Friday, October 22, 2010

கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கையை கைவிடக் கோரி அக். 29 மீனவர்கள் வேலைநிறுத்தம்

22 Oct 2010 12:13:02 PM IST

கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கையை கைவிடக் கோரி அக். 29 மீனவர்கள் வேலைநிறுத்தம்


தூத்துக்குடி, அக். 21: கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணை 2010- ஐ கைவிடக் கோரி இம் மாதம் 29-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த போராட்டத்தை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தூத்துக்குடி ஆயர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ம. புஷ்பராயன் தலைமை வகித்தார்.
இதில், தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோபாய், விசைப்படகு தொழிலாளர் சங்கத் தலைவர் பார்த்தீபன், வடபாகம் நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் ஜெயபால், செயலர் ஜான்சன், திரேஸ்புரம் நாட்டுப்படகு
மீனவர் சங்கத் தலைவர் ராபர்ட், கடலோர மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரபாகர், வீராங்கனை அமைப்பாளர் பேராசிரியை பாத்திமாபாபு, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பங்குத் தந்தையர் விக்டர் லோபோ, செல்வம், பிரதீப், ஜான், ஜுடு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திரேஸ்புரம், பாத்திமா நகர், லயன்ஸ் டவுன், தோமையார்புரம், இனிகோநகர், லூர்தம்மாள் புரம், சிலுவைப்பட்டி,ராஜபாளையம், சவேரியார்புரம், வெள்ளப்பட்டி, தருவைக்குளம், சிப்பிகுளம், கீழவைப்பார், பெரியசாமிபுரம், வேம்பார் உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு 1991-ல் கொண்டு வந்த கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணை மீனவர்களையும், கடற்கரையினையும் பாதுகாக்கும் வகையில் அமைந்து இருந்தது. ஆனால் தற்போது அதே பெயரில் பல்வேறு திருத்தங்கள் செய்து கொண்டு வரப்படும் கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணை 2010 மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து, கடலையும், கடல் வளத்தையும் அழித்து, கடற்கரையிலிருந்து மீனவ மக்களை அப்புறப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
துறைமுகம் கொண்டு வரும் முன்பு, சுற்றுச் சூழல் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் தற்போதைய அறிவிக்கையில் இது போன்ற பல்வேறு விஷயங்கள் விடுபட்டுள்ளன.
2009 ஜூலை 2-ம் தேதி மக்கள் கருத்து கேட்கப்பட்டு, மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், கடலையும், கடற்கரையையும் பாதுகாக்கும் வகையில் அமைந்த இறுதி எல்லை (ஊண்ய்ஹப் ஊழ்ர்ய்ற்ண்ங்ழ்) என்ற அறிக்கையை முற்றிலும் புறக்கணித்து விட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த அறிவிக்கை ஆணை வெளியிடப்படுகிறது.
எனவே, இம் மாதம் 29-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் சார்பில் இந்த அறிவிக்கை ஆணையை முற்றிலும் நிரந்தரமாக கைவிடக் கோரியும், 1991-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை ஆணையை எவ்வித திருத்தமும் இன்றி மூல வடிவில் அமல்படுத்தக் கோரியும் வேலைநிறுத்தம், மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்புவது உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment