ராமநாதபுரம்:"மன்னார் வளைகுடாவின் இன்றைய நிலை வருத்தம் அளிக்கும் வகையில் இருப்பதாக,' தீவுகளில் ஆய்வு செய்த ஐ.நா., வளர்ச்சி திட்டக்குழுவினர் தெரிவித்தனர். கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு உலகளாவிய அளவில் யூ.என்.டி.ஏ.,(ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான பிரதிநிதிகள் மூலம், சம்மந்தப்பட்ட நாட்டின் கடல்வளத்திற்கு தேவையான நிதி உதவி செய்து வருகின்றனர். இந்தியாவில் கடல்சார் தேசிய பூங்காவான மன்னார் வளைகுடாவின் வளர்ச்சிக்கு அதற்காக செயல்படும் தமிழக அரசின் அறக்கட்டளைக்கு இம்முறை ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர்.
இதற்கான ஆய்வுக்காக யூ.என்.டி.ஏ.,வின் திட்ட ஆய்வாளர்கள் சீனிவாச அய்யர், லியான் ஜவ்லி, பிரான்ஸ் நாட்டின் பெஞ்சமின் ஆகியோர் ராமநாதபுரம் வந்தனர். மன்னார் வளைகுடாவின் கடலோர பகுதிகளில் அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டனர். குருசடை தீவுக்கு சென்றவர்கள் அங்குள்ள, பவளப்பாறைகளை பார்வையிட்டனர். "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கண்டு வருத்தம் தெரிவித்தனர். பிரான்ஸ் நாட்டின் பெஞ்சமின் கூறியதாவது: மீனவர்களுக்கு வசதியாக தான் அறக்கட்டளை மூலம் பல்வேறு திட்டங்கள் செய்து வருகிறோம். தீவுகளை சுற்றி ஒளிரும் மிதவைகள் போடுவதால், மீனவர்களுக்கு நலன் தான் உள்ளது. இது அறியாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசியால் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது வருந்தக்கூடியதாகும். இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். மீனவர்கள் மாற்றுத்தொழிலுக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறோம். அதை அவர்கள் பயன்படுத்த வேண்டும், என்றார். அறக்கட்டளை இயக்குனர் பாலாஜி உட்பட அதிகாரிகள் பலரும் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment