Wednesday, January 5, 2011

மீனவர் குறை தீர்க்கும் நாள் – 07.01.2011 நன்றி!

கடலோர மக்கள் கூட்டமைப்பு

11/106 B, கேப்டன் குடியிருப்பு,

ஆரோக்கியபுரம் முதன்மைச் சாலை

தூத்துக்குடி-628002

தொலைபேசி :04612361699 மின் அஞ்சல் cpfsouth@gmail.com. கைபேசி: 9842154073

நாள்: 04.01.2011

ஊடகச் செய்தி

மீனவர் குறை தீர்க்கும் நாள் 07.01.2011

நன்றி!

கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் 6 ஆம் நாள் அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் தமிழகத்தின் மற்ற கடற்கரை மாவட்டங்களில் நடைமுறையில் இருப்பது போல மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க மீனவர்களுக்கென்று தனியாக மீனவர் குறை தீர்க்கும் நாள் ஒன்றை ஏற்படுத்தி மீனவர் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு. கோ. பிரகாஷ் அவர்கள் முகவரி இட்டு , அன்றைய நாளில் மாவட்ட ஆட்சியர் சார்பாக மக்கள் கோரிக்கைகளை பெற்ற மாவட்ட வருவாய் துறை அலுவலர் திரு. துரை இரவிச்சந்திரன் அவர்களிடம் கோரிக்கை மனு தூத்துக்குடி மாவட்ட கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பாக அளிக்கப்பட்டது. கோரிக்கையை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் துறை அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி நல்ல பதிலை தருவதாக வாக்கு கொடுத்தார்.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் பணி மாற்றல் செய்யப்பட்ட காரணத்தினால், புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றதும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் வளத்துறை உதவி இயக்குனர் (கடல் வளம்) திரு. அந்தோனி சேவியர் அவர்களிடம் இருந்து எங்களது மனுவிற்கு பதில் மடல் ஒன்று வந்தது.

புதிய மாவட்ட ஆட்சியர் திரு C. N. மகேஷ்வரன் அவர்கள் பொறுப்பு ஏற்றதுடன்,மீன் வளத்துறை சார்பாக நினைவூட்டப்பட்டு, பிறந்திருக்கின்ற ஆங்கிலப் புத்தாண்டு 2011 முதல் மாதந்தோரும் முதல் வெள்ளிக் கிழமை அன்று தூத்துக்குடி நகரின் முதன்மையான, பழமையான தொழிலான மீன்பிடித்தொழில் செய்து வரும் முத்து நகர் மீனவர்களின் குறைகளை போக்க மீனவர் குறை தீர்க்கும் நாள் ஒன்றை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

உழைக்கும் மீனவர்கள் இது நாள் வரையிலும் பாரம்பரியமாக தங்களின் குறைகளை தங்களுக்குள் பேசி முடிப்பதும், முடியாது போனால் தாங்கள் சார்ந்திருக்கும் மதத் தலைவர்களை அணுகி பேசி முடிப்பதும் தான் வழக்கமாக இருந்தது. இன்றைய தினத்தில் , உலகமயமாதல் சூழ்நிலையில் வழக்கமாகாக பேசி தீர்ப்பதுபோல் பேசி தீர்க்க முடியாத சில சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டன. வளர்ச்சியின் தாக்கங்கள் கடல் வளங்களை, மீனவர்களின்வாழ்வாதாரங்களை, மீனவர்களின் பொருளாதாரத்தை, மீனவர்களின் உடல் நலத்தை பெரிதும் பாதிப்படைய, நலிவடையச் செய்து விட்டன. மீனவர்களின் தற்சார்பு பறிக்கப்பட்டு விட்ட நிலையில் , மீனவர்களின் உண்மையான பிரச்சனைகளை கேட்டறிய, எடுத்து சொல்ல, ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு போக எந்த விதமான வழிமுறைகள் எதுவும் மீனவர்களுக்கு இதுவரை இருந்தது இல்லை. ஊடகங்கள் மட்டுமே மீனவர்களுக்கு உதவியாக இருந்தன.ஆகவே, மீனவர்கள் அரசிடம் நேரடியாக எடுத்து சொல்ல இப்போதுதான் வழி பிறந்திருக்கிறது. மீனவர்கள் பேசினால் காதை பொத்திக்கொண்டு, அதை அலட்சியம் செய்யும் , அதை கணக்கில் எடுக்காத சூழ்நிலைதான் இது நாள் வரை இருந்து வந்தது. இனிமேலாவது , இந்த நிலை மாறும் எந்த நம்பிக்கையை ஏற்படுத்தி தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

மாதந்தோறும் நடக்கும் இந்த மீனவர் குறை தீர்க்கும் நாள் நிகழ்வுகள் ஏதோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஒரு மாதச் சடங்கு நிகழ்வாக இல்லாமல், மீனவர்களின் உண்மையான பிரச்சனைகளை உணர்வுப் பூர்வமான முறையில் கண் கொண்டு பார்க்கவும், காது கொடுத்துக் கேட்கவும், இந்த உழைக்கும் மீனவர்களின் கோரிக்கைகளில் உண்மை இருப்பின், நியாயம் இருப்பின் அதை பரந்த மனத்தோடு பரிசீலித்து அவற்றை உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்கும் ஒரு மக்கள் அரங்கமாக, சனநாயக அமர்வாக மீனவர் குறை தீர்க்கும் நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்பதே கடலோர மக்கள் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு.

நன்றி.

இப்படிக்கு,

ம.புஷ்பராயன்,

அமைப்பாளர்.

கடலோர மக்கள் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment