியார்களை ஊக்குவிக்கும் திட்டம்.இது சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றது. இதிலே,பாரம்பரிய மீனவர்களுக்கு எந்த இடமும் இல்லை. இது, கடற்கரைகளில் தற்போது மிஞ்சி இருக்கும் கடலோர நிலங்களை அபகரிக்கும் திட்டம்.இது மீனவப் பெண்களின் உழைப்பை சுரண்டும் திட்டம்.

தற்போது மீன் பிடித்தலில் இருக்கிற இயந்திரப் படகுகளையே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கும் வேளையில் இயந்திர மீன்பிடிப் படகுகள் வாங்க மானியம் கொடுப்பது என்பது மீனவர்களின் நடைமுறைப் பிரச்சனை பற்றி தெரியாமல் இருப்பதற்கு சமம். மீனவர்களின் கோரிக்கை என்பது ஆழ்கடல் மீன் பிடித்தலுக்கு , பாரம்பரிய மீனவர்களை தயார் படுத்த வேண்டும் என்பதே ! முராரி கமிட்டியின் 21 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே மீனவர்களின் நெடுநாளையக் கோரிக்கை . இது தவிர்த்த மற்ற எந்தக் திட்டங்களும் மீனவர்களுக்கு எதிரானதே !

12 கடல் மைல் தூரம் வரை பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை இருந்தும், அதுவே , தடை செய்யப்படும் போது, 12 மைல் கடந்து மீன்பிடித்தால் கைது செய்து சித்திரவதை செய்யப்படும் போது ,பாரம்பரிய மீனவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்றுமதி நோக்கோடு நடுக்கடல் மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் ஏற்றுமதி கப்பல் பூங்கா அமைக்கப்படும் என்று சொல்லுவது மீனவர்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் திட்டம். அது மட்டுமல்லாது, கடல் மீன் பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா 2009ன் அடிநாதமாக விளங்கும் ஆசியான் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம். இது கடலிலே, தனியார் மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களே மீன்களைப் பிடித்து ,அதே கப்பல்களில் அவற்றை பதப்படுத்தி , கடல் வளங்களை அழித்து , மாசுபடுத்தி, வரி ஏய்ப்பு செய்யும் திட்டம். இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமானத் திட்டம். இதிலே, பாரம்பரிய மீனவனுக்கு எந்த இடமும் இல்லை, வேலை வாய்ப்பும் இல்லை.

கப்பல் கட்டும் துறையில் 10000 கோடி அன்னிய முதலீடு, கப்பல் கட்டும் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக மாற்றுதல். இதனால், மீன்பிடித் தளங்கள் அழியும் அபாயம் உள்ளது. கடலை மாசுபடுத்தும் திட்டம்.தனியார் கம்பெனிகள் கொள்ளை இலாபம் அடையும் திட்டம். இதனால் கப்பல் கட்டுதல் மட்டுமல்லாது, காலப்போக்கில்,கிடப்பில் போடப்பட்டுள்ள கப்பல் உடைத்தல் திட்டங்களும் அரங்கேறும். மொத்தத்தில் கடற்கரை நச்சுக் கடற்கரையாக , நச்சுக் கடலாக மாற வாய்புள்ளது. கப்பல் போக்குவரத்து அதிகமாகி அரிய வகை உயிரினங்கள் அழிந்து போய்விடும்.கடலில் வணிகத் திட்டங்களே நடைமுறையில் இருக்கும்.

கிழக்குக் கடற்கரை சாலையை அமைக்க பலமான எதிர்ப்பு மீனவர்களிடமிருந்தும் , சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம், கடல் உயிர்கள் காக்கும் அறிஞர்களிடம் இருந்தும் கிளம்பியது. நீதி மன்றம் தலையிட்டு அதை முறைப்படுத்த ஆணை பிறப்பித்தது தற்போது இருக்கும் சாலையே மீனவர்களுக்குப் போதுமானது.கடல் வளங்களுக்கும் பிரச்சனையில்லாதது. அதை மீண்டும் விரிவாக்கம் செய்யப்படும் என்று சொல்லுவது,இதை வணிகமயத் திட்டங்களுக்கும்.,சுற்றுலாவுக்கும் தாரை வார்க்கும் செயல். இது கடற்கரை சார்ந்து இனப் பெருக்கம் செய்யும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடியும். தமிழகம் ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்று அறிவித்திருப்பது இதற்கு இன்னும் வலு சேர்ப்பதாக உள்ளது.

