கடலோர மக்கள் கூட்டமைப்பு
11/106 B, கேப்டன் குடியிருப்பு ,
ஆரோக்கியபுரம் முதன்மைச் சாலை,
தூத்துக்குடி-628002
தொலைபேசி: 0461 – 2361699 மின்னஞ்சல்: cpfsouth@gmail.com. கைபேசி:9842154073
நாள் – 19.11.2010
ஊடகச் செய்தி
கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 ஒத்தி வைப்பு நாடகம் ?
கலைஞர் செய்தி தொலைக்காட்சியில் இன்று காலை புதிய செய்தி என்ற தலைப்பிலே “கடலோர மேலாண்மைத் திட்டத்தை ஒத்தி வைக்க மத்திய அரசை கலைஞர் அறிவுறுத்தல் என்று செய்தி வெளியானது.
கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010ஐ மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தனது இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் வெளியீட்டு ,(மீனவர் மற்றும் கடலோர மாநில அரசுகளின்) பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் நவம்பர் திங்கள் 15 ஆம் நாள் வரை (60 நாட்கள்) கேட்டது. கடந்த 60 நாட்கள் வரையிலும் இந்த அறிவிப்பாணை குறித்து வாய் பேசாத தமிழக முதல்வர் இன்று பேசி இருப்பது மீனவர்களை வியப்பில் ஆழ்தியுள்ளது .
கேரளா , மற்றும் ஒரிசா போன்ற மாநிலங்கள் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் இந்த கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 குறித்து (அந்த 60 நாட்கள் கால கெடுக்குள்)தங்கள் மாநிலத்தின் அச்சங்களை, கவலைகளை, நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு முறையாக தெரிவித்து விட்டன.ஆனால், தமிழக முதல்வர் காலங்கடந்து கருத்து தெரிவித்திருப்பது கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உள்ளது. அது மட்டு மல்ல,இப்படி காலங்கடந்து தள்ளிவைக்க சொல்லி இருப்பது,ஏதோ, இதில் உள் நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. காலம் கடந்து கருத்து சொல்லுவது என்பது சட்டப்படி செல்லாது.
2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சிக்கலுக்குப் பிறகு,தி.மு.க.,காங்கிரஸ் உறவில் இழுபறியில் இருக்கும் நிலையில்,தற்போது கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 தள்ளிவைக்க சொல்லி இருப்பது, காங்கிரஸ் கைவிட்டாலும்,மீனவர்களின் ஓட்டுகளை இழுப்பதற்கு அவர் தயாரில்லை என்று கருதுவது போல் உள்ளது.
கடந்த அக்டோபர் திங்கள் 29 நாள் தமிழகம் முழுவதும் மீனவர்கள் தெருவுக்கு வந்து போராடிய போது,அந்தப் போராட்டங்கள் குறித்து கவலைப்படாமல், போராட்டங்களை திசை திருப்புவதற்காக, மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் & கத்தார் சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை என்று மீனவர்களின் போராட்டங்களை மழுங்கடித்தார்.
கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010ஐ,முற்றிலும் கைவிடச் செய்வதே ஒட்டு மொத்த மீனவர்களின் கோரிக்கை. கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010ஐதள்ளிவைப்பதால் எந்தப் பலனும் இல்லை. முற்றிலும் கைவிடுவதை கலைஞர் ஆளும் கட்சியாக இருந்து செய்யப்போகிறாரோ? அல்லது எதிர் கட்சியாக இருந்து செய்யப்போகிறாரா? என்பது தான் மீனவர்களின் கேள்வி. ஆளும் கட்சியாக இருந்து மீனவர்கள் நலம் ,உரிமை காக்கும் போதுதான் மீனவர்கள் அவரை நம்புவார்கள்.
தள்ளிப்போடுதல் என்பது ஒரு ஏமாற்று வேலை மற்றும் எதிர்ப்பை தற்காலிகமாக சமாளித்து,அதை குறுக்கு வழியில் கொண்டு வருவதற்கான மோசடி வேலை. இப்படித்தான் கடந்த 2009 ஆம் ஆண்டு கடல் மீன் பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா 2009 ஐ எதிர்த்து மீனவர்கள் திருச்செந்தூர் இடைத் தேர்தல் நேரத்தில் மாபெரும் பேரணி நடத்தியபோது அதைக் கண்டு அஞ்சிய கலைஞர் அந்த மசோதாவை தள்ளிப்போடவைத்தார். தள்ளிப்போட வைக்கப்பட்ட அந்த மசோதா, மத்திய அரசின் 11 வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் மறைமுகமாக இன்று நடைமுறையில் உள்ளது. ஆசியான் ஒப்பந்தமும் நிறைவேறிவிட்டது.
ஆகவே, தற்போது கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 தள்ளிப்போடாமல் , அதை முறியடிக்க கலைஞர் களம் காண வேண்டும். இதைச் செய்யாமல் இருந்தால், கலைஞர் மீனவர்களின் ஓட்டுக்களை மட்டுமே குறி வைக்கிறார் என்று பொருள்படும்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
ம.புஷ்பராயன்
அமைப்பாளர்.
கடலோர மக்கள் கூட்டமைப்பு தூத்துக்குடி
No comments:
Post a Comment