Saturday, October 30, 2010

29.10.2010 அன்று திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முன்பு நடை பெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 3,000 மீனவர்கள் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

கடலோர மக்கள் கூட்டமைப்பு

A – 107/1, 14 வது குறுக்குத் தெரு, ஜவகர் நகர்,

அரசு அலுவலர் குடியிருப்பு , திருநெல்வேலி 627007.

தொலைபேசி : 0462-2554220

மின்னஞ்சல் : cpfsouth@gmail.com

அலைபேசி: 98421 54073.

நாள் : 29.10.2010.

பெறுநர்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

திருநெல்வேலி மாவட்டம் ,

திருநெல்வேலி .

பொருள் : மத்திய அரசு கொண்டு வந்துள்ள கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010 ஐ முழுமையாக கைவிடக்கோரி மனு அளித்தல்

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,

29.10.2010 அன்று திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முன்பு நடை பெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 3,000 மீனவர்கள் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

கடலோர சமூகங்களுக்கு சாவு மணி அடிக்கும் நோக்கில் கடற்கரையில், கடல் பரப்பு மீது இருந்து மீனவர்களை விரட்டும் மத்திய அரசின் கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை 2010 முழுமையாகக் கைவிடக்கோரி திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவர்கள் சார்பாக நெல்லை சந்திப்பு தொடர் வண்டி நிலையம் முன்பு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதின்

தீர்மானங்கள்

1.இந்திய நாட்டின் கடற்கரைகளை பாதுகாப்பதாக சொல்லிக்கொண்டு, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைத் அமைச்சகம் தனது அமைச்சகத்தின் இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் , கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை 2010 என்ற பெயரில் அறிவிக்கை ஆணை ஒன்றை ஆங்கில மொழியில் மறைமுகமாக வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டு வரும் போது , இப்படி மக்களுக்கு எட்டாத ,மக்கள் பயன்படுத்தாத இணைய தளத்தில் , மக்களுக்கு புரியாத மொழியில் வெளியிட்டு கருத்து கேட்கும் முறையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2. இப்படி குறுக்கு வழியில் கருத்து கேட்கும் மத்திய அரசின் வழி முறையினால், ஜனநாயக விரோத போக்கினால் அரசின் உள்நோக்கங்களை மீனவர்கள் சந்தேகிக்க வேண்டியுள்ளது. மீனவர்கள் தொடர்பாக அரசு எடுக்கும் எந்த முடிவுகளையும் அவரவர் தாய் மொழியிலே அறிந்து கொள்ள, செய்தித்தாள்,மற்றும் தொலைக்காட்சி மூலமாக பாமர மீனவர்கள் அறிந்து கொள்ள,புரிந்து கொள்ள அரசு வழிமுறைகள் செய்யவேண்டும் என்று இந்த மீனவர் திரள் வலியுறுத்துகிறது.

3.இந்த கடலோர அறிவிக்கை ஆணை 2010 வெளியிடப்பட்டு இன்று வரை 45 நாட்கள் கடந்தும் கூட, இந்த மீனவர் விரோத, கடல் சுற்றுச் சூழலுக்கு எதிரான அறிவிக்கை ஆணை குறித்து இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களோ,தமிழக அரசோ,தமிழகத்தில் உள்ள எதிர்க் கட்சிகளோ , இந்தக் கடலோர அறிவிக்கை ஆணை 2010 குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காதது மீனவர்களாகிய எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இப்படி மீனவர் நலனில் அக்கறை இல்லாத அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எங்களின் கடுமையான கண்டனங்களை இந்தக் மாபெரும் கூட்டத்தின் வாயிலாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

4.மீனவர்களின் ஓட்டுக்களை மட்டும் வாங்கிக் கொண்டு, கடற்கரையில்,கடல் பரப்பில்,கடல் தொழிலில் பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களுக்கு சாதகமான சட்டங்களையும் , திட்டங்களையும், கண் பொத்தி ,கை கட்டி ,வாய் மூடி வரவேற்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் வரும் தேர்தல்களில் மீனவர்கள் முற்றிலும் புறக்கணிப்பர் என்று இந்தக் கூட்டம் எச்சரிக்கை விடுக்கிறது.

5. கடந்த 2009 ஜூலை மாதத்தில் இந்திய மீனவர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கடலோர மண்டல மேலாண்மை அறிவிக்கை ஆணையை (CMZ 2008) , பல்வேறு கட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகும் , மீண்டும் மத்திய அரசு அதே திட்டங்கள் அடங்கிய அறிவிக்கை ஆணையை தற்போது பெயர் மட்டும் மாற்றி , புதிய கடலோர அறிவிக்கை ஆணை 2010 என்று வெளியிட்டு மாபெரும் மோசடி செய்திருப்பதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் அரசுகள் நடத்தும் கருத்து கேட்புகள் ,கருத்துக் கணிப்புகள்.கலந்துரையாடல்கள் என்பது எல்லாம் ஜனநாயகத்தில் கேலிக் கூத்துக்களாகிவிட்டன என்பதை இந்தக் கூட்டம் வருத்ததோடு பதிவு செய்கிறது.

