Saturday, August 28, 2010

தமிழக சட்ட மேலவையில் மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்ககோரி

கடலோர மக்கள் கூட்டமைப்பு

11/106 B, கேப்டன் காம்பவுண்ட்,

ஆரோக்கியபுரம் மெயின் ரோடு,

தூத்துக்குடி-628002


தேதி : 28.08.2010

பெறுநர்

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்,

தலைமை செயலகம்,

சென்னை.

மதிப்புமிகு ஐயா,

பொருள்: தமிழக சட்ட மேலவையில் மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்ககோரி.

வணக்கம்! தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் மீனவர்களாகவும் மீன்பிடி சார்ந்த தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுபடகு மீனவர்கள்,விசைப்படகு மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட கடல்சார் தொழிலிலும்,உள்நாட்டு மீன்பிடித்தலிலும் ஈடுபட்டுவரும் மீனவ மக்களுக்கு உரிய அரசியல் அங்கிகாரம் இதுவரை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களிலும் பிறமாவட்டங்களில் உள்நாட்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிலும்,சட்டபேரவையிலும்,மக்களவை,மாநிலங்களவையிலும் பிரதிநிதித்துவம் கிடையாது.

தமிழகத்தின் மொத்த சட்டமன்றத் தொகுதிகளில் 2 அல்லது 3 நபர்கள் அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.அவர்களும் கட்சிகளின் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியுள்ளது.ஒரேஒரு நபர் மீனவ சமுகத்திலிருந்து ஆளுங்கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் மீன்வளத்துறைக்கு அமைச்சராக்கப்படுகின்றார்.அவர்களால் அடித்தட்டு மீனவர்களின் பிரச்சனைகளை பொதுஅரங்குகளில் எடுத்துச்சொல்ல வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது.

தற்போதைய சட்டைப்பேரவை உறுப்பினர்களில் ஆளுங்கட்சி தரப்பில் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.பி.சாமி அவர்களும்,எதிர்கட்சி சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் அவர்களும் மீனவ சமூகத்தின் பிரதிநிதிகளாக உள்ளனர்.அவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

திராவிட கட்சிகள் இதுவரை மீனவர்களை ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.வேறு எவ்விதத்திலும் மீனவ மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை.உள்ளாட்சி அமைப்புகளில் கடற்கரையோர கிராமங்களில் மட்டும் ஒருசிலர் ஊராட்சி மன்றத் தலைவர்களாக வந்துள்ளனர்.

28.09.1997-ல் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முராரி கமிட்டி பரிந்துரைகள்,06.08.1990-ல் அறிவிக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகள் மற்றும் 1982 மண்டைக்காடு கலவரத்திற்க்காக ஏற்ப்படுத்தப்பட்ட வேணு கோபால் கமிஷன் அறிக்கைகள் மீனவர்களுக்கு உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.இது வரை இந்தியாவில் எந்த கடலோர மாநிலங்களிலும் இவ்வறிக்கைகள் அமல்படுத்தப்படவில்லை

இந்த சூழ்நிலையில் மீனவமக்களின் தேவைகளை, குறைகளை, பிரச்சனைகளை முழுமையாக கருத்துத் தெரிவிக்கும் வகையில் பிரதிநிதிகளை தமிழக சட்ட மேலவையில் ஏற்ப்படுத்திடவேண்டும்.

மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்,அரசியல் அங்கிகாரம் கிடைத்திட தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள சட்டமேலவையில் மீனவமக்களுக்கு 10 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது அரசியல்கட்சி சார்பற்று வழங்கப்பட வேண்டும்.மீனவ சமுகத்தினை சேர்ந்த தொழிலதிபர்கள் அல்லாத பாரம்பரிய மீனவர்களுக்கும்,பாரம்பரிய நாட்டுப்படகு மீனவ சங்கங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இப்படிக்கு,

ம.ச.புஷ்பராயன்

அமைப்பாளர்,

கடலோர மக்கள் கூட்டமைப்பு.

NO: 9842154073

No comments:

Post a Comment