By அ. அருள்தாசன்
06 Oct 2010 02:06:41 PM IST
'நலம் குன்றிய' மீனவர் நல வாரியம்! அலைக்கழிக்கப்படும் மீனவர்கள்
நாகர்கோவில், அக். 5: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் நல வாரியம் மூலம் பயன்பெற முடியாமல் மீனவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாதந்தோறும் நடைபெறும் மீனவர் குறைதீர் கூட்டத்தில் இதுகுறித்த பிரச்னை எழுப்பப்பட்டாலும் உரிய தீர்வு காணப்படுவதில்லை என்று மீனவர் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் மீனவர் நல வாரியம் தொடங்கப்படும் முன் உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியத்தில் மீனவர்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் பேர் உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் சேர்ந்திருந்தனர். 2007-ம் ஆண்டில் மீனவர்களுக்காக தனியாக மீனவர் நலவாரியம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியத்திலிருந்து மீனவர்கள் நீக்கப்பட்டு, அவர்கள் மீனவர் நலவாரியம் மூலம் பணப் பயன்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது குமரி மாவட்டத்தில் மீனவர் நலவாரியத்தில் 33917 ஆண்கள், 13500 பெண்கள் என்று மொத்தம் 47417 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் ஏற்கெனவே உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெற்று, பின்னர் நீக்கம் செய்யப்பட்டுள்ள மீனவர்கள் பலர், மீனவர் நலவாரியத்தில் பயன்பெற முடியாத நிலையுள்ளது.
பெண்களுக்கு கல்வி உதவித்தொகை, இறப்பு, விபத்து நிதியுதவி, திருமண நிதியுதவி, கர்ப்பிணிகளுக்கு உதவி என பல்வேறு உதவித்தொகைகள் மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகளைப் பெறுவதற்கு 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியுள்ளது. 2007-ம் ஆண்டில் உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 62 அல்லது 63 வயதுள்ளவர்கள், மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவதற்குள் தங்களது 65-வது வயதில் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால் அவர்களால் மீனவர் நலவாரியம் மூலம் எவ்வித பயன்களையும் பெற இயலவில்லை.
மீனவர்களுக்கான உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரிய பதிவை தொழிலாளர் துறை ரத்து செய்துவிட்டது. மீன்துறை மூலம் மீனவர் நல வாரியத்தில் அவர்கள் உறுப்பினர்களாக சேர வேண்டும் என்று பணிக்கப்பட்டது. இதற்காக தொழிலாளர் துறை அலுவலகத்துக்கும், மீன்துறை அலுவலகத்துக்கும் மீனவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து ஆலோசித்து முடிவு செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குழு அமைக்கப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்ட அக் குழுவின் கூட்டங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் பங்கேற்காததால், பிரச்னை இப்போதும் தொடர்கிறது.
மீனவர் நல வாரியத்தில் சேர்ந்துள்ள மீனவர்கள் பலருக்கு இன்னும் அட்டைகள் வழங்கப்படவில்லை. விவசாயிகள், தையல் தொழிலாளர் நல வாரியங்களுக்கு தனியாக அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஆனால், மீனவர் நல வாரிய அலுவலகப் பணிகளை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகமே மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளதால் பணிச்சுமை என்று கூறி, நலவாரிய அட்டைகள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன.
இதுதவிர, மீனவர்களை நல வாரியத்தில் சேர்த்து அடையாள அட்டைகளை வாங்கித் தருவதாகக் கூறி, சில தொழிற்சங்கத்தினர் ஒவ்வொரு மீனவர்களிடமும் ரூ.100, ரூ.200 என்று வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'மீனவர்களுக்கு பயன்களைக் கிடைக்கச் செய்வதில் மீனவர் கூட்டுறவு சங்கங்களும் அக்கறை காட்டுவதில்லை; உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தால் ஏதாவது காரணங்களைக் கூறி அவற்றை தள்ளுபடி செய்துவிடுகின்றனர்' என்கிறார் நெய்தல் மக்கள் இயக்க செயலர் குறும்பனை சி.பெர்லின்.
உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் மீனவர்கள் இருந்தபோது அவர்களது 9, 10, 11, 12ஆம் வகுப்பு பயிலும் பெண் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்து வந்தது. ஆனால், மீனவர் நல வாரியத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் உதவித்தொகை என்று கூறுகிறார்கள். இதுபோல் இயற்கை மரண நிதியாக ரூ.17 ஆயிரம், கண் கண்ணாடி ஆகியவை உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்டது. மீனவர் நல வாரியத்தில் ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. கண் கண்ணாடி வழங்கப்படுவதில்லை என்றார் அவர்.
2006, 2007ஆம் ஆண்டுகளில் உதவித்தொகை கேட்டு உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியத்தில் மீனவர்கள் அளித்த மனுக்கள் அனைத்தும் 2007-க்குப் பின் மீனவர் நலவாரிய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் இப்போதுவரை தேங்கிக் கிடக்கின்றன.
எனவே, நல வாரிய பயன்களைப் பெறும் வழிமுறைகளை எளிதாக்க வேண்டும்; அடையாள அட்டைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்; உரிய மனுக்களுக்கு உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பு.
© Copyright 2008 Dinamani
No comments:
Post a Comment