கடலோர மக்கள் கூட்டமைப்பு
11/106 B, கேப்டன் குடியிருப்பு,
ஆரோக்கியபுரம் முதன்மைச் சாலை
தூத்துக்குடி-628002
தொலைபேசி : 04612361699 மின் அஞ்சல் cpfsouth@gmail.com. கைபேசி: 9842154073
நாள் - 03.05.2011
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி – 628008
பொருள் : கோஸ்டல் ஏனெர்ஜென் தனியார் அனல் மின் நிலையம் 2*800 MW அனல் மின் நிலையம் விரிவாக்கம் தொடர்பாக எமது கருத்துக்கள்
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,
வணக்கம்.
கடந்த மார்ச் மாதம் 19.03.2011 அன்று நடைபெற வேண்டி இருந்த இந்தக் கருத்துக் கேட்பு கூட்டம் , தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைகளை மேற்கோள் காட்டி , இந்த மாதிரியான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது . தேர்தல் நன்னடத்தை விதிகள் 13.05.2011 வரை நடைமுறையில் இருக்கும் போது, மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது மாவட்ட ஆட்சியரே தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்று கருதுகிறோம்.
கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தும் போது , நாளிதழ்களில் மட்டும் செய்தி வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழ் நாடு மாசுக் கட்டுப் பாடு வாரியத்தின் இணைய தளத்திலும் செய்தி வெளியிட வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 30.04.2011 வரை இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்து அதன் இணைய தளத்தில் எந்த செய்தி வெளியிடவில்லை. மே மாதம் 2ஆம் நாள் தான் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் . இது பெரிய மோசடி வேலை. தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கோஸ்டல் ஏனெர்ஜென் நிறுவனத்திற்காக அவசரப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னரே,மக்களுக்கு செய்திகளை மறைத்து வேலை செய்வது என்பது ஏதோ மோசடி நடக்கிறது என்ற ஐயப்பாட்டை
மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு , அடுத்த வாரம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தலாமே ?!
மீனவர்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் மீண்டும் கடற்கரை சார்ந்து வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் போக்கு , மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது மீனவர்கள் மத்தியில் கடும் விளைவுகளை, மாவட்ட நிர்வாகத்தின் மீது , அரசின் மீது கடும் அதிர்ப்த்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மீனவர்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவதற்கான வேலையை அரசு தூண்டுகிறது என்பது மிகவும் வேதனையான, ஆபத்தான செய்தி.
ஏற்கெனவே , அனுமதிக்கப்பட்ட 3*350 MW திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கான கட்டுமானப்பணிகளே இன்னும் சரியாக தொடங்காத போது ,அதை இயக்கி ,அதன் இயக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்களை , சுற்றுச் சூழல் தாக்கத்தை உணரும் முன்னரே, இப்படி அவசரப்பட்டு , மீண்டும் அதிக சக்தி கொண்ட , மேலும் இரு மடங்கு திறன் கொண்ட அனல் மின் நிலைய கட்டு மானப் பணிகளுக்கு அனுமதி கேட்பது என்பது , இந்த ஆலை நிர்வாகத்தின் முதலீடுகளை சந்தேகப்பட வைக்கிறது. இந்த அவசர நடவடிக்கையின் உள் நோக்கம் என்ன? என்று சந்தேகப்பட வைக்கிறது.
ஏற்கெனவே , இறால் பண்ணைகளினால் குடிநீர் ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு , நிலத்தடிநீர், குளங்கள் மாசுபட்டு தண்ணீருக்கு திண்டாடும் பட்டிணமருதூர், தருவைக்குளம் , சிப்பிக்குளம் , கீழவைப்பார் , வேப்பலோடை ,அரசரடி , ,மேல்மருதூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை இந்த ஆலையின் கடல் நீரை குடிநீராக்கும் ததிட்டத்தின் கழிவுகள் முற்றிலும் அழித்துவிடும். இதுதான் இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களின் தமிழக அனுபவம். நிலத்தை மட்டும்மல்லாது , மன்னார் வளைகுடாவின் பவளத் தீவு கூட்டத்தை , கடல் உயிரினங்களை முற்றிலும் அழித்து விடும். காற்று , நிலம், நீர், கடல் எல்லாம் நச்சாக்கிபோகும்.மக்களுக்கு குடிநீர் தருவதாக மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனம் , குடிநீர்தருவதாக சொல்லப்படும் கிராம மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன?
மத்திய அரசிடம் இருந்து சுற்றுச் சூழல் அனுமதி வாங்கும் முன்னரே , ITT கார்பரேசன் என்ற நிறுவனத்திடம் 51.78 கோடி முதலீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடுவது அதை ஊடகங்களுக்கு வெளியிடுவது என்பது சுற்றுச் சூழல் அனுமதி கோரும் விதிமுறைகளுக்கு எதிரானது. இதைக் காரணம் காட்டியே இந்த நிறுவனத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
ஆகவே, இந்தக் காரணங்களை மேற்கோள் காட்டி , இந்த பிரச்சனைகளுக்கு முறையான பதிலை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கும் வரை இந்த ஆலைக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு,
ம.புஷ்பராயன் ,அமைப்பாளர் ,கடலோர மக்கள் கூட்டமைப்பு.
No comments:
Post a Comment