Wednesday, January 5, 2011

மாதந்தோறும் குறைதீர் நாள் கூட்டம்

05 Jan 2011 01:01:45 PM IST

மாதந்தோறும் குறைதீர் நாள் கூட்டம்


தூத்துக்குடி, ஜன. 4: தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் மீனவர் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்ததற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு கடலோர மக்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இக்கூட்டமைப்பின் அமைப்பாளர் ம. புஷ்பராயன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் தமிழகத்தின் மற்ற கடற்கரை மாவட்டங்களில் நடைமுறையில் இருப்பது போல மீனவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க மீனவர்களுக்கென்று தனியாக மீனவர் குறைதீர் நாள் ஒன்றை ஏற்படுத்தி மீனவர் நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அன்றைய மாவட்ட ஆட்சியரிடம் கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பாக அளிக்கப்பட்டது.
புதிய மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் பொறுப்பேற்றதுடன்,மீன் வளத்துறை சார்பாக நினைவூட்டப்பட்டு, ஜனவரி 2011 முதல் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை மீனவர்களின் குறைகளைப் போக்க மீனவர் குறைதீர் நாள் ஒன்றை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
வளர்ச்சியின் தாக்கங்கள் கடல் வளங்களை, மீனவர்களின் வாழ்வாதாரங்களை, மீனவர்களின் பொருளாதாரத்தை, மீனவர்களின் உடல் நலத்தைப் பெரிதும் பாதிப்படைய, நலிவடையச் செய்து விட்டன. மீனவர்களின் தற்சார்பு பறிக்கப்பட்டு விட்ட நிலையில், மீனவர்களின் உண்மையான பிரச்னைகளை கேட்டறிய, எடுத்துச் சொல்ல, ஆட்சியாளர்களின் கவனத்துக் கொண்டு போக வழிமுறைகள் எதுவும் மீனவர்களுக்கு இதுவரை இருந்ததில்லை.
மீனவர்கள் தங்கள் குறைகளை அரசிடம் நேரடியாக எடுத்துச் சொல்ல இப்போதுதான் வழி பிறந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த மாவட்ட ஆட்சியருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்றார் அவர்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment