01 Aug 2010 01:23:33 PM IST
இலங்கை சிறையிலுள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தல்
நாகர்கோவில், ஜூலை 31: இலங்கை சிறையில் எவ்வித விசாரணையுமின்றி அடைபட்டுள்ள மீனவர்களை தூதரகங்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற மீனவர் குறைதீர் கூட்டத்தில் மீனவர் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை மீனவர் பிரதிநிதிகளிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார். இக் கூட்டத்தில் மீனவர்கள் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து பலர் எடுத்துரைத்தனர்.
இலங்கை சிறைகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாடும் பிரச்னை குறித்து குறும்பனை பெர்லின் எடுத்துரைத்தார்.
இம் மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கை 85-ஐ தாண்டுகிறது. இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலரும், எவ்வித விசாரணையும் இல்லாமல் அந்நாட்டு சிறைகளில் அடைபட்டுள்ளதாக, அங்கிருந்து திரும்பியுள்ள நாகப்பட்டினம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பாக தூதரகங்கள் மூலம் விசாரித்து அம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், மாவட்ட மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கவும், கடல்சார் பல்கலைக்கழகத்தில் இம் மாவட்ட மீனவர்களின் பிள்ளைகளைச் சேர்க்கவும், சிங்காரவேலர் தொகுப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மகளிர் திட்டத்தில் சேராமல் தொண்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வேணுகோபால் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைப்படி, படித்த மீனவ இளைஞர்களைக் கடலோர காவல்படையில் சேர்க்கவேண்டும் என்றும் மிடாலம் ஜார்ஜ் ஆன்டனி வலியுறுத்தினார்.
இரயுமன்துறையில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அப் பகுதி மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கடந்த மீனவர் குறைதீர் கூட்டத்தில் 41 மனுக்கள் வந்தன. அவற்றுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குளச்சல் மீன்பிடி துறைமுகப் பணிகளையும், தூத்தூர் பாலம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்துள்ளேன். பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
பரிசுகள் அளிப்பு:
கூட்டத்தில் 2007-2008-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதன்மை பெற்ற 6 மீனவ மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசாக ரூ.6600 மற்றும் சான்றிதழ்களையும், பிளஸ் 2 தேர்வில் முதன்மை பெற்ற 2 மாணவ, மாணவிகளுக்கு பரிசாக ரூ.6 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இதுபோல், குளச்சல் பகுதி மீனவர்கள் 11 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மீனவர் குழு விபத்து மற்றும் தனிநபர் விபத்து காப்புறுதித் திட்டத்தின்கீழ் 7 பேரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4.50 லட்சம் காப்புறுதி நிவாரணத் தொகையையும் ஆட்சியர் வழங்கினார்.
© Copyright 2008 Dinamani
No comments:
Post a Comment