ராமநாதபுரம்: தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து அங்குள்ள தீவுகளில் மிதவைகள் போடும் பணி நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் ஊர் திரும்பினர். மன்னார் வளைகுடா கடல்பகுதியானது பல்வேறு உயிரினங்களின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இச்சிறப்பின் காரணமாக தென்கிழக்கு ஆசிய பகுதியின் முதல் கடல்சார் தேசிய பூங்காவாக கடந்த 1980ல் மன்னார் வளைகுடா அறிவிக்கப்பட்டது. இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக, இங்குள்ள 21 தீவுகளின் அற்புதங்களை பொதுமக்களால் ரசிக்கமுடியாமல் போனது. இலங்கையில் போர் முடிவு பெற்று , அந்நாட்டு எல்லையில் பதட்டங்கள் குறைந்தன. இதை தொடர்ந்து மன்னார் வளைகுடா தேசிய பூங்காவை மீண்டும் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன் படி 21 தீவுகளை மண்டபம், கீழக்கரை, வேம்பார், தூத்துக்குடி என நான்கு பகுதிகளாக பிரித்தனர். இவற்றை எல்லை காணும் விதமாக தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. "மிதவைகளால் பாதிப்புகள் இல்லை,' என்பதை மீனவர்களிடம் அதிகாரிகள் விளக்கி கொண்டிருந்த நேரத்தில், மிதவைகள் அமைக்கும் பணி மறுபுறம் தொடங்கியது. தூத்துக்குடி பகுதியிலுள்ள வான், காசுவார், காரைசல்லி, விலங்குசல்லி தீவுகளில் மிதவகள் அமைக்க முயன்ற போது, அங்குள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பானதால், உடனடியாக மிதவை போடும் பணி நிறுத்தப்பட்டது. அதற்காக கொண்டு சென்ற உபகரணங்கள் மீண்டும் ராமநாதபுரம் கொண்டு வரப்பட்டன. இதற்கான பணியில் ஈடுபட்டவர்களும் ஊர் திரும்பினர். மீனவர் எதிர்ப்பை தொடர்ந்து அங்கு மிதவைகள் அமைக்கும் முடிவும் கைவிடப்பட்டது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை இயக்குனர் அருணாபாசுசர்க்கார் கூறியதாவது: தூத்துக்குடியில் மீனவர்கள் எதிர்ப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும்வகையில் இருந்ததால், அங்கு மிதவைகள் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மீனவ கூட்டமைப்புகளிடம் விளக்கியுள்ளதால் இங்கு மிதவைகள் போடும் பணி விரைவில் தொடங்கும், என்றார்.
ராமநாதபுரத்திலும் எதிர்ப்பு: தூத்துக்குடியை தொடர்ந்து ராமநாதபுரம் மீனவர்களும் மிதவைகள் போட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மன்னார் வளைகுடா மீனவ மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பால்சாமி கூறியதாவது: இச்செயலை கண்டித்து கடந்த 7ம் தேதி நடப்பதாக இருந்த வனத்துறை அலுவலக முற்றுகை போராட்டத்து போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். வரும் ஜூலை 19ல் அறக்கட்டளை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார். எதிர்ப்பு காரணமாக, மீண்டும் மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் செயல்பாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment