Thursday, July 22, 2010

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பூங்கா அழிவிற்கு துணைபோன ஆராய்ச்சியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


கடலோர மக்கள் கூட்டமைப்பு

----------------------------------------------------------------------------------------------------------------------------------

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பூங்கா அழிவிற்கு

துணைபோன ஆராய்ச்சியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்



மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் பாசிகள்-150, கடல்புற்கள்-13, சதுப்பு நிலத் தாவரங்கள்-14, பவள உயிரிகள்-137, முத்துச்சிப்பி வகைகள்-11, வண்ண மீன்கள்-245, கடல் ஆமைகள்- 5, திமிங்கிலங்கள்-6, டால்பின்கள்-4 என மொத்தத்தில் 3,600 வகையிலான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. எனவே, இந்த உயிரினங்கள் வாழும் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ல் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவித்து, அதனைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மன்னார் வளைகுடாவுக்கு உள்பட்ட கீழக்கரை, ஏர்வாடி, பெரியபட்டணம், முத்துப்பேட்டை, முந்தல், வாலிநோக்கம் ஆகிய கடல் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடல் பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பாரம்பரிய , இயற்கை முறையில் வளரும் பாசிகளை சேகரம் செய்து மீனவ பெண்கள் தங்களது வருமானத்தினை ஈட்டி வருகின்றனர்.

ஆனால், சில ஆராய்சியாளர்களின் உதவியால் சூழலுக்கு எதிரான செயற்கை முறையிலான பாசி வளர்ப்பு எனவும் அதிக வருமானம் கிடைப்பதாகவும் கூறி கப்பாபைகஸ் என்ற கடல்பாசி வளர்க்கப்பட்டு வருகின்றது. இது சுற்று சூழலுக்கு பெரும் ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றது. தீவுகளில் வனத்துறையினர் கண்காணிப்பு செய்கையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் "கப்பாபைகஸ் ஆல்வரேசி' ‘kappaphycus alverizi’ (Enchaema Cottonii) என்ற கடல்பாசி பவளப் பாறைகளை மூடியிருப்பது தெரிய வந்தது. "ரப்பர்' போன்ற தன்மை கொண்ட இப்பாசிகள் பவளங்களில் படிந்து அவற்றின் சுவாசத்தை தடுத்து நிறுத்துகின்றன. இதனால் பவளப் பாறைகள் அழிவை சந்திக்கிறது.

கடந்த 1995ல், பிலிப்பைன்சியை சேர்ந்த குளிர்பான நிறுவனம் ஒன்று இந்த பாசியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது. இதை பவளப்பாறைகள் இல்லாத பாக்ஜல சந்தி கடற்பகுதியில் மீனவர்களை வளர்க்க செய்துள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமனாதபுரத்தினை சேர்ந்த அக்வாகல்சர் பவுண்டேசன் ஆப் இந்தியா (Aquaculture Foundation of India) உள்ளிட்ட சில தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களும், பேராசிரியர்கள் சிலரும் இதன் பின்னணியில் உள்ளனர். இதற்கு உதவி செய்துவருகின்றன.

செயற்கை பாசி வளர்ப்பு மூலம் சில நிறுவனங்களும், இடைத்தரகர்களும் பயன் பெற்று வருகின்றனர். பவளப் பாறைகள் அதிகம் கொண்ட மன்னார் வளைகுடாவில் இவற்றை வளர்க்க சாத்தியம் இல்லை என்ற நிலையிலும், பாக்ஜல சந்தியிலிருந்து கடல் வழியாக ஊடுருவிய "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசிகள் மன்னார் வளைகுடாவிலும் பரவி உள்ளது. தற்போது மன்னார் வளைகுடாவின் சிங்கிள், குருசடை, பூமரிச்சான் தீவுகளில் முற்றிலும் ஆக்கிரமித்துள்ள இப்பாசிகள், எஞ்சியுள்ள 18 தீவுகளிலும் விட்டு வைக்காது என்ற கவலை தற்போது எழுந்துள்ளது.

இப்பாசியால், பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதால், புவி வெப்பமடைவது தவிர்க்க முடியாததாகி விடும். அதே நேரத்தில் பேரலை, கடல் அதிர்வுகளை சமாளிக்கும் தன்மையை பவளப் பாறைகள் இழக்கும். இதனால் மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய உயிரினங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் கடலோர காவல் படை அலுவலகம் அருகில் இந்த வகை பாசி வளர்க்கப்பட்டு வருகின்றது. தற்போது மன்னார் வளைகுடாவில் முத்தையாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடல் பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியிலும் செயற்கை பாசி வளர்ப்பிற்கான முயற்சிகள் சில தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் நடைபெற்று வருகின்றது. இது கடல் வளத்தினையும், பல்லுயிர் சூழலினையும் பாதிப்பதோடு, மீனவ மக்களின் தொழில் பாதிப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தீவுகளும், பாசிகளும், கடல் வாழ் உயிரினங்களும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் அழிந்து வருகின்றது. தூத்துக்குடி மண்டலத்திலுள்ள தீவுகள்தான் ஆபத்தான அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த வேளையில் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் சுற்று சூழலை மாசுபடுத்தும் தொலிற்சாலைகளோடு கூட்டு வைத்து கொண்டு, அரசுக்கு தவறான தகவல்கள் கொடுத்து வருவதோடு மீனவ மக்களுக்கும், கடல் சூழலுக்கும் எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். செயற்கை பாசி வளர்ப்பு முறையினை அரசு தடுக்க வேண்டும். இயற்கையான பாசிகள், கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்காமல் இருக்க தொழிற்சாலை கழிவுகளும், பக்கிள் ஓடை உள்ளிட்ட நகர கழிவுகளும் கடலில் கலக்காமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லுயிர் சூழலுக்கு ஏற்படும் பேரிடர் தடுக்கப்பட வேண்டும்.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்வோர் மீது, பாதிப்பு என தெரிந்தே மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பூங்கா அழிவிற்கு துணைபோன ஆராய்ச்சியாளர்கள் மீது, கப்பாபைகஸ் பாசியினை மன்னார் வளைகுடா பகுதியில் பரவ செய்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது 1972-இந்திய வன விலங்கு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மிக அருகில், கடலில் ஊடுருவும் வகையில் பாசி வளர்ப்பிற்கு அனுமதித்த அதிகாரிகள் கண்டறியப்பட வேண்டும். இதுவரை அதனை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



ம.புஷ்பராயன், 9842154073

அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு.

Coastal People's Federation-CPF

No comments:

Post a Comment