Friday, August 27, 2010

இலங்கை சிறையில் வதைபடும் மீனவர்கள்

By அ. அருள்தாசன்
27 Aug 2010 12:17:18 PM IST

இலங்கை சிறையில் வதைபடும் மீனவர்கள்

நாகர்கோவில், ஆக.26: இலங்கை சிறைகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கேட்பாரியின்றி கைதிகளாக அடைப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகள் நீண்ட நாள்களாகவே கவலையடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகமோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பரவலாக கருத்து நிலவுகிறது.

நீண்ட கடற்பகுதியைக் கொண்ட குமரி மாவட்டத்தில் 43 கடலோரக் கிராமங்களிலும் இதுபோன்று கடலில் மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களில் சிக்கியும், விபத்துகளாலும் மீனவர்கள் காணாமல்போவது ஒருபுறம் இருக்க அண்டை நாடான இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்படுவது மீனவர்கள் மாயமாவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் ஆழ்கடல் பகுதியில் பிடிபடும் மீனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காமல் அவர்களை பிடித்துச் சென்று இலங்கை சிறைகளில் அடைத்து வைத்திருப்பதாக மீனவர் அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான மீனவர் வாழ்வுரிமை மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுவிசாரணை மன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பலரை அழைத்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது இலங்கை சிறையில் அடைபட்டு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் மீனவர்கள் பலர் வெளியிட்ட தகவல்கள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அமைப்புகளின் நிர்வாகிகளின் கருத்தை உறுதிசெய்வதாக இருந்தது.

இலங்கை சிறைகளில் எவ்வித விசாரணையும் இன்றி,கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கைதிகளாக அடைபட்டுள்ளதாக பொதுவிசாரணை மன்றத்தில் மீனவர்கள் பலர் தெரிவித்தனர்.

இலங்கை சிறைகளில் விசாரணையின்றி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கைதிகளாக இருக்கிறார்களா என்பதை கண்டறிய இருநாட்டு தூதரகங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நெய்தல் மக்கள் இயக்க தலைவர் குறும்பனை சி. பெர்லின். பொதுவிசாரணை நிகழ்வில் இவரும் பங்கேற்றிருந்தார்.

2008-ம் ஆண்டிலேயே இந்த பிரச்னை குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜோதிநிர்மலாவிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. உயரதிகாரிகளுக்கு தெரிவித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அவர் முற்பட்டார்.

ஆனால் அவரை இடமாற்றம் செய்தபின் தொடர்ந்து வந்த ஆட்சியர்கள் இதில் அக்கறை செலுத்தவில்லை என்றார் பெர்லின்.

1987-ம் ஆண்டு முதல் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் 88 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள் என்று கருதப்படும் மீனவர்கள் பலரின் உடல் கிடைக்கவில்லை. விசைப்படகுகளில் ஆழ்கடல் பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிக்க சென்ற காலம் தொடங்கி மீனவர்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறு காணாமல்போகும் மீனவர்களைத் தேடும் பணி அதிகபட்சம் ஒரு வாரம் வரைநடக்கிறது. அதன்பின் அந்த மீனவர்கள் கதி என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.

காணாமல்போகும் மீனவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச் செல்லும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் அதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் யோசனைகளை செயல்படுத்த முன்வரவில்லை.

இலங்கை சிறைகளில் உண்மையிலேயே மாவட்ட மீனவர்கள் விசாரணையில்லாத கைதிகளாக அடைபட்டுள்ளார்களா என்பதை தெளிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் இருநாட்டு தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் கோரிக்கை.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment