22 Jul 2010 10:26:01 AM IST
கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவில் விரைவில் ஒளிரும் மிதவை வேலிகள்: மாவட்ட ஆட்சியர் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 21: ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 சிறு பவளப்பாறைத் தீவுகளைப் பாதுகாக்கும் வகையிலும் மீனவர்களின் வாழ்வுரிமை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையிலும் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவுக்கு ஒளிரும் மிதவை வேலிகள் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் புதன்கிழமை தெரிவித்தார்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளையும் 4 மண்டலங்களாகப் பிரித்து, கீழக்கரை, மண்டபம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து தலா 7 தீவுகளும் சாயல்குடி அருகே வேம்பாரை மையமாக வைத்து 4 தீவுகளும், தூத்துக்குடியை மையமாக வைத்து 3 தீவுகளுமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தீவுகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்பேரில், ரூ. 2 கோடி மதிப்பில் தீவுகளைச் சுற்றி கடலில் ஒளிரும் மிதவை வேலிகளை விரைவில்
வனத் துறை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இத் தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடல் பாசிகள்-150, கடல்புற்கள்-13, சதுப்பு நிலத் தாவரங்கள்-14, பவள உயிரிகள்-137, முத்துச்சிப்பி வகைகள்-11, வண்ண மீன்கள்-245, கடல் ஆமைகள்- 5, திமிங்கிலங்கள்-6, டால்பின்கள்-4 என மொத்தத்தில் 3,600 வகையிலான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்த உயிரினங்கள் வாழும் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ல் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவித்து, அதனைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இத் தேசியப் பூங்காவைப் பாதுகாக்கவும், அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் மேலும் அழிந்து விடாமல் பாதுகாக்கவும் 21 தீவுகளையும் சுற்றி ஒளிரும் மிதவை வேலிகளை கடலில் மிதக்க விட மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து, அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு தீவிலிருந்தும் 500 மீ. சுற்றளவுக்கு ஆழம் குறைந்த கடல் பகுதியில் மிதவை வேலி போடப்படும். கடலில் மிதக்கும் மிதவை ஒன்றின் எடை 30 கிலோவாகவும் அதே மிதவைக்கு அடியில் இருக்கும் சிமெண்ட் கல் ஒன்றின் எடை 350 கிலோவாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையில் துருப்பிடிக்காத இரும்புச் சங்கிலி இணைக்கப்பட்டிருக்கும். ஒரு மிதவை ஒன்றின் விலை ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் மொத்தம் 500 மிதவைகள் ரூ. 1.50 கோடி மதிப்பிலும் தயாரிக்கப்படவுள்ளது. மொத்தத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் 21 தீவுகளையும் சுற்றி ஒளிரும் மிதவை வேலிகள் அமைக்கப்படும்.
ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதி 10,500 சதுர கி.மீ. இதில் 560 சதுர கி.மீ மட்டும் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டு, தற்போது அதைச் சுற்றி மட்டுமே மிதவை வேலிகள் அமைக்கப்படுகின்றன. மிதவை வேலிகளால் தேசியப் பூங்காவின் எல்லைதான் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, மீனவர்களின் வாழ்வுரிமை எந்த வகையிலும் பாதிக்காத வகையில்தான் வேலிகள் அமைக்கப்படுகின்றன. அட்ச ரேகை, கடக ரேகை ஆகியனவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கடலில் வேலிகள் நிர்மாணிக்கப்படும். ஒளிரும் மிதவை வேலிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மீனவர்கள் வழக்கம் போலவே போய் வரலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால், தடை செய்யப்பட்ட உயிரினங்களைப் பிடித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கி. பாலசுப்பிரமணியம், வன உயிரின பாதுகாவலர் சுந்தரக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆனந்தராஜ், தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேட்டரிசன், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் செந்தில்குமார், வனச் சரகர்கள் ராஜேந்திரன், திலகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
© Copyright 2008 Dinamani
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment