Monday, November 29, 2010
Saturday, November 27, 2010
Wednesday, November 24, 2010
Monday, November 22, 2010
உலக மீனவர் நாள் - மாநாட்டுத் தீர்மானங்கள்
கடலோர மக்கள் கூட்டமைப்பு
11/106 B, கேப்டன் குடியிருப்பு ,
ஆரோக்கியபுரம் முதன்மைச் சாலை,
தூத்துக்குடி-628002
தொலைபேசி: 0461 – 2361699 மின்னஞ்சல்: cpfsouth@gmail.com. கைபேசி: 9842154073
இடம் : இராமநாதபுரம் நாள்: 21.11.2010
உலக மீனவர் நாள் - மாநாட்டுத் தீர்மானங்கள்
1.மன்னார் வளைகுடாவில் தேசிய கடல் வளப் பூங்கா என்ற பெயரில், தீவுகளைச் சுற்றி ஒளிர்மிதவைகள் மூலம் கடலுக்குள் வேலி அமைக்கும் திட்டம் இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பெரிதும் பாதிக்கின்ற திட்டம் . தற்போது தேர்தலுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக கைவிடவேண்டும். மத்திய அரசு தேசிய கடல் வளப் பூங்கா திட்டத்தை கைவிட்டுவிட்டு,இந்தக் கடல் பகுதியை உயிர் சூழல் முக்கியத்துவம் (ECOLOGICALLY SENSITIVE AREA ) நிறைந்த பகுதியாகக் கருதி, அறிவிக்கப்பட்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களைத் ரத்து செய்து,தற்போது இந்தக் கடல் வளங்களை அழித்துக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை தடை செய்து , மீனவர்கள் இந்தக் கடல் இயற்கை வளங்களை பயன்படுத்தி, பாதுகாத்து,மேம்படுத்தவும் , கடல் தொழிலில் பாரம்பரிய இன்னும் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
2. மன்னார் வளைகுடா அறக்கட்டளை சார்பாக மீனவர்களுக்கு கடன் வழங்கி , மீன் பிடித் தொழிலில் இருந்து தற்சார்பு மீனவர்களை விரட்டியடிக்கும் அறக்கட்டளையின் எதிர்மறையான சதித் திட்டத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அறக்கட்டளை மூலம் மீனவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை உடனே நிறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.அறக்கட்டளை ஏற்படுத்தி இருக்கும் சூழல் மேலாண்மை குழுக்கள் வழியாக நேர்மறையாக கடல் வளத்தை பெருக்கி, அதைப் பாதுகாக்க மீனவர்களுக்கு தொழில் நுட்ப உதவி மட்டும் செய்தால் போதும் என வலியுறுத்துகிறோம். இந்த அறக்கட்டளையில் கடலுக்கும்,மீன் பிடித்தலுக்கும் தொடர்பு இல்லாத கிராமங்களை இணைத்து, இராமநாதபுரம் பகுதியில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் அறக்கட்டளையின் மீனவர் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.மீனவர்களுக்கு ஒடுக்கப்படும் அரசின் திட்டங்கள் , உண்மையான மீனவர்/ மீனவக் கிராமங்கள் மட்டுமே பயன் பெற வழிவகை செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
3. ஏறக்குறைய 13ஆண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்ட, 1997ல்மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளபட்ட முராரி கமிட்டியின் 21 பரிந்துரைகளை இனியும் காலம் தாழ்த்தாது உடனே நடை முறைப்படுத்துkhW மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். முராரி கமிட்டி பரிந்துரைத்தபடி , பாரம்பரிய மீனவர்களை , ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தகுதிப்படுத்தி, பயிற்சி அளித்து , தேவையான நிதி உதவி செய்து ,பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்து, ஆழ் கடல் வளங்களை பாரம்பரிய மீனவர்கள் பிடித்து வர தேவையான எரிபொருள் ( டீசல்) தயாரிப்பு அல்லது இறக்குமதி விலையிலே வழங்கிடவும்,அவற்றை ஏற்றுமதி செய்ய தகுந்த குளிர்சாதன மீன் பதப்படுத்தும் நிலையங்களை அரசே அமைத்து கொடுக்க கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசில் மீனவர்கள் நலம், கடல் வளம், கடல் உணவு ஏற்றுமதி மற்றும் மீன் சந்தைப்படுத்தல் இவை அனைத்தையும் உள்ளடக்கிய தனி அமைச்சகம் ஒன்றை உடனே அமைக்க வலியுறுத்துகிறோம். இந்தியாவின் ஆழ் கடல் மீன் பிடிப்பை இந்திய நாட்டின் பாரம்பரிய மீனவர்களுக்கு சொந்தமாக்கிட உலக மீனவர் நாளில் வலியுறுத்துகிறோம். 1983ல் மண்டைக்காடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட வேணு கோபால் கமிஷன் பரிந்துரைகளான, மீனவர்களுக்கென்று தனி கடற்கரை ஊராட்சிகள் , சட்ட மன்றத் தொகுதி , தனி பாராளுமன்றத் தொகுதி , மத்திய , மாநில அரசு வேலைகளில் மீனவர்களுக்கு 10% (விழுக்காடு) இட ஒதுக்கீடு ,இவற்றை எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் போர்க்கால அடிப்படையில் உடனே நிறைவேற்ற அரசுகள் முடிவு எடுக்க வலியுறுத்துகிறோம் .
4.இலங்கைக் கடற்படையினர் , மற்றும் இந்திய கடற்படையினரால் நாள்தோறும் செத்து மடியும் ,துன்பத்திற்கு ஆளாகும்,உடைமைகள் அழிக்கப்படும் தமிழக மீனவர்களை உடனடியாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், கட்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை இந்திய அரசு பாதுகாக்க வேண்டுமென்றும் இல்லையேல் , கட்சத் தீவை மீட்டு,மீண்டும் அதை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வலியுறுத்துகிறோம். இதுவரை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு , மீனவக் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம்,சிறப்பு ஓய்வூதியம், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி உதவி மேல்படிப்பு வரை வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்.
5. தமிழக அரசின் மற்ற நலவாரியங்கள் போல மீனவர் நல வாரியத்தினையும் தொழிலாளர் நலத்துறையுடன் இணைத்து, தனி அதிகாரி, தனி அலுவலகம் அமைத்து மீனவர் நல வாரியத் திட்டங்கள் காலம் தவறாமலும், கட்சிப் பாகுபாடின்றியும் மீனவ மக்களுக்குக் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். மீனவர் நல வாரியத்தின் பயன்கள் மீனவர்களுக்கு கிடைக்க கிராமம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வலியுறுத்துகிறோம்.
6. தமிழகத்தில் நாட்டுப்படகு, வள்ளம், செயற்கை இழைப்படகு வைத்திருக்கும் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் மற்றும் டீசல் மானியம் மாதம் படகு ஒன்றுக்கு 400 லிட்டர் வீதம் உற்பத்தி விலையிலோ அல்லது இறக்குமதி விலையிலோ வழங்க வேண்டும் என்பதுதான் மீனவர்களது கோரிக்கை. மத்திய மாநில அரசுகள் இதனை நிறைவேற்றுவதோடு வழங்கப்படும் டீசல், மண்ணெண்ணெய்யை அந்தந்த மீனவ கிராமங்களிலேயே நிரந்தரமாக வழங்கப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். மண்ணெண்ணெய், டீசல் மானியம் என்பது ஏதோ தேர்தல் நேரத்தில் மட்டும் கொடுப்பதுபோல் கொடுத்து விட்டு, தேர்தல் முடிந்த பின்னர் மீனவர்களை ஏமாற்றாமல். இதை சட்டமாக்கி , எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த மானியங்கள் தொடர்ந்து, தங்கு தடையின்றி வழங்கப்பட சட்ட இயற்ற வேண்டும்.
7.அணு உலைத் திட்டங்கள் , நிலக்கரி , மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட அனல் மின் உற்பத்தி திட்டங்கள் (Power Corridor), அவைகளுக்காக அமைக்கப்படும் துறைமுகங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் அமைக்கப்படுவதால் மீனவர்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகுந்த அச்சுறுதலாக இருக்கின்றன. மேலும் இவைகள்,மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாகவும்,கடல் அரிப்பை அதிகப்படுத்துவதாகவும் மீனவ மக்களின் சமூக அமைதியையும் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் உள்ளன. இவைகளை உடனே நிறுத்த வேண்டுமென்றுக் கேட்டுக்கொள்கிறோம்.
8.மாற்றுத் தொழில் என்ற பெயரில் வணிக நோக்கத்திற்காக,கடல் வளங்களை.பவளப்பாறைகளை , மீனவர் பொருளாதாரத்தை அழிக்கும், பார்தீனிய வகை கப்பா பைகஸ் கடல் பாசி வளர்க்கும் திட்டங்களை தமிழகக் கடல் பரப்பு முழுவதும் தடை செய்ய வலியுறுத்துகிறோம். தடையை மீறி , கப்பா பைகஸ் கடல் பாசியை வளர்க்கும் நபர்களை வன விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ன் படி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் .
9. இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரைப் பகுதியில் மத்திய அரசு 45,000 கோடி முதலீட்டில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அமெரிக்க இரசாயனத் தொழிற்சாலை மற்றும் இந்த தொழிற்சாலைக்காக தொண்டியில் அமையவிருக்கும் துறைமுகத்தையும் திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளை குழாய்கள் மூலம் வங்காள விரிகுடா கடலில் கலக்கும் தமிழக அரசின் ரூ.800 கோடி திட்டத்தையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த மாநாடு அரைகூவல் விடுக்கிறது.
10. மீன் பிடித் தொழிலில் அந்நிய மீன் பிடிக்கப்பல்களை , சில்லறை மீன் விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களை , ஆசியான் நாடுகளில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்கும் மத்திய அரசின் தேச விரோத ஒப்பந்தங்களை , சட்டங்களை அரசு உடனே நிராகரிக்க வேண்டுமென்று உலக மீனவர் நாள் அன்று வலியுறுத்துகிறோம்.
11.இந்திய நாட்டில் மீன் பிடித் தொழிலை நம்பி வாழும் 15 கோடிக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வுரிமையை பறித்து , தற்சார்பு மீன் பிடித் தொழிலில் இருந்து இந்திய நாட்டின் பாரம்பரிய மீனவர்களை அடித்து விரட்ட, கடல் வளங்களை அன்னியருக்கு தாரை வார்க்க, கடற்கரைகளை தனியாருக்கு தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யும் அரசின் மீனவர் விரோத தொழில் கொள்கைகளை உடனே கை விட வலியுறுத்துகிறோம்.
12. தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பாக கடந்த 28.10.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,கிழக்குக் கடற்கரைச் சாலையை சுற்றுலாவிற்கு அர்ப்பணித்திருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் அரசு செய்தியை,அரசின் கொள்கை முடிவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.21 தீவுகளை தனியார் வசமாக்கி,மிதவைகள் அமைத்து கடல் வளங்களை பாதுகாப்பதாக சொல்லிக்கொண்டு, அடிப்படையில் தீவுகளில் சுற்றுலாத் திட்டங்களுக்கு அனுமதி அளித்து , மீனவர்களை கடற்கரையில் இருந்து விரட்டும் சூழ்ட்சியை மீனவர்களாகிய நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்
13.மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடற்கரை ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 ஐ இந்திய நாட்டு மீனவர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் மீறி, முற்றிலும் பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்காக அதை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் எதேச்ச அதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
14.தமிழகத்தின் கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழிலில்,மீன் விற்பனைத் தொழிலில் முழுவதுமாக ஈடுபடும் மீனவப் பெண்களுக்கு,மீன்களைப் பதப்படுத்த பயிற்சிகளும் , குளிர் சாதன வசதியும் ,இலவச மின்சாரமும் , மானியத்துடன் கூடிய கடன் வசதியும் , மீன்களை சந்தைப் படுத்த தனிச் சிற்றுந்து வசதிகளும், மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்களும் ,நகரங்களில், பேரூராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் விற்பனை சந்தைகளையும் அமைத்துத் தந்து மீன் விற்பனையை மீனவப் பெண்களுக்குக்கே சொந்தமாக்கி , மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்துகிறோம்.
15. மீனவர்கள் சந்திக்கும் புயல், வெள்ளம் , கடல் அடி , கடல் அரிப்பு , கடலில் காணாமல் போதல் போன்ற இயற்கை பேரிடர்களில் மீனவர்களுக்கு, மீன் பிடி படகுகளுக்கு, மீன் பிடி சாதனங்களுக்கு இழப்பீடு வழங்க , மீனவர் விபத்து பேரிடர் கொள்கை ஒன்றை வகுத்து , அதன் அடிப்படையில் பேரிடர் காலங்களில் , பாதிப்புக்கு ஏற்ப உடனடி நிவாரணம் வழங்க வழி செய்ய வேண்டும்.
16. மன்னார் வளைகுடாப் பகுதியில் , புவி வெப்பமயமாதலின் பாதிப்புகளான கடல் மட்டம் உயர்தல், கடற்கரைகள் அரிப்பு , வெப்ப நீரோட்டத்தின் காரணமாக பவளப்பாறைகள் அழிதல் , தீவுகள் நீருக்குள் மூழ்குதல் , உயிரினங்கள் இடம் பெயர்தல் , காணாமல் போதல், பருவ நிலை மாற்றம் காரணமாக காற்றின் திசை மாறுதல், மழை பற்றாக்குறை போன்றவற்றை நாங்கள் உணர்ந்து வருகிறோம் . ஆகவே, கடல் அரிப்பை அதிகப்படுத்தும் , கடல் வளங்களை சேதப்படுத்தும், கடல் மணல் கொள்ளையை, துறைமுக விரிவாக்கத் திட்டங்களை நாட்டின் பாதுகாப்புக் கருதி உடனடியாக நிறுத்த வேண்டுகிறோம்.
17. கத்தார் சிறையில் வாடும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 50க்கும் மேற்பட்ட அப்பாவி மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு அவர்களின் குடும்ப வருமான இழப்பிற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக தகுந்த போதிய நிவாரணம் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்துகிறோம்.
18. மீனவர் மற்றும் கடல் சார்ந்த மக்களை அரசு நலத் திட்டங்களில் , குறிப்பாக கலைஞர் வீட்டு வசதி திட்டம் போன்ற திட்டங்களில் ஒதுக்கிவிடாமல் ,கடற்கரை கிராமங்களில் 1000 மீட்டருக்கு உட்பட்டு வாழும் மீனவர்களுக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
19.மீன் இனப்பெருக்கத்திருக்காக , மீன் பிடிக்க தடை செய்யப்பட்ட காலங்களில் (45 நாட்கள்) விசைப் படகு மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ 100 வீதம் மொத்தம் ரூ. 4.500 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிகளுக்குள் வழங்க அரசை வலியுறுத்துகிறோம்.