Sunday, November 21, 2010

கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணையால் கேள்விக்குறியாகும் மீனவர் வாழ்வாதாரம்

By ரெ. ஜாய்சன்
21 Nov 2010 11:39:42 AM IST

கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணையால் கேள்விக்குறியாகும் மீனவர் வாழ்வாதாரம்

தூத்துக்குடி, நவ. 20: உலக மீனவர் தினம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) கொண்டாடப்படும் நிலையில் கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணை 2010-ஐ ஒட்டுமொத்தமாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்த தென் மாவட்டத்தில் தற்போது தங்கள் வாழ்வுரிமைக்காக மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் மீனவர்கள்.
"ஒருநாள் போவார், ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்' என்ற திரைப்படபாடல் கடலில் மீனவர் படும்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டியது.
ஒவ்வொரு நாளும் மீனவர் கரைத் திரும்பும் போதும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கென ஒரு அறிவிப்பை அல்லது செய்தியை கொடுத்து நிலைகுலைய செய்து வருகின்றன.
கடலில் தினம், தினம் அலைகளோடு போராடித் திரும்பும் மீனவர்களை, கரையிலும் போராட வைத்து விட்டனர்.
2008-ல் இந்திய மீனவர்களால் புறக்கணிக்கப்பட்ட கடலோர மேலாண்மை அறிவிக்கை ஆணை மற்றும் 2009 டிசம்பரில் இந்திய மீனவர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட கடல் மீன்பிடி ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை சட்டம், இவை இரண்டையும் இணைத்து புதிய பெயரில் கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணை 2010 என மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது இணையத்தளத்தில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
காட் ஒப்பந்தம், ஐரோப்பா கூட்டமைப்பின் நிபந்தனைகள், உலக வங்கியின் கட்டளைகள், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்பந்தங்கள், ஆசியான் ஒப்பந்தம், அணு ஆயுத உடன்பாடுகள், வல்லரசாகும் கனவுகள் எல்லாவற்றையும் விட பன்னாட்டு முதலாளிகளின் கவனிப்புகள், அனுசரணைகள் இவற்றிற்கெல்லாம் அடிபணிந்து, மீனவ மக்களின் வாழ்வுரிமையினை அடகு வைத்து கொண்டு வரப்படுவதுதான் இந்த கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை என்பதுதான் மீனவ மக்களின் குற்றச்சாட்டு.
அதுதான் உண்மையும் கூட என்றார் கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் ம. புஸ்பராயன்.
பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைத்துக் கொள்ளலாம், அணு உலைகள், அனல் மின் நிலையங்கள், துறைமுகங்கள் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும் இந்த ஆணை பாரம்பரிய மீனவரை இருப்பிடத்தை விட்டு வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளது.
கடலையும், கடற்கரையையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒழுங்குபடுத்துவதாக கூறிக் கொண்டு, கடல்வளப் பாதுகாப்பு என்ற பெயரில், மேலாண்மை என்ற போர்வையில் கடலோடிகளை அந்நியப்படுத்தும் செயல்பாடுகளைத்தான் செய்யப் போகின்றது என்று இந்த அறிவிப்பாணை குறித்து தங்கள் அச்சங்கள் பட்டியலிட்டார் அவர்.
கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணை- 2010-ஐ ஒட்டுமொத்தமாக கைவிட வேண்டும் என்பது தான் மீனவர்களின் கோரிக்கை. இதைவிடுத்து திருத்தம் செய்வது, தமிழக முதல்வர் கூறியிருப்பது போல தள்ளிவைப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிவிக்கை ஆணையை கைவிடக் கோரி வரும் நாள்களில் தொடர் போராட்டங்களை நடத்த மீனவ அமைப்புகள் இணைந்து திட்டம் வகுத்து வருகிறோம் என்றார் அவர்.
சுற்றுலா, சேவைத் தொழில் என்னும் பெயரில் நட்சத்திர விடுதிகள், கேளிக்கை மையங்கள் அமைக்கப்பட்டால் பூர்வக்குடிகளான மீனவர் சென்னை, மகாபலிபுரம், கடலூர், தூத்துக்குடி போன்ற தமது வாழ்வாதார மையங்களை இழந்து விட்டு நாடோடிகளாகத் திரிய வேண்டியதுதான் என்கிறார் சின்பேட் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரபாகர்.
சுற்றுலா வளர்ச்சிக்காக கவர்ச்சிகரமான திட்டங்களுக்கும் அனுமதி, நாட்டை வல்லரசாக்க அணு உலைப் பூங்கா திட்டங்கள், சட்ட விரோத கடல் மணல் கொள்ளைக்கு அனுமதி, மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க எண்ணில் அடங்காத அனல் மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்ல தனியார் நிலக்கரி துறைமுகங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி வசதிகளுக்காக ஆங்காங்கே இந்திய கடற்கரை ஓரங்களில் சுமார் 25 கிலோமீட்டர் இடைவெளிகளில் 300-க்கும் மேற்பட்ட பல்நோக்கு துறைமுகங்களுக்கு அனுமதி, மன்னார் வளைகுடாவில் உள்ள 21 கடல் பவளப்பாறைத் தீவுகளில் சுற்றுலாவுக்கு அனுமதி, பவளப் பாறைகளை அழிக்கும் அந்நிய கப்பாபைகாஸ் கடல் பாசிக்கு அனுமதி, கடற்கரைகளில் இருந்து 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை பகுதிகளில் சுற்றுலா விடுதிகள், தொகுப்பு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி, கடலோர பாதுகாப்புக்காக சேதுக் கால்வாய் திட்டம் என, இப்படி எல்லாவற்றிற்கும் அனுமதி அளித்துவிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒருபோதும் பாதிக்காது என்று சொன்னால் இதை எப்படி ஏற்பது என்றார் அவர்.

© Copyright 2008 Dinamani

1 comment:

  1. Dear Rayan,

    Great to see you organising people for the cause you always cherished.
    i am proud of you and will be with you and your team for the cause
    john Peter

    ReplyDelete