ராமநாதபுரம் : வெளிநாட்டு கடல்பாசியான "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பரவிவருவதால், நண்டுகளின் இருப்பிடங்கள் கடும் பாதிப்பை சந்தித்து, அவற்றின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடி இருந்து வருகிறது. மீனவர்களின் ஆதாரத்திற்கு கடல்வாழ் உயரினங்களின் உற்பத்தி அவசியமாகும். அந்த வகையில், கடல்வாழ் உயிரினங்களின் புகழிடமான பவளப்பாறைகளுக்கு இங்கு பெருமளவில் பாதிப்பு இருந்து வருகிறது. போதாக்குறைக்கு பாக்ஜலசந்தியில் வளர்க்கப்படும், "கப்பாபைகஸ் ஆல்வரேசி' என்ற வெளிநாட்டு கடல்பாசி மன்னார் வளைகுடாவில் பரவியது.
இதனால், பவளப்பாறைகளின் சுவாசப்பகுதிகள் செயல் இழந்து வருகின்றன. பவளப்பாறைகள் பல இடங்களில் கருகி வருகிறது. இதனால் பல்வேறு உயிரினங்கள் இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றன.
இதில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருபவை நண்டுகள் தான். குஞ்சு பொறிக்கும் நேரத்தில், ஆல்வரேசி பாசி படர்ந்து, அவை சிறை வைக்கப்படுகின்றன. பருவத்தில் அவற்றால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மடிந்து போகின்றன. இதனால் சமீபத்தில் நண்டுகள் இனப்பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. இதே போல இறால், கடல் அட்டைகளுக்கும் பாதிப்பு இருந்து வருகிறது. இப்பகுதியில் வெளிநாட்டு பாசியை பரவ செய்ததே இதற்கு காரணமாகும்.
இதை தடுக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ள நிலையில், அரசு தரப்பில் இப்பாசிகளுக்கு தரப்படும் மானியங்கள், உதவிகளை நிறுத்த வேண்டும். இது குறித்து வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை அதிகாரிகளும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில், விவசாயத்தில் வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம், வருங்காலத்தில் மீன்வளத்திலும் இப்பெயரை விரிவாக்கி கொள்ளும் நிலை ஏற்படலாம்.
No comments:
Post a Comment