Sunday, October 17, 2010

அக்.29-ல் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் திட்டம்

16 Oct 2010 11:56:13 AM IST

அக்.29-ல் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் திட்டம்


ராமநாதபுரம், அக். 15: கடலோர மேலாண்மை ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கண்டித்து இம் மாதம் 29 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக ராமநாதபுரத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் மீன்பிடித் தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பின் தலைவர் அ. பால்சாமி, கடலோர மக்கள் கூட்டமைப்பின் கன்வீனர் புஷ்பராயன், நிரபராதி மீனவர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம், விசைப்படகு மீனவர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் என்.ஜே. போஸ் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்ததாவது:
கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீனவர்களைப் பாதுகாக்கவும் 1991-ல் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டம் அறிவிப்பாகத்தான் இருந்ததே தவிர, நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஆனால், அதே நேரத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டுள்ளது.
சுனாமிக்குப் பிறகு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின் பேரில், கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டம் கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல்களுக்குள்ளும் கடற்கரையிலிருந்து நிலப் பரப்பில் 1000 மீ. வரையும் மீனவர்கள் இருக்கக் கூடாது எனவும், கடற்கரையோரங்களில் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், சுற்றுலா விடுதிகள், சேதுக் கால்வாய் திட்ட விமானத் தளங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியனவும் இருக்கலாம் என்றும் கூறுகிறது.
இச் சட்டத்தின் மூலம் கடற்கரையோரங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால், அதன் கழிவு நீர் கடலில் கலந்து மீன் வளத்தைப் பாதித்து விடும். மீனவர்களின் நலனுக்கு எதிராக இச் சட்டம் உள்ளது. இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் தொழிற்சாலைக் கழிவு நீர்
கடலில் கலக்க அனுமதிப்பதில்லை. எனவே, மீனவர்கள் நலனுக்கு எதிரான கடலோர மேலாண்மை ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்துவதைக் கைவிட வலியுறுத்தி தேசிய மீனவர் பேரவை சார்பில் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment