Tuesday, August 31, 2010

மன்னார் வளைகுடாவின் தீவுகளில் வேட்டை தடுப்புக்கூடங்கள்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010,23:13 IST

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவின் தீவுகளில் வேட்டை தடுப்புக்கூடங்கள் அமைக்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மன்னார் வளைகுடாவின் 21 தீவுகளில், அதிக அளவிலான கடல்சார் வளங்கள் காணப்படுகின்றன. இவற்றை அபகரிக்கும் முயற்சியில் பல்வேறு கும்பல்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றன. வனத்துறை, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை , மீன்வளத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு இருந்தும், அதையும் மீறி சில நேரங்களில் அபகரிப்பு தடுக்க முடியாததாக உள்ளது. தீவுகளில் தங்கி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போனதே இதற்கு முக்கிய காரணமாகும். இதை தடுக்கும் விதமாக, தேசிய காப்பக பாதுகாப்பு திட்டத்தில் "வேட்டை தடுப்புக்கூடங்கள்' அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2008-09ல் மன்னார் வளைகுடாவின் குருசடை, அப்பா, முயல் தீவுகளில் வேட்டை தடுப்பு கூடங்கள் தலா 4.25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.


வனத்துறையினர் இங்கு தங்கி, இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வனத்துறையினர் முடிவுசெய்துள்ளனர். அதன் படி தலையாரி, சிங்கிள், வான்தீவுகளில் "வேட்டை தடுப்புக்கூடம்' அமைக்க, அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கான பணி தொடங்க உள்ளது. தொடர்ந்து மன்னார் வளைகுடாவின் பெரும்பான்மை தீவுகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்தி, அங்கு முழுமையான கண்காணிப்பு பணியை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட வனப்பாதுகாவலர் சுந்தரக்குமார் கூறியதாவது: தற்போது மூன்று தீவுகளில் உள்ள இத்திட்டத்தை ,மேலும் மூன்று தீவுகளில் கொண்டு வந்து விரிவாக்கம் செய்ய உள்ளோம். எஞ்சியுள்ள தீவுகளிலும் இத்திட்டம் விரைவில் கொண்டுவரப்படும், என்றார்

No comments:

Post a Comment