கடலோர மக்கள் கூட்டமைப்பு
19 /1 - மனுவேல் ஜேக்கப் லேன், தூத்துக்குடி - 1
தொலைபேசி : 0461 2361699
அலைபேசி : 98421 54073, மின் அஞ்சல் : cpfsouth@gmail.com
நாள் : 29.07.10
பெறுனர்,
மாண்புமிகு . வனத்துறை அமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு.
மதிப்புமிகு ஐயா,
(பொருள்: இந்திய கடலில் தமிழக மீனவர்களுக்கு எல்லை போடும் மிதவைகள் அமைக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிடக்கோரி )
வணக்கம் ! மன்னார் வளைகுடா கடலை நம்பி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் என, கடல் வள தேசிய பூங்கா என அறிவிக்கும் முன்பிருந்தே கடல்வளத்தை பாதுகாத்து, பயன்படுத்தி வருகின்றனர் மீனவ மக்கள்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியிலுள்ள 21 தீவுகளில் சிலவற்றில் மீனவ மக்கள் கால்நடைகள் வளர்த்து வந்ததோடு, தங்கள் குடியிருப்பினையும் அமைத்து வந்துள்ளனர்.
பாரம்பரிய மீன்பிடித்தல் முறைகள் மூலம் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை பெருக்கி வருகின்றனர்.
மன்னார் வளைகுடாவுக்கு உள்பட்டகீழக்கரை, ஏர்வாடி,பெரியபட்டணம், முத்துப்பேட்டை, முந்தல், வாலிநோக்கம் ஆகிய கடல் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடல் பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பாரம்பரிய, இயற்கை முறையில் வளரும் பாசிகளை சேகரம் செய்து மீனவ பெண்கள் தங்களது வருமானத்தினை ஈட்டி வருகின்றனர். பாரம்பரிய மீனவ மக்களின் செயல்பாடுகள் எவ்வித பாதிப்புகளையும் கடல் வளத்திருக்கோ, பல்லுயிர் சூழலுக்கோ ஏற்படுத்தியதில்லை.
அரசு விதிகளுக்கு மாறாக எவ்வித சட்ட விரோத செயல்பாடுகளிலும் பாரம்பரிய, நாட்டுப் படகு மீனவர்கள் ஈடுபட்டதில்லை.
மத்திய அரசின் டேக்ராடுன் வன உயிரின நிறுவனத்தின் ஆய்வறிக்கைபடி மன்னார் வளைகுடா கடல் வளம் குன்றி வருவதற்கும், உயிரினங்கள் அழிவதற்கும் தொழிற்சாலைகளும், துறைமுகம் சார்ந்த கழிவுகளும், இறால் பண்ணைகள் அமைப்பதும்தான் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வரைவு மேலாண்மை அறிக்கை மீனவ மக்களுடனோ, மீனவ பிரதிநிதிகள் உடனோ, மீனவ அமைகளுடனோ கலந்து ஆலோசிக்காமல், மக்கள் கருத்து கேட்காமல் உருவாக்கப்பட்டுள்ளது.
தீவுகளை சுற்றி போயா மிதவைகள் அமைத்து விட்டால் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடித்தலுக்கும், வலைகள் விடுவதற்கும் இயலாத சூழ்நிலையில் இரண்டு லட்சம் மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படும்.
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியில் மீன் பிடிப்பதற்கும், பாரம்பரிய முறையில் பாசி எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டால் மீனவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
கடல் வளத்தினையும், பல்லுயிர் சூழலினையும் பாரம்பரிய மீனவ மக்களால் மட்டுமே பாதுகாத்து வளப்படுத்த முடியுமே தவிர, ஒரு சில அதிகாரிகளால் பாதுகாப்பது என்பது இயலாத காரியம்.
அன்னியர்கள் நடமாட்டத்தினையும், கடத்தல் சம்பவங்களையும், வெளிநாட்டு கப்பல் ஊடுருவலையும் அரசுக்கும், இந்திய கடற்படைக்கும் முதலில் அறிவிப்பது, அறிவித்தது மீனவ மக்கள்தான்.
இரண்டு லட்சம் மீனவ மக்கள் கடல் தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே தேசிய பாதுகாப்பு அடிப்படையிலும் நாட்டைப் பாதுகாக்க முடியும்.
மீனவர்களை புறக்கணித்து விட்டு, மீனவ மக்களை கடலிலிருந்தும், கடற்கரையிலிருந்தும் அந்நியப்படுத்தி விட்டு கடல் வளத்தையும், நாட்டின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவது கடினமான சூழலை அரசுக்கு உருவாக்கும்.
மன்னார் வளைகுடா தீவுகள் கடற்கரைப் பகுதியில் இருந்து குறைந்த தூரத்தில்தான் அமைந்துள்ளது. இப்பகுதியில் போயா மிதவைகள் அமைக்கப்பட்டு எல்லை உருவாக்கப்பட்டால் மீனவர்கள் தீவுகளைத் தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டும். அப்போது எரிபொருள் அதிகம் செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, மீனவர்களின் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலை ஏற்படும்.
மிதவைகள் அமைக்கப்பட்டால் புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், படகு பழுது, அதிக காற்று உள்ளிட்ட அசாதாரண சூழல் உருவாகும் போதும் மீனவர்கள் திக்கற்றவர்களாக நிற்க வேண்டி வரும்.
இலங்கை கடற்படையால் கடலில் எல்லை வகுக்கப்பட்டு உயிருக்கும், உணவிற்கும் போராடி வரும் இந்த நிலையில் இந்திய அரசும், மாநில வனத்துறையும் உள்நாட்டு கடலில் எல்லை வகுத்து தடை செய்தால் மீனவ மக்களின் பிழைப்பு அரிதாகிவிடும்.
கட்ச தீவு உடன்பாட்டிலேயே இந்திய, இலங்கை மீனவர்கள் அத்தீவில் சென்றுவர, வலைகள் உலர்த்த, மீன்பிடிக்க உரிமை அளிக்கப்பட்ட நிலையில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இருபத்தோரு தீவுகளிலும் தமிழ் மீனவர்களுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுவது மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்க வேண்டிய செயலாகும்.
தீவுகளில் இருந்து மீனவ மக்களை அந்நியப்படுத்தி விட்டால் கடல் சார்ந்த சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீவுகளின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தீவுகளை பாதுகாக்க மக்கள் உடன் இணைந்து அரசு செயலாற்ற வேண்டுமென மீனவ மக்கள் விரும்புகின்றனர்.
தீவுகளைப் பாதுகாக்கும், கடல் வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் திட்டங்கள் மீனவ மக்கள் கருத்தறிந்து, மீனவ மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நிறைவேற்ற வேண்டும்.
தீவுகளில் மிதவைகள் போட்டு எல்லை வகுத்துவிட்டால் அது மீனவ மக்களின் வாழ்வை சிதைக்கும் செயலாகவே அமைந்து விடும்.
ஆகவே, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் கடலுக்குள் எல்லை வகுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், மிதவைகள் அமைக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
( ம. புஷ்பராயன் ),
அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு,
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்.