காற்றாலை மின்சாரம் 30 விழுக்காடாகவும், அணு சக்தி மின்சாரம் 25 விழுக்காடாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது, நமது கட்சிகள் மனித உயிர்களை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பது புரியும். ஜப்பான் அணு உலை விபத்திற்குப் பிறகும். தொடர்ந்து பரவி அச்சுறுத்தும் கதிர் வீச்சு ஆபத்திற்குப் பிறகும் இன்னும் பாடம் கற்க தயாரில்லை என்று மமதை கொண்டு அலைவது தெரிகிறது . தமிழகத்தை அழிக்க ஒரு கல்பாக்கம் , ஒரு கூடங்குளம் போதாதா? மனித குலத்தை அழிக்கும் இந்த ஆபத்தான திட்டங்கள் இன்னும் வேண்டுமா ?

காற்றாலை மின்சாரம் என்பதை நாம் ஆதரித்தாலும், அவைகளை கடலோரகளிலும் மீனவர் குடியிருப்புகளின் அருகிலும், ஏன் இன்னும் சொல்லப்போனால், அய்ரோப்பா போன்ற நாடுகளில் கடலுக்குள் நிறுவும் திட்டங்களிலும் எங்களுக்கு உடன்பாடில்லை. காற்றாலை மின் உற்பத்தி என்பது சில பருவ காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. அதுவும் பெரிய முதலீடுகளை நம்பித்தான் அமைக்கப்படுகின்றன. இதிலே, இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் பயன் பெறப்போவதில்லை. இவைகள் எல்லாம் தனியாருக்கு தேவையானத் திட்டம் .இதற்காக மீனவர்கள் , விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரங்களை, விளைநிலங்களை இழந்துதான் மின் சாரம் தயாரிக்க வேண்டுமா? இது தவிர 2013 ஆம் ஆண்டுக்குள் பத்து 300MW சூரிய சக்தி பூங்காக்கள் அமைத்து 3000 MW மின் உற்பத்தி செய்யும் திட்டத்திலும் நமக்கு உடன்பாடில்லை. சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது மிகவும் நல்ல திட்டம் . இயற்கைக்கு மிகவும் உகந்த திட்டம் . ஆனால் , சூரிய சக்தி பூங்காக்கள் அமைத்தால் பொது மக்களுக்கு மின்சாரம் கிடைக்காது.மின் பூங்காங்காக்கள் மின் வெட்டை மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக , மழை நீர் சேகரிப்பு திட்டம் போல ஒவ்வொரு வீட்டின் மேற்கூரையிலும் , எந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் , ஒரு வீட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய ,அதற்கு மானியம் வழங்குவது என்பது உன்ன்மையிலே சாலச் சிறந்தது. இதனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் , மிக்ஸி , கிரைண்டர் , மின் விசிறி எல்லாம் தங்குதடை இல்லாமல் வழங்கலாம், அவற்றை அனைத்து சாமானியனும் பயன்படுத்தலாம். வளர்ச்சியின் பயன்களை எந்தப் பாமரனும் அனுபவிக்கலாம்.

அது போலத்தான்,திமுக கட்சியின் பல நலத்திட்டங்களும்.மேற் சொன்ன அனைத்து திட்டங்களையும் அவர்கள் அறிவிக்காமலேயே செயல்படுத்தி வருபவர்கள் . ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் என்று அறிவித்து அதில் தன்னுடைய குடும்பத்தினர் நடத்தும் ஸ்டார் காப்பீட்டுத் திட்டதையோ அல்லது வேறு ஒரு தனியார் அல்லது பன்னாட்டுக் கம்பெனி நடத்தும் காப்பீட்டுத் திட்டதையோ நடைமுறைப் படுத்துவார்கள்.

ஆகவே, எல்லாக் கட்சிகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பன்னாட்டு கம்பெனிகளின் பிரதிநிதிகளாகவே செயல்பட்டு மீனவர்களை அழிக்கத் திட்டமிட்டுள்ளனர். உழைக்கும் மீனவன் தான் விழிப்படைய வேண்டும். பசப்பு வார்த்தைகளில் மயங்கி விடாமல்,கவர்ச்சியில், நகைச்சுவையில் ,தமிழ் நடையில் ஏமாந்து விடாமல் விழித்துக்கொள்ள வேண்டும்

.தேர்தல் வாக்குறுதிகளில் நாம் பெறுவதைக் காட்டிலும் ,நாம் இழப்பதற்கு அதிகம் உள்ளது ,

நன்றி

ம.புஷ்பராயன்

அமைப்பாளர்

கடலோர மக்கள் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment