Friday, July 30, 2010

மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்

30 Jul 2010 10:18:17 AM IST

நடப்பு ஆண்டில் 1.25 லட்சம் மரக்கன்று நடத் திட்டம்

ராமநாதபுரம், ஜூலை 29: நடப்பு ஆண்டில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நடத் திட்டமிடப்பட்டிருப்பதாக வனத் துறை அமைச்சர் என்.செல்வராஜ் தெரிவித்தார்.
ராமேசுவரம் அருகே குருசடைத்தீவில் பவளப்பாறைகளுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் கப்பா பைகஸ் ஆல்வரேசி என்ற பாசிகள் குறித்து வியாழக்கிழமை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நாட்டில் வனம், கடல் ஆகிய எந்த பகுதிகளும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை. அவற்றைப் பாதுகாப்பது அந்தந்த மாநிலத்தின் கடமையாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 21 தீவுகளும் கடல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கப்பா பைகஸ் ஆல்வரேசி என்ற கடல்பாசி பவளப்பாறைகளை முற்றிலுமாக ஆக்கிரமித்து அதனை உயிரிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. கடல் நீரோட்டம் மூலமாக மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் பரவி பவளப்பாறைகளை அழித்து வருகிறது.
இவற்றை விரைவாக அழிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் தனியாருக்குச் சொந்தமான காடுகளில் 80,417 ஏக்கரில் ரூ.28.94 லட்சம் செலவில் மரக்கன்றுகளை வைத்திருக்கிறோம்.
இந்த ஆண்டு 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்திருக்கிறோம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் விரைவில் மேம்படுத்தப்படும்.
மீன் வளங்களையும் வன வளங்களையும் பாதுகாப்பதில் வனத் துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்றார் அமைச்சர்.
முன்னதாக ராமநாதபுரம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் மீனவர்களின் குறைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
குறை கேட்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன், குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், மண்டல வனப் பாதுகாவலர் மல்லேசப்பா, வன உயிரினக் காப்பாளர் சுந்தரக்குமார், நயினார்கோயில் ஒன்றியத் தலைவர் சுப.த.திவாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பால்சாமி, புஷ்பராயர் உள்பட பலரும் அமைச்சரைச் சந்தித்து மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.


© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment