Monday, July 26, 2010

மத்திய, மாநில அரசினை ஏமாற்றி மக்களின் வாழ்வாதாரத்தினை சீர் குலைக்கும் ஸ்டெர்லைட்தொழிற்சாலையினை நிரந்தரமாக இழுத்து மூடக்கோரி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுநல அமைப்பைச் சேர்ந்த 100 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாம் தமிழர் இயக்கம் வழக்கறிஞர்.பிரபு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வழக்கறிஞர்.ஜோயல், கடலோர மக்கள் கூட்டமைப்பு புஷ்பராயன், வீராங்கனை அமைப்பு பாத்திமாபாபு, பெரியார் திராவிடர் கழகம் பால்.பிரபாகரன், மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்.ராமசந்திரன், கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம் சுந்தரிமைந்தன், தமிழக மக்கள் உரிமை கூட்டமைப்பு தமிழ்ச்செல்வன், சமூக செயல்பாட்டு இயக்கம் பிரபாகர், இந்திய பொதுவுடைமை கட்சி வழக்கறிஞர்.மோகன்ராஜ், மக்கள் உரிமை குழு வழக்கறிஞர்.அதிசயகுமார், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சற்குணம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சந்தனகுமார், பகுஜன் சாமாஜ் கட்சி ஜீவன்குமார், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் நடராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, மானிட வலிமைக்கான வழிகாட்டி மையம் அசுந்தா, வடபாகம் நாட்டுப் படகு மீனவ சங்கம் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் மனுவினை நேரிடையாக வந்து வாங்கி செல்லுமாறு போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் வர மறுத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்பாட்டத்தில் ஈட்டுபட்டனர். இரண்டு மணி நேரமாக ஆட்சியர் தரப்பில் எவ்வித பதிலும் இல்லாததால் மனுவை தீயிட்டு கொளுத்தி விட்டு போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.

அனுப்புனர்,
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு,
பாலன் இல்லம், போல்டன்புரம், தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம்.

பெறுனர்,
திருமிகு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தூத்துக்குடி மாவட்டம்.

மதிப்புமிகு ஐயா,
(பொருள் : மத்திய, மாநில அரசினை ஏமாற்றி மக்களின் வாழ்வாதாரத்தினை சீர் குலைக்கும்
ஸ்டெர்லைட்தொழிற்சாலையினை நிரந்தரமாக இழுத்து மூடக்கோரி )

வணக்கம் ! தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் என்ற தொழிற்சாலையினால் தூத்துக்குடியின் சுற்று சூழல் பெருமளவில் மாசுபட்டு வருகின்றது. ஆலையின் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயமும், மீன்வளமும் பாழ்பட்டு வருகின்றது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு, விவசாய நிலங்களையும் சீர்கேடு அடையச செய்து வருகின்றனர். மக்களின் நிலங்கள் வேலைவாய்ப்பு என்ற பெயரில் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. துறைமுகம் சார்ந்த ஏற்றுமதி இறக்குமதியிலும் பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர கம்பெனியில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக மத்திய கலால் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். டிவின்ச்டர் என்ற ஸ்டெர்லைட் சார்பு நிறுவனம் 208 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் 25 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் என்ற துணை நிறுவனம் 2005ம் ஆண்டில் 220 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக 84 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2010ம் ஆண்டின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஆண்டறிக்கை ஆய்வின் படி மறைமுக வரி 348 மில்லியன் டாலர் கட்ட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் மட்டும் இரண்டாயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தொழிற்சாலையின் மறைமுக வரி உதவித் தலைவர் எஸ்.வி.ஆர்.என்ற வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். கலால் வரித்துறையினர் ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தற்போது ஒரு வழக்கில் மட்டும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் துணைத் தலைவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு தெரியாமல் பல ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது. எனவே தொழிற்சாலையின் உயர் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள், பங்குதாரர்கள் என அனைவரும் மத்திய புலனாய்வு துறையினரால் விசாரிக்கப்பட வேண்டும். வரி ஏய்ப்பு செய்துள்ள ஆலை மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, இயற்கை வளங்களை சுரண்டி, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையினை அரசு தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பலகோடி ருபாய் மின்சார கட்டணம் பாக்கி வைத்துள்ளனர். மக்களையும், அரசையும் ஏமாற்ற நலத்திட்டங்கள் என்ற பெயரில் மோசடி செய்து வருகின்றனர். அரசுக்கு முறைப்படி வரி கட்டாமல், சில கோடி ரூபாய்கள் அரசு திட்டங்களுக்கு வழங்குவதாக போலித்தனமான விசயங்களை செய்து வருகின்றனர்.
அரசின் அனுமதி பெறாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தனது விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தியுள்ளதோடு, கட்டிடங்கள் கட்டுவது, மூலப் பொருட்கள், தளவாட சாமான்கள் வாங்குவது என அரசை ஏமாற்றி வருகின்றனர். சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் இந்த தொழிற்சாலை அரசின் விதிமுறைகளுக்கு மாறாக, தனதுஆலை விரிவாக்கப் பணியினை செய்ய கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
தாமிரபரணியில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும்.
தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது. மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளதால் இத்தொழிற்சாலை தடை செய்யப்பட வேண்டியதாகும்.
ஆலையின் கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் செயலாகும். கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இத்தொழிற்சாலையால் தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஆகும்.
2004 ல் உச்ச நீதி மன்ற கண்காணிப்பு குழு பரிந்துரைகள் எதையும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் கடைப்பிடிக்கவில்லை அரசும் கண்காணிப்பு செய்யவில்லை. குறிப்பாக துறைமுகத்தில் தாமிர இறக்குமதிக்காக தனித் தளம் அமைக்கப்பட்டு இறக்கப்பட வேண்டும் என்பதை பின்பற்றாமல் கடலிலேயே தனது சூழல் சீர்கேட்டை ஆரம்பித்து விடுகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து முறைகேடாக மூலப்பொருள் இறக்குமதி செய்வதோடு உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்து வருகின்றனர்.
தொழிற்சாலையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் பேரிடர் பாதுகாப்பு மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை. தொழிற்சாலையின் உள்ளே அடிக்கடி மர்ம மரணங்கள் நிகழ்வதும், விபத்துகள் நடப்பதுவும் மூடி மறைக்கப்படுகின்றது. வேலை வாய்ப்பு என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் மத்திய, மாநில அரசுகளை வரி ஏய்ப்பு மூலம் மோசடி செய்த, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தினை சீர் குலைக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையினை நிரந்தரமாக இழுத்து மூட உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவண்
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டக் குழு சார்பாக,



--
.

No comments:

Post a Comment