6. அழிப்பேரலைக்குப் பிறகு,அரசு அசுர வேகத்தில் ,தொடர்ந்து பல சட்டங்கள், ஆணைகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் மூலம் இந்திய மீனவர்கள் மீதும்,கடற்கரைகள் மீதும்,மீன் பிடித் தொழில் மீதும் பல தொடர் தாக்குதல்களை அரசுகள் மேற்கொண்டு வருவதை மீனவர்கள் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.அரசின் இத்தகைய செயல்பாடுகள் ,இந்த நாட்டில் வாழும் பாரம்பரிய மீனவர்களை அழித்து , இந்திய நாட்டின் கடற்கரைகளை,மீன்பிடித் தொழிலை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கத் துடிக்கும் செயல் என வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய தேசத் துரோக செயல்களை அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.அத்தோடு, தற்போது மத்திய அரசு வெளியிட்டு இருக்கிற கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை 2010 ஐ உடனடியாக ,முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

7. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள், உலக வங்கி , ஆசிய வளர்ச்சி வங்கிகளில் கடன் வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மற்றும் அண்மைக் காலத்தில் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள,இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம்,மற்றும் பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு ஏற்படுத்த இருக்கும் அணு ஆயுத உடன்பாடுகளையும்,ஆசியான் ஒப்பந்தத்தையும் அரசு உடனடியாக நிராகரிக்க நாங்கள் வலியுறுத்துகிறோம்.

8. புதிய ஆணைகள் வரும் முன்னரே,கடலோரங்களில் ,அவசர அவசரமாக நாசகார அணு உலைகளையும், மாசு ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்களையும்,பல் நோக்கு மீன் பிடித் (தனியார்) துறைமுகங்களையும், நிலக்கரி இறக்குமதி செய்யும் துறைமுகங்களையும், தீவுகளில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களையும்,கடல் கனிம மணல் கொள்ளையையும் அனுமதித்து மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் அரசின் செயல் பாடுகளை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

9.திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு உலைப் பூங்கா திட்டம், போலியான ஆவணங்கள் மூலம் , தவறான தகவல்கள் மூலம், நிலநடுக்கம் உண்டாகக் கூடிய இடத்தைத் தேர்வு, அவசர கால தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் செய்யாமல் அனுமதி கொடுக்கப்பட்டிக்கிறது என்று இந்தக் கூட்டம் கண்டனம் செய்கிறது. அத்தோடு , கூடங்குளம் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மீன் பிடிக்க தடை செய்யபட்டிருப்பதாக அரசு அறிவித்திருப்பதை உடனே கை விடவும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

10. திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களில் குறிப்பாக உவரியில் கடல் அரிப்புகள் அதிகமாகி விட்டதால், கடல் நீர் மீனவர் வீடுகளுக்குள் புகுந்து விட்டதால் கடல் அரிப்புக்கு முழுமையான காரணமான முறையற்ற,வரம்பற்ற, சட்ட விரோத கடல் மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், போர்க்கால அடிப்படையில் மீனவர்களுக்கு கடல் அரிப்பில் இருந்து உடனடி பாதுகாப்பு அளித்திடவும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது

11. கத்தார் சிறையில் வாடும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட 41 மீனவர்களை விடுவிக்க மத்திய , மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு, அவர்களின் குடும்ப வருமான இழப்பிற்கு மத்திய , மாநில அரசுகள் உடனடியாக தகுந்த,போதிய நிவாரணம் அளிக்க நாங்கள் வலியுறுத்துகிறோம்.

12.இறுதியாக, இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மக்கள் திரள் பங்கெடுப்பை அரசு கணக்கில் எடுத்துக் கொண்டு ,இதை மீனவர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பாகக் கருதி, இந்தக் கடலோர அறிவிப்பாணையை 2010ஐ உடனடியாக,முற்றிலும் கைவிடவும் ,கடற்கரை மண்டல அறிவிப்பாணை 1991 ஐ எந்த வித திருத்தங்களும் இல்லாமல்,அதன் மூல வடிவத்தை மையமாக வைத்து பரிந்துரைக்கப்பட்டு மத்திய அரசால் கட்நாத 16 , ஜூலை , 2009 ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி எல்லை” “FINAL FRONTIER” அறிக்கையின் அடிப்படையில் புதிய சட்டம் இயற்றி , அதை அமல்படுத்த நாங்கள் அனைவரும் வலியுறுத்துகிறோம்.

கடலும், கடற்கரையும், மீன்பிடித் தொழிலும் நமதே என்று ஆர்ப்பரித்து கலைந்து செல்வோம்.!

மேற்கண்ட தீர்மானங்களை மத்திய , மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

இப்படிக்கு,

மாவட்டப் பொறுப்பாளர் ,கடலோர மக்கள் கூட்டமைப்பு,

மற்றும் திருநெல்வேலி மாவட்ட கடற்கரைக் கிராம கமிட்டியினர் , பெண்கள் அமைப்பினர் .

No comments:

Post a Comment