Wednesday, December 22, 2010

மீனவர்களுக்கு மழை வெள்ள இழப்பீடும் இல்லை! கடலோர மக்கள் கூட்டமைப்பு குற்றசாட்டு!!


மீனவர்களுக்கு மழை வெள்ள இழப்பீடும் இல்லை! கடலோர மக்கள் கூட்டமைப்பு குற்றசாட்டு!!

ஆர்.முருகன் | செவ்வாய் 21, டிசம்பர் 2010 10:55:37 AM (IST)

மழை வெள்ள இழப்பீடு, குடிசை மற்றும் ஓடு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றில் மீனவர்களை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக கடலோர மக்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை கிராமங்களில் மீன்வளத்துறை மூலம் சிங்காரவேலர் மீனவர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் பழுதடைந்து உயிருக்கு உலைவைக்கும் அளவிற்கு சிதலமடைந்து காணப்படுகின்றன.

இந்த வீடுகளை பராமரிக்கவோ, பழுது நீக்கவோ, இந்த வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றவோ கடந்த 6 ஆண்டுகளாக எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. சுனாமி குடியிருப்புகள் திட்டம் ஏற்க்கனவே முடிந்துவிட்டது, ராஜீவ் காந்தி புனரமைப்புத் திட்டத்திலும் சீரமைக்க இந்த வீடுகளை பயனாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. கலைஞர் வீட்டு வசதி திட்டமும் மீனவர்களுக்கு கிடையாது என்று அரசும், மாவட்ட நிர்வாகமும் கைவிரிக்கிறது.

கடந்த 6 ஆண்டுகளாக மறக்கப்பட்ட சிங்காரவேலர் குடியிருப்புத் திட்டம் கைவிடப்பட்ட ஒரு திட்டமாகவே இருந்து வருகிறது. ஆகவே செத்துப்போன சிங்காரவேலர் மீனவர் தொகுப்பு வீடு திட்டத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து மீனவர்களுக்கு காங்கிரீட் வீடுகளை சமத்துவபுரத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் மதிப்பீட்டிலேயே (1.90 இலட்சம்), சிங்காரவேலர் தொகுப்பு வீடுகளை கட்டித்தந்து மீனவர்களை மாண்போடு நடத்த வேண்டுகிறோம்.

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தனித்தனியே வெள்ளச் சேதங்களை மதிப்பீடு செய்ய வந்தபோது மீனவர்களை முற்றிலும் புறக்கணித்தனர், மீனவர்களுக்கு பருவமழை வெள்ள பாதிப்பினால் இதுநாள் வரையிலும் மத்திய, மாநில அரசுகள் எந்த இழப்பீடும் வழங்கியதில்லை, அதற்கான எந்த திட்டமும் இல்லை.

மீனவர்கள் சந்திக்கும் புயல், வெள்ளம், சூறாவளி, கடல் அடி, கடல் அரிப்பு, கடலில் காணாமல் போதல் போன்ற இயற்கை பேரிடர்களில் மீனவர்களுக்கு, மீன் பிடி படகுகளுக்கு, மீன் பிடி சாதனங்களுக்கு இழப்பீடு வழங்க, மீனவர் விபத்து பேரிடர் கொள்கை ஒன்றை வகுத்து, அதன் அடிப்படையில் பேரிடர் காலங்களில், விவசாயிகளைப்போல், மீனவர்களுக்கு உயிர், உடைமைகள் மற்றும் தொழில் பாதிப்புகளுக்கு (மீனவப் பெண்கள் உட்பட) ஏற்ப உடனடி பேரிடர் நிவாரணம் வழங்க வழி செய்ய வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி வீசிய சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, சேதமடைந்த, (மீன்வளத்துறையின் மதிப்பீட்டின் படி ) 339 படகுகளுக்கு சட்டசபையில் (ஏப்ரல் 27 ஆம் நாள் ) அறிவித்தபடி ரூபாய் 51.90 இலட்சத்தை இனியும் காலம் தாழ்த்தாது உடனே வழங்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment