Sunday, December 12, 2010

மீனவர் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி


11 Dec 2010 10:46:25 AM IST

மீனவர் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி

தூத்துக்குடி, டிச. 10: உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை மீனவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி மனித சங்கிலி நடைபெற்றது.
ஆண்டுதோறும் டிச.10-ம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் மீனவர் உரிமைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் இந்திரா காந்தி சிலையில் இருந்து, மீன்பிடித் துறைமுகம் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ம. புஷ்பராயன் தலைமை வகித்தார்.
பொறுப்பாளர் அருள்தந்தை ராயப்பன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை அமைப்பின் இயக்குநர் அருள்தந்தை விக்டர் லோபோ முன்னிலை வகித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கரங்கள் பெண்கள் கூட்டமைப்பு, கடலோர கிராம மீனவ அமைப்புகள், நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர் சங்கங்கள், கரைவலை மீனவர் சங்கம், விசைப்படகுத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊர் கமிட்டி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை 2010-ஐ மத்திய அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.
மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட முராரி கமிட்டியின் 21 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மன்னார் வளைகுடாவின் 21 தீவுகளில் மீன்பிடிக்கும் உரிமையைப் பறிக்கும் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். கடல் அரிப்பிலிருந்து மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
மீனவர்களின் கருத்துக்களை அலட்சியம் செய்து கடற்கரை ஓரங்களில் கட்டப்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள், அணு உலை பணிகளை உடனே நிறுத்தக் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment