Tuesday, January 4, 2011

"மாதந்தோறும் மீனவர் குறைதீர் நாள் கூட்டம்'


04 Jan 2011 02:06:13 PM IST

"மாதந்தோறும் மீனவர் குறைதீர் நாள் கூட்டம்'


தூத்துக்குடி, ஜன. 3: தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீனவர் குறைதீர் நாள் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை மீனவர் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.7) நடைபெறுகிறது.
மற்ற கடலோர மாவட்டங்களில் இருப்பது போல தூத்துக்குடி மாவட்டத்திலும் மீனவர் குறைதீர் நாள் கூட்டம், மாதந்தோறும் நடத்த வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த மாதம் முதல் மீனவர் குறைதீர் நாள் கூட்டம், நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரால், பிரதிமாதம் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 7) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்கு கூடத்தில் காலை 11 மணிமுதல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் மாவட்ட அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் குறைகள் களையும் மனுக்கள் மீனவர்களிடம் இருந்து பெறப்பட்டு, தூத்துக்குடி மீன்வளத் துறை உதவி இயக்குநரால் (கடல்வளம்) பதிவு செய்யப்படும்.
பின்பு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அம்மனுக்கள் பிரித்து அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் பதில்கள் நேரடியாக அத்துறைகளால் மனுதாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், ஒரு நகல் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்டு, தொகுக்கப்பட்டு அடுத்து வரும் மீனவர் குறைதீர் நாள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு தேவை இருப்பின் விவாதிக்கப்படும்.
குறைகள் களையும் மனுக்கள் பெறப்பட்ட பின், பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் அவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். அப்பொருள் மீதானக் கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம்
அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment