26 Jul 2010 10:49:18 AM IST
மன்னார் வளைகுடா கடல்வளம் பாதிக்கப்படும் அபாயம்
தூத்துக்குடி, ஜூலை 25: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பெரும் களையாக உருவெடுத்து வருகிறது, "கப்பாபைகஸ் ஆல்வரேசி' என்ற வெளிநாட்டுக் கடல்பாசி.
கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாக விளங்கும் பவளப்பாறைகளை, இக் கடல்பாசி கொஞ்சம்கொஞ்சமாக அழித்து வருகிறது.
இக் கடல்பாசிகளை உடனே அகற்றாவிட்டால், மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைப் படுகைகள் பாலைவனமாக மாறி, கடல்வளம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துள்ளனர்.
மன்னார் வளைகுடா, நாட்டின் நான்கு முக்கிய பவளப்பாறை உள்ள இடங்களுள் ஒன்று. இதன் முக்கிய பவளப்பாறைப் படுகைகள் இங்குள்ள 21 தீவுகளையும் சுற்றி அமைந்துள்ளன. இவை 1986-ம் ஆண்டு கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
"குழி மெல்லுடலிகள்' எனப்படும் பவளப்பாறைகள் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு, குறிப்பாக மீன் இனங்களுக்கு வாழ ஏற்ற சூழ்நிலையைத் தருகிறது. கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கிய உறைவிடமாகவும், உணவு, இனப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் பவளப்பாறைகள் திகழ்கின்றன. எனவே, இவற்றை ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாரம்பரியமாக சார்ந்துள்ளனர்.
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாகத் திகழும் இப் பவளப்பாறைகளுக்கு, கடல்பாசி வடிவில் புதிய ஆபத்து வந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து 1995-ல் கொண்டுவரப்பட்ட கப்பாபைகஸ் ஆல்வரேசி (ஓஹல்ல்ஹல்ஹட்ஹ்ஸ்ரீன்ள் ஹப்ஸ்ஹழ்ங்க்ஷ்ண்ண்) எனப்படும் கடல்பாசி, மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் உள்ள பவளப்பாறைகளை கொஞ்சம்கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. வேதிப் பொருளான கெராஜின் போன்றவை தயாரிக்க, கடலில் இப் பாசியை தனியார் தொழில் நிறுவனங்கள் வளர்த்து வருகின்றன. இப் பாசிகள் பவளப்பாறைகளின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக மூடி, ஒளிச்சேர்க்கை நடைபெறவிடாமல் தடுத்து அழித்துவிடும்.
மன்னார் வளைகுடாவில் நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் சிங்கிள், குருசடை மற்றும் பூமரிச்சான் ஆகிய 3 தீவுகளில் உள்ள பவளப்பாறைகளை இப் பாசிகள் ஆக்கிரமித்து, பரவி அவற்றை உயிரிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன.
கடந்த 18 மாதங்களில் சுமார் 1 ச.கி.மீ. அளவுக்கு பவளப்பாறை இடங்களில், இப் பாசி பெருகி 480-க்கும் மேலான பவளப்பாறை காலனிகளைப் பாதித்து அழித்துள்ளது என்றார், மன்னார் வளைகுடா பகுதியில் 10 ஆண்டுகளாக பவளப்பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர், ஜே.கே. பேட்டர்சன் எட்வர்டு.
இக் கடல்பாசி, வேகமாக வளரக்கூடிய, தடிமனான, சக்திவாய்ந்த சிவப்புப் பாசி வகை. 15 முதல் 30 நாள்களில் இருமடங்காக வளரும் தன்மை கொண்டது. இது பவளப்பாறை அதிகம் உள்ள இடங்களை பாசி அதிகமுள்ள இடங்களாக மாற்றி, பவளப்பாறை இடங்களின் வடிவமைப்பை மாற்றி அவற்றின் துளைகள், பிளவுகள் போன்றவற்றைக் குறைத்து விடுகின்றன.
இதனால், இந்த பவளப்பாறைகளை நம்பி வாழும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு, அதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்நிலை நீடித்தால், மன்னார் வளைகுடாவின் பவளப்பாறை இடங்கள் பாலைவனம்போல மாற நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலரும், கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளருமான ம. புஷ்பராயன் கூறுகையில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தியாவின் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் கப்பாபைகஸ் பாசியை மன்னார் வளைகுடா பகுதியில் பரவச் செய்தோரைக் கண்டறிந்து, அவர்கள் மீது 1972-இந்திய வன விலங்கு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இது தொடர்பாக, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்கா வன உயிரினக் காப்பாளர்
என். சுந்தரகுமாரிடம் கேட்டபோது, மன்னார் வளைகுடா பகுதியில் பெரும் ஆபத்தாக கப்பாபைகஸ் ஆல்வேசி பாசி பரவி வருகிறது.
பவளப்பாறைகளை அழித்து வரும் இப் பாசிகளை கடலில் இருந்து அப்புறப்படுத்த வனத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வகை உதவிகள் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் அதற்கான பணிகள் விரைவாக நடைபெறும் என்றார் அவர்.
© Copyright 2008 Dinamani
No comments:
Post a Comment