தூத்துக்குடி : மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வலியுறுத்தி நேற்று கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் நேற்று கலெக்டர் ஆபிசிற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஆபிஸ் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் அவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;தமிழகத்தில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வாழும் தூத்துக்குடி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளில் இதுவரையிலும் மனுநீதி முகாம்கள் நடந்ததாக வரலாறு இல்லை. மாவட்ட நிர்வாகம் கிராம மக்களை புறக்கணிக்காமல் இம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளிலும் மனுநீதிநாள் முகாம்கள் நடத்தி கடலோர கிராம மக்களின் துன்பங்களை அறிந்து, பிரச்னைகளை புரிந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலே அரசு கொடுத்த வாக்குறுதிபடி மாதத்திற்கு 300 லிட்டர் மண்ணெண்ணெய் ரேஷன் கடையில் வழங்கும் விலைக்கே வழங்க வேண்டும்.மத்திய அரசு தேசிய கடல் வளப்பூங்கா திட்டத்தை கைவிட்டு உயிர்கோள காப்பக திட்டத்தை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன் தலைமை வகித்தார். அன்டன்கோமஸ், பங்கு தந்தைகள் மரியஜான், பென்சிகர், பிரதீப், செல்வன் மற்றும் 23 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment