20 Jun 2010 12:14:14 PM IST
ராமநாதபுரம், ஜூன் 19:ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகிலுள்ள 21 தீவுகளையும் மக்கள் படகுகளில் சென்று பார்வையிட ஏற்பாடுகள் நடந்து வருவதாக, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கி. பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கடலோரப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் (பொறுப்பு) கி. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு, எஸ்.பி. பிரதீப்குமார், வனப் பாதுகாவலர் மல்லேசப்பா, வன உயிரினக் காப்பாளர் சுந்தரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆட்சியர் பேசியது:
வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 21 தீவுகள் வேம்பார், கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் கடல்வாழ் உயிரினங்கள் வாழும் பகுதிகளை தேசியப் பூங்காவாக ஜூலை முதல் வாரத்தில் அமைக்கப்பட உள்ளது.
இத்தீவுகளுக்கு படகுகள் மூலம் மக்கள் நேரில் சென்று பார்வையிடலாம்.
இப்பகுதியில் உள்ள 21 தீவுகளின் எல்லையை நிர்ணயம் செய்யும் பொருட்டு, ஒளிரும் மிதவைகள் அமைப்பது தொடர்பாகவும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, கடலோரப் பகுதிகளைத் தீவிரமாக கண்காணிக்க கடலோரக் காவல்துறை, நெடுஞ்சாலைக் காவல்துறையினரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
கடலோரக் கிராமத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோட்டாட்சியர் தலைமையில் கிராமக் கூட்டங்களை அடிக்கடி நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
சாலைப்பாதுகாப்புக் குழுக் கூட்டம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகமாகி பலர் பலியாகி வருவதை அடுத்து, அதைத் தடுக்கும் வகையில், சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் ஆட்சியர் (பொறுப்பு) கி. பாலசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், அரசு அதிகாரிகள், விபத்து மீட்புச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் விபத்து நடந்த இடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர், அங்கு விபத்துக்களை தடுக்க
நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment