தூத்துக்குடி:கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 கைவிட மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று கடலோர மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் புஷ்பராயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த 30ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு படகு ஒன்றுக்கு 200 லிட்டர் வீதம் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு மாதந்தோறும் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது வெறும் தேர்தல் நேர அறிவிப்பாகும். இந்த மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் என்பது மத்திய அரசின் ஒதுக்கீட்டிலா? மாநில அரசின் ஒதுக்கீட்டிலா? என்பதை முதல்வர் அறிவிக்கவில்லை.
மண்ணெண்ணெயை வழங்க எவ்வித மண்ணெண்ணை விற்பனை நிலையங்களையும் கிராமங்களில் ஏற்பாடு செய்யப்படவில்லை. மண்ணெண்ணெய் மானியம் குறித்து அரசின் பத்திரிக்கை செய்தி தமிழக அரசின் இணையதளத்தில் ஏன் வெளியிடப்படவில்லை? ஆசிய வளர்ச்சி வங்கிக்கு பயமா? ஏனெனில் ஆழிப்பேரலை அழிவுக்கு பிறகு, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்பந்தத்தால் மத்திய, மாநில அரசுகள் இனிமேல் இந்திய கடற்கரையில் கடற்கரை சார்ந்த மீன்பிடிப்பு ஒழிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் துறைமுகம் சார்ந்த மீன்பிடி முறைதான் இனிமேல் இருக்கவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்து விட்டனர். அதனால் தான் இந்தியாவின் 7,500 கிமீ நீளம் கொண்ட கடற்கரையில் மத்திய அரசு 300 பல்நோக்கு தனியார் துறைமுகங்கள் அமைக்க திட்டம் வைத்துள்ளது. இந்த கொள்கை முடிவினால் இனிமேல் தமிழக கடற்கரைப் பகுதிகளில் கட்டுமரங்களோ அல்லது நாட்டுப்படகோ வைத்து மீனவர்கள் தொழில் செய்ய முடியாது. கடற்கரை கிராமங்களும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதனால், இனி இத்தகைய படகுகளுக்கு அரசின் சார்பில் மண்ணெண்ணெய் மானியமும் வழங்க வேண்டிய அவசியமில்லை. ஆகவேதான், இதுநாள் வரையிலும் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என்பது மீனவர்களுக்கு தெரியும்.
கடலோர மக்கள் கூட்டமைப்பின் சார்பாக கடந்த அக்டோபர் 25, 29ம் தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010ஐ எதிர்த்து நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் மீனவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தியதன் காரணமாக மக்களின் கவனத்தை திசை திருப்ப, இப்படி எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல் அறிவித்திருப்பது தேர்தலில் மீனவர் ஓட்டு திமுக.,வுக்கு கிடைக்காதோ என்ற பயம் என்றே மீனவர்கள் கருதுகின்றனர். மீனவர்களது கோரிக்கை என்பது மண்ணெண்ணெய் மானியம் உற்பத்தி விலையிலோ அல்லது இறக்குமதி விலையிலோ வழங்க வேண்டும் என்பதுதான். மத்திய, மாநில அரசுகள் இதனை நிறைவேற்றுவதோடு, வழங்கப்படும் மண்ணெண்ணெய் அந்தந்த மீனவ கிராமங்களிலேயே வழங்கபட வேண்டும். அப்போதுதான் பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் வெறும் அறிவிப்பாக மட்டுமே அமைந்துவிடும். கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 கைவிட மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment