Sunday, July 25, 2010

மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் எரியும் கீரி செடி: மலராமல் கருகும் பூக்கள்

ராமநாதபுரம் : மன்னார்வளைகுடா கடல் தீவுகளில், எரியும் தன்மை கொண்ட கீரிசெடிகளின் பூக்கள் மலராமல் கருகிவருகின்றன. இதற்கான காரணம் புரியாமல், வனத்துறையினரும் குழப்பத்தில் உள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் காணப்படும் அரிய வகை தாவரங்களில் "கீரி' செடியும் ஒன்று . இவை பூத்திருக்கும் போது, தூரத்திலிருந்து பார்த்தால், கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல காட்சியளிக்கும். பார்வைக்கு மட்டுமின்றி, இவற்றின் படைப்பும் எரியும் தன்மை கொண்டது தான். பச்சை செடியில், தீ மூட்டினால் பற்றி எரியும் இவற்றுக்கு, அதன் மலர்களே பலம். கீரி செடிகள் பருவ மழை காலத்தில், பூக்கும் தன்மை கொண்டவை. இவை, காய் ஈட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காற்றின் உவர்ப்பு தன்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கை காரணங்கள் கூறப்படுகிறது. இருப்பினும், மற்ற தாவரங்களை விட எதையும் தாங்கி வளரும் தன்மை இதற்கு உண்டு. உவர்ப்பு காற்றால் அனைத்து தாவரங்களும் கருகி வரும் நிலையில், கீரி செடிகள் மட்டும் செழித்து வளர்ந்துள்ளதே இதற்கு சாட்சி. இருந்தும் பூக்கள் மட்டும் மலராமல், கருகி உதிர்ந்து வருகின்றன. மர்ம நோய் தாக்குதல் ஏதேனும், கீரி செடியை பாதித்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவை உறுதி செய்யப்படாத நிலையில் , இந்நிலைக்கான காரணத்தை அறிய முடியாமல், வனத்துறையினரும் குழப்பத்தில் உள்ளனர். முறையாக சோதனை செய்து, இச்செடியின் பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment