27 Aug 2010 12:45:40 PM IST
இந்தியக் கடல் வளத்தை அழிக்கும் வெளிநாட்டு கடல்பாசி: குருசடைத் தீவில் அதிகாரிகள் குழு ஆய்வு
ராமநாதபுரம், ஆக. 26: இந்தியாவில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் புகழிடமாக விளங்கும் பவளப் பாறைகளை கப்பா பைகஸ் எனும் வெளிநாட்டு கடல்பாசி அழித்து வருவதை ராமநாதபுரம் அருகேயுள்ள குருசடைத் தீவில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை நேரில் ஆய்வுசெய்து, அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியக் கிழக்கு கடற்கரையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவிலிருந்து
கன்னியாகுமரி வரை பரவிக் காணப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 சிறு பவளப் பாறைத் தீவுகள் உள்ளன. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இப் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் சுமார் 3,600-க்கும் மேற்பட்டவை உயிர் வாழ்கின்றன. இவ் உயிரினங்களின் வளர்ச்சிக்கு
பவளப் பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவேதான், இப் பகுதியை மத்திய அரசு தேசிய கடற் பூங்காவாக அறிவித்து, இப் பகுதியைப் பாதுகாத்து வருகிறது.
வெடி வைத்துத் தகர்ப்பது, கழிவு நீர் கடலில் கலப்பது, எண்ணெய்க் கசிவு நீர் மற்றும் ரசாயனக் கழிவுகளால்தான் பெரும்பாலும் கடல் வளம் அழிய வாய்ப்புண்டு. ஆனால், தற்போது இக் கடல் பகுதியில் காணப்படும் பவளப் பாறைகள் எனப்படும் உயிரினங்களை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கடல் வழியாக ஊடுருவியுள்ள கப்பா பைகஸ் எனப்படும் கடல் பாசி அவற்றின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக அழித்து வருகிறது. இது வனத் துறை அதிகாரிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
குளிர்பானம் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பகுதியில் இக் கடல் பாசியை தனது தொழில் வளர்ச்சிக்காக அதிக அளவில் வளர்த்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகளான தில்லியைச் சேர்ந்த சீனிவாச அய்யர் தலைமையில் லியான் சாவ்லி, பெஞ்சமின், ஆந்திர மாநில தலைமை வனப் பாதுகாவலர் ஹித்தோஸ் மல்கோத்ரா, வனத் துறை அதிகாரி சின்ஹா ஆகியோர் அடங்கிய குழுவினரை ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் இயக்குநர் எஸ்.பாலாஜி, வன உயிரினக் காப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் குருசடைத் தீவுக்கு நேரில் அழைத்து வந்து காண்பித்தனர்.
பவளப் பாறைகளை வெளிநாட்டு கப்பா பைகஸ் கடல் பாசி எவ்வாறு அழித்து வருகிறது என்பதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். பவளப் பாறைகளையும், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களையும் வனத் துறை அதிகாரிகள் எவ்வாறு பாதுகாத்து வருகின்றனர். பவளப் பாறைகளை மேலும் அழிய விடாமல் பாதுகாப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகளுடன் ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க் கோள காப்பக அறக்கட்டளையின் அதிகாரிகள் தீபக் சாமுவேல், ஜெயக்குமார், வனத் துறையின் கடல் உயிரியலாளர் செந்தில்குமார் மற்றும் வனத் துறை அதிகாரிகள், வனச் சரகர்கள் பலரும் உடனிருந்தனர்.
© Copyright 2008 Dinamani
No comments:
Post a Comment