30 Oct 2010 02:50:03 PM IST
கடலோர மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி,அக்.29: மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய கடலோர ஒழுங்காற்று ஆணையை ரத்து செய்ய வேண்டும் என திருநெல்வேலியில் கடலோர மக்கள் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் பி.ராயப்பன் தலைமை வகித்தார். சாத்தை செல்வராஜ், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு ஆண்ட்ரூ டீரோஸ், போராட்ஹடக் குழு நிர்வாகிகள் பெருமணல் ஜெரால்டு, கூத்தங்குழி சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீனவர்களின் நலனுக்கு எதிராக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள கடலோர ஒழுங்காற்று ஆணையை ரத்து செய்ய வேண்டும்; கடல் தொழிலில் வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்கும் விதமாக கொண்டு வரப்படும் சட்டங்களும், திட்டங்களும் திரும்ப பெறப்பட வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் மற்றும் பல்வேறு நாடுகளின் மத்திய அரசு ஏற்படுத்த இருக்கும் அணு ஆயுத ஒப்பந்தங்களை அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும்; கடலோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகள் அகற்ற வேண்டும்; உவரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பபாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டக் குழு நிர்வாகிகள் இனிதா, கூடுதாழை இளங்கோ, கூட்டப்பனை ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உவரி, கூடுதாழை, கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, பெரியதாழை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இப் போராட்டத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் படகுகளில் மீனவர்கள் கறுப்புக் கொடி கட்டியிருந்தனர்.
© Copyright 2008 Dinamani
No comments:
Post a Comment