Saturday, October 30, 2010

தூத்துக்குடியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

30 Oct 2010 02:46:11 PM IST

தூத்துக்குடியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி, அக். 29: கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கை ஆணை 2010- ஐ கைவிடக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரைஉள்ள மீனவர்கள் யாரும் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாவட்டத்தில் சுமார் 350 விசைப்படகுகள், சுமார் 3000 நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி பழைய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ம. புஷ்பராயன் தலைமை வகித்தார்.
கடலோர கிராம ஊர்க்கமிட்டி தலைவர்கள், சங்கத் தலைவர்கள், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் கலந்து கொண்டு பேசினார். கடலோர மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வடபகுதி நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜான்சன், ஜனநாயக மீனவர், மீன்சார்பு தொழிலாளர் சங்கத் தலைவர் ஜார்ஜ் கோமஸ், தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் ஜோபாய், விசைப்படகு தொழிலாளர் சங்கத் தலைவர் பார்த்தீபன், தமிழக மீனவர் அமைப்பு தலைவர் தென்னவன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை சுந்தரி மைந்தன், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் மற்றும் கடலோர கிராமங்களின் பங்குத்தந்தையர்கள், ஊர் தலைவர்கள், மீனவர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆலந்தலை, அமலிநகர், புன்னக்காயல், பழையகாயல், வீரபாண்டியன்பட்டணம், மணப்பாடு, வெள்ளப்பட்டி, கீழவைப்பார், சிப்பிக்குளம், திரேஸ்புரம், வேம்பார் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களையும்ச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

© Copyright 2008 Dinamani

No comments:

Post a Comment