Tuesday, September 14, 2010

உவரியில் கடல் அரிப்பால் சாலைகள், வீடுகள் சேதம் | 8.25 கோடி திட்டத்தை உடனே நிறைவேற்ற எம்.பி. மனு

14 Sep 2010 12:31:29 PM IST

உவரியில் கடல் அரிப்பால் சாலைகள், வீடுகள் சேதம் | 8.25 கோடி திட்டத்தை உடனே நிறைவேற்ற எம்.பி. மனு


திருநெல்வேலி, செப். 13: திருநெல்வேலி மாவட்டம், உவரியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்திருந்த அவர் ஆட்சியரை சந்தித்து மேற்கண்ட கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தார்.
பின்னர் ராமசுப்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உவரியில் கடல் அரிப்பால் சாலைகளும், வீடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள சுமார் 200 முதல் 300 வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு தடுப்புச்சுவர் கட்டவும், தூண்டில் வளைவு அமைக்கவும் | 8.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, அரசு விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இம் மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க | 46 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் நிதி கோரப்பட்டுள்ளது. அதுவும் பரிசீலனையில் உள்ளது.
கூத்தங்குளி மீனவர் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் விடுபட்ட 20 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இயற்கைப் பேரழிவு: தற்போது சுனாமி, வெள்ளம், பஞ்சம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டுமே மத்திய அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் சூறாவளிக் காற்றால் ஆண்டுதோறும் வாழைகள் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, இயற்கைப் பேரழிவுக்கான காரணிகளின் பட்டியலில் சூறாவளியையும் சேர்க்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அது அரசின் பரிசீலனையில் உள்ளது.
இம் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் | 50 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சூறாவளிக் காற்றால் சேதமடைந்துள்ளன.
அவற்றுக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதேபோல நெற்பயிரும் சேதமடைந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து எரிவாயுவை தூத்துக்குடிக்கு கொண்டு வரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இங்குள்ள தொழிற்சாலைகள் பெரிதும் பயன்பெறும். நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைய உள்ள தொழிற்சாலைகளுக்கு பயன் கிடைக்கும்.
புதிய கட்டடம்: பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் உள்ள மேம்பாலத்துக்கு செல்லப்பாண்டியன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான பெயர்ப்பலகை இன்னும் வைக்கப்படவில்லை. அதை வைக்க வேண்டும்.
நெல்லை பத்திரிகையாளர் மன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு என் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து | 6 லட்சமும், அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் | 4 லட்சமும் கொடுத்துள்ளோம். அப் பணியையும் விரைந்து மேற்கொள்ளும்படி ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன் என்றார் அவர்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment