Tuesday, September 14, 2010

உவரியில் கற்களைக் கொட்டி கடல்அரிப்பு தடுக்கப்படும்: ஆட்சியர்

13 Sep 2010 11:10:28 AM IST

உவரியில் கற்களைக் கொட்டி கடல்அரிப்பு தடுக்கப்படும்: ஆட்சியர்


வள்ளியூர், செப். 12: திருநெல்வேலி மாவட்டம் உவரியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் மு.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட கடற்கரையில் பாராங்கற்களைக் கொட்டித் தடுப்புகள் ஏற்படுத்த பொதுப் பணித்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.
உவரி கடற்கரையில் அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் அலைகளின் சீற்றத்தால் கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. கடற்கரையையொட்டி அமைக்கப்பட்டிருந்த தார்சாலை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றம் அதிகரித்ததால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கரையையொட்டி அமைந்துள்ள மீனவர்களின் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
இதனால் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் அரிப்பால் பாதிப்படைந்த பகுதிகளை ஆட்சியர் மு.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
அவரிடம், மீனவர்கள் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் தூண்டில் பாலம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதற்கு முன்பு கடல் அரிப்பைத் தடுக்கும் விதமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாராங்கற்களை கொட்டி குடியிருப்புகளில் தண்ணீர் புகுவது உடனடியாகத் தடுக்கப்படும்.பின்னர், நிரந்தரமாக கடல்அரிப்பைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து, சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ள கரைசுத்து உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் பகுதியில் | 1 கோடி செலவில் நடைபெறும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். இடையன்குடி கால்டுவெல் நினைவு இல்லத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
ஆட்சியருடன் ராதாபுரம் வட்டாட்சியர் (பொறுப்பு) ஆறுமுகம், துணை வட்டாட்சியர் அந்தோனிராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், மகாலிங்கம், கோபால், ஊராட்சித் தலைவர்கள் இடையன்குடி சேகர், துணைத் தலைவர் கிறிஸ்டோபர், கரைசுத்து உவரி ஊராட்சித் தலைவர் ராஜன் உள்ளிட்டோர் சென்றனர்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment