Friday, July 23, 2010

குருசடைத் தீவில் வனத்துறை அதிகாரிகளுடன்ஆட்சியர் ஆய்வு

23 Jul 2010 01:37:35 PM IST

குருசடைத் தீவில் வனத்துறை அதிகாரிகளுடன்ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம், ஜூலை 22: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகழிடமாக விளங்கும் உயிருள்ள பவளப் பாறைகளை, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொன்றுவரும் கப்பா பைகஸ் ஆல்வரேசி எனப்படும் வெளிநாட்டு கடல்பாசிகளை அழிக்க, வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக, ராமேசுவரம் தீவு பாம்பன் குந்துகால் அருகே குருசடைத்தீவில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், மாவட்ட வருவாய் அதிகாரி கி. பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குநர் ஆனந்தராஜ், வன உயிரின பாதுகாவலர் சுந்தரக்குமார், உதவி வனக் காப்பாளர் வீரபத்திரன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பேட்டரிசன் உள்பட உயர் அதிகாரிகள் பலரும் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
குழி மெல்லுடலிகள் எனப்படும் பவளப்பாறைகள் மன்னார் வளைகுடாவில் அதிக அளவில் உள்ளன. மிருதுவான இவ்வுயிரினங்கள், அரிய வகை மீன்கள், தாவரங்கள், 700 வகையான பவள உயிரிகள் போன்றவற்றின் உறைவிடமாகவும், இனப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கின்றன. மேலும், கடலில் வசிக்கும் பாலூட்டி வகைகளான கடல் பசு, திமிங்கலங்கள், டால்பின்கள் போன்ற விலங்குகள் வாழ்வதற்கும் இவை பெரிதும் உதவியாக இருக்கின்றன.
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகழிடமாகத் திகழும் மன்னார் வளைகுடாவில் உள்ள இந்த பவளப் பாறைகளுக்கு, தற்போது ஒரு ஆபத்து வந்துள்ளதை வனத்துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 1995-ல் இறக்குமதி செய்யப்பட்ட கப்பாபைகஸ் ஆல்வரேசி எனப்படும் கடல்பாசி, மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் உள்ள பவளப் பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கின்றன. வேதிப் பொருள்களான வினீகர், அகார் அகார், கெராஜின் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்காக, கடலில் இந்தப் பாசியை தனியார் தொழில் நிறுவனங்கள் வளர்த்து வருகின்றன. ஆனால், இந்தப் பாசிகள் பவளப்பாறைகளுக்கு தீங்காகி வருகின்றன. இவை, குருசடைத்தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவுகளில் உள்ள பவளப்பாறைகளைமுற்றிலுமாக ஆக்கிரமித்து, அவற்றை உயிரிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன. எனவே, இவற்றை முற்றிலுமாக அப்புறப்படுத்தி, பவளப்பாறைகளையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி குருசடைத் தீவில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், வன உயிரின பாதுகாவலர் சுந்தரக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கப்பா பைகஸ் ஆல்வரேசி என்பது, தனியார்களால் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தொழிலுக்காக கடலில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு பாசி இனம். கடலில் 150 வகையான பாசிகள் இருந்தாலும், அவை அனைத்தும் பவளப்பாறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவே இருக்கின்றன. ஆனால், இந்த கப்பா பைகஸ் ஆல்வரேசி மட்டும் பவளப்பாறைகளின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக மூடி உயிரோடு அழித்துக் கொன்று விடுகின்றன. பவளப்பாறைகள் குறித்து வேறு சில ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போதுதான் இப்பாசி பவளப்பாறைகளை அழித்துக் கொண்டிருப்பதை பற்றி அறிய முடிந்தது. இப்பாசி ரப்பர் போல இருப்பதால், மீன்கள் இவற்றை சாப்பிட்டாலும் மெல்ல முடியாமல் போட்டுவிடுகின்றன.
அமெரிக்காவில் ஹவாய் தீவில் கெனோகி வளைகுடா பகுதியில் இப்பாசிகள்அதிகமாக வளர்ந்து, அவற்றால் பெரும்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், தற்போது இவற்றை அதிக செலவு செய்து கடலில் இருந்து அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதே நிலை, மன்னார் வளைகுடா கடல் பகுதி பவளப்பாறைகளுக்கும் வந்து விடக்கூடாது என முடிவெடுத்து, அவற்றை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடலில் மூழ்கி நீச்சல் தெரிந்தவர்கள் மூலமே இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க முடியும்.
அவ்வாறு அப்புறப்படுத்தும்போது, பவளப்பாறைகளுக்கும் எந்தவித சேதமும் ஏற்படாதவாறு, இப்பாசிகளை அழிக்க வேண்டும். தற்போது, இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை துவக்கியுள்ளோம். விரைவில் இவற்றைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சுனாமி போன்ற கடல் அலைகளின் சீற்றத்தின்போது, பவளப்பாறைகள் இருந்தததால்தான், பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இதற்காகவும், பவளப்பாறைகளை பாதுகாப்பது அவசியமாகிறது என, அவர்கள் தெரிவித்தனர்.


© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment