Friday, July 30, 2010

ஸ்டெர்லைட் விவகாரம்: களை கட்டும் போராட்டங்கள்

ஸ்டெர்லைட் விவகாரம்:
களை கட்டும் போராட்டங்கள்... கல்லா கட்டுவதற்கா?






மத்திய அரசுக்கு 747 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவன துணைத்தலைவர் வரதராஜன் கைது’’ என்று எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வருவதை, அந்த நிறுவனம் தடுக்க எத்தனையோ முயற்சிகளில் இறங்கியது. அதில் ஓரிரு பத்திரிகைகள் மட்டும் பின்வாங்கி, அடக்கி வாசித்தது. ஆனால், பெரும்பாலான பத்திரிகைகளிலும் டி.வி.க்களிலும் ‘ப்ளாஷ்’ செய்தியாக வந்ததும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் களை கட்டியுள்ளன.

தூத்துக்குடியில் 1996ல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கும் போதே, கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாமிரத் தாதுவை இறக்குமதி செய்து, அதைப்பிரித்தெடுத்து தமிரத் தகடு மற்றும் கம்பி உற்பத்தி செய்யும் இந்த ஆலையை திறக்கக் கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள் சத்தமின்றி ஓய்ந்தன.

இப்போது வரி ஏய்ப்பு விவகாரம் அம்பலமானதும், போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, அரசியல் கட்சிகளும், பல சமூக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து, ஜூலை 26ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முடிவில் மாவட்ட ஆட்சியர் வெளியே வந்து தங்களது மனுவை வாங்க வேண்டுமென வலியுறுத்தினர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்ததால் ஆட்சியர் பிரகாஷ் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி தர்ணாவில் ஈடுபட்டு தங்களை மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாகக் கூறி மனுக்களை கலெக்டர் அலுவலகம் முன்பு தீயிட்டு கொளுத்தினர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜோயலை சந்தித்தோம்.

‘‘மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக ஆய்வின்படி சுற்றுச்சூழல் மாசு மற்றும் நிலத்தடி நீர் மாசுபாட்டினால் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி, மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு மூலக்காரணமே ஸ்டெர்லைட்தான். நம்ம கரன்ட் பில் கட்டலைன்னா உடனே சர்வீஸை கட் பண்ணிடுவாங்க. ஆனா, இந்த நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளது. மக்களையும் அரசையும் ஏமாற்ற நலத்திட்டங்கள் என்ற பெயரில் மோசடி செய்துள்ளது. தொழிற்சாலையில் வேலைபார்ப்பதில் ஐந்தில் ஒருபகுதி கூட தூத்துக்குடிகாரங்க கிடையாது. எல்லாம் வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்கு சேக்குறாங்க. எல்லாவகையிலும் மக்களை பாதிக்கிற இந்த ஆலையை அரசு உடனே இழுத்துமூடணும்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ‘‘இந்த தொழிற்சாலையை தொடங்குவதற்கு, நாங்கள் கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது, யாருடைய அனுமதியும் இல்லாமல் இரண்டாவது ப்ளான்ட் தொடங்கிட்டாங்க. இந்தத் தொழிற்சாலையை அரசு இப்போதே மூட வேண்டும் இல்லையெனில் தூத்துக்குடி ‘போபால்’ ஆக மாறிவிடும்’’ என்றார்.

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழக ஒருங்கிணைப்பாளர் அண்டன் கோமஸிடம் பேசினோம். ‘‘2005&ல் இருந்து 2010 வரைக்கும் 750 கோடி ரூபாய் மோசடின்னு இன்னைக்கு தெரியுது. இதை கண்டுபிடிக்க 5 வருஷம் தேவையா? தெற்கு வீரபாண்டியபுரம், குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் படிப்படியாக மாறிவருகிறது. மாதம் தோறும் 8 முதல் 10 கப்பல்களில் தாமிரத் தாதுக்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது. இதனை முறையில்லாமல் துறைமுகத்தில் இறக்குவதால் கடல் மாசுபட்டு மீன்வளம் பாதிக்கப்படுகிறது’’ என்றார்.

தூத்துக்குடி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம். ‘‘இந்த தொழிற்சாலையிலுள்ள விஷவாயு தாக்கி பலர் மரணமடைஞ்சிருக்காங்க. இந்த விஷயம் வெளிய வந்ததே கிடையாது. ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலையை குறைந்த விலைக்கு லீசுக்கு எடுத்து, அங்க இருந்து விலைமதிப்பு மிக்க பாக்சைட் தாதுப் பொருளை, இந்த வேதாந்தா குழுமம்தான் வெட்டி எடுத்துக்கிட்டு இருக்கு. இவங்களுக்கு இடையூறாக உள்ள பழங்குடி மக்களும் அங்கிருந்து துரத்தப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகள் தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிரொலிக்க வேண்டும். மனித உயிரை துச்சமாக மதிக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மோசடிகளை பத்திரிகையாளர்கள்தான் வெளியே கொண்டுவரவேண்டும்’’ என்றார்.

கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்ப-ராயனிடம் பேசினோம். ‘‘இந்த ஆலை தொடங்கினதிலிருந்தே சட்ட விரோதமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவர்றாங்க. 2300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி இன்றி ஆலை விரிவாக்கம் செய்தாங்க. இதை எதிர்த்து எங்க அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி இந்த வேலையை தடை செஞ்சிட்டோம். 2004&ல் உச்சநீதிமன்ற கண்காணிப்புக்குழு பரிந்துரைகள் எதையும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை கடைபிடிக்கவில்லை. இதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நடைமுறைபடுத்தவில்லை. இவை அனைத்தும் மத்திய மாநில அரசுகளின் துணையோடுதான் நடைபெறுகிறது. மக்களுக்கு பிச்சை போடுறது போல நலத்திட்டங்களை கொடுக்குறாங்க. வரதராஜனை கைது செய்த கலால் வரி அதிகாரிகளைக்கூட இடமாற்றம் செய்ய வேலை நடந்துகிட்டு இருக்கு’’ என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு பற்றி ஸ்டெர்லைட் நிறுவன செய்தித் தொடர்பாளர் ராஜேஷிடம் கேட்டோம். ‘‘இதுல நாங்க ஏதாவது சொல்லப்போய், அது பெரிதானால் நல்லாவா இருக்கும். இதை அப்படியே விட்டுருவோம்’’ என்றார் பெருந்தன்மையாக(!).

இத்தனை நடந்தும் தூத்துக்குடி மக்கள் பேச்சு மட்டும் வித்தியாசமாக இருந்தது. ‘‘இப்படி எல்லாரும் மல்லுக்கட்டி எதிர்ப்பாங்க. கொஞ்ச நாளைக்கு பின்னாடி, அந்த கம்பெனிக்காரங்க பணத்தை கொடுத்தா, எல்லாரும் சைலன்டா போயிடுவாங்க. இதுவரை நடந்ததும் இதுதான். இனிமேல் நடக்கப் போவதும் இதுதான்’’ என்று வெறுப்பை உமிழ்ந்தார்கள்.

போராட்டக்காரர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!













பி.எம்.கணேஷ்

No comments:

Post a Comment