Friday, June 4, 2010

தீவுகளை பாதுகாக்க போயா மிதவைகள்

மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளுக்கும் சுற்றுலா படகுகளை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின முதன்மை வன பாதுகாவலர் அருணா பாசு சர்க்கார் கூறினார்.தூத்துக்குடியில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின முதன்மை வன பாதுகாவலர் அருணா பாசு சர்க்கார் அளித்த பேட்டி: மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை பல திட்டங்களை மீனவ கிராம மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் முழுமையாக கிராமங்களை சென்றடையவில்லை. இருப்பினும் மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த பல செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு மீன் வள கல்லூரி மூலம் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எந்த ஒரு சமுதாயமும் முன்னேற கல்வி மிக அவசியம். மீனவ மக்கள் கல்விக்காக மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை மாணவ மாணவியருக்கு தொழில் கல்வியை அளித்து வருகிறது. குறிப்பாக மெரிட் இருக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணத்தை அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளையும் சுற்றி போயா மிதவைகள் அமைக்கப்படுவது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இது மீன் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்கத்தான். இது மீனவர்கள் நலனுக்கு எதிரானது அல்ல.

வரைமுறைகளை மீறி மீன் பிடித்து கொண்டிருக்கும் நமது செயல்பாடுகளினால் வரும் 2050 கடலில் மீன் பிடிக்க வாய்ப்பே இல்லாத நிலை உறுவாகிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் தலா மூன்று லட்சம் சார்பில் முழுக்க முழுக்க பைபரால் ஆன 5 படகுகள் வாங்கப்படுகின்றன. ஏற்கனவே பாம்பன் பகுதியில் இது போன்று இரு படகுகள் வாங்கப்படுகின்றன. லைப் ஜாக்கெட் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. இதில் சுற்றுலா பயணிகளை கடலில் குறிப்பிட்ட தூரம் வரை அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கடலுக்கடியில் வாழும் உயிரினங்களை கண்டு ரசிக்கவும் அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது உதவும். புதிதாக வாங்கப்படும் படகுகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் பணி மீனவ சமுதாய மக்களுக்கே வழங்கப்படுகிறது.

வாய்ப்புகள் இருந்தால் தூத்துக்குடி கடல் பகுதியிலும் இது போன்று இரு படகுகள் சுற்றுலா பயணிகளை கடலுக்கு அழைத்து செல்ல பயண்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை முழுக்க முழுக்க கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காகத்தான். இவற்றை பயண்படுத்தி தீவுகளுக்கு செல்ல அனுமதி கிடையாது. மேலும் தீவுகளை பாதுகாக்க போயா மிதவைகள் விரைவில் அமைக்கப்படும். 21 தீவுகளுக்கும் சுற்றுலா படகுகள் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

------------------------------------------------------------------------------------------------ஜூன் 04,2010,00:52 IST

தூத்துக்குடி: "மன்னார் வளைகுடா தீவுகளுக்கு, சுற்றுலா படகுகளை இயக்கும் திட்டம் இல்லை,'' என, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர், அருணா பாசு சர்க்கார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் நேற்று, மீனவர்களுக்கான மீன்வள பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மன்னார் வளைகுடாவின், 21 தீவுகளிலுள்ள பவளப்பாறைகளை பாதுகாக்க, அதை சுற்றி, "போயா' என்ற கடல் மிதவை விரிக்க, மத்திய அரசு தான் முடிவெடுத்தது. மன்னார் வளைகுடா, அறக்கட்டளை முடிவெடுக்கவில்லை. மீனவர்கள் எதிர்ப்பு காரணமாக, அங்கு கடல் மிதவைகள் போடப்படவில்லை. பாக்., வளைகுடா பகுதியிலுள்ள பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட அரிய கடல்வாழ் உரியினங்களை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக, அப்பகுதிக்கு, கண்ணாடி இழை படகுகள், இயக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது முதற்கட்டமாக, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து, பாக்., வளைகுடா கடல் பகுதிக்கு, இருபடகுகள் இயக்கப்படுகின்றன. ஒரு படகில் எட்டு பேர் வரை, பயணம் செய்யலாம். கட்டணமாக, தலா 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடலில் மொத்தம் 25 நிமிடம், அரிய கடல்வாழ் உயிரினங்கள் காண்பிக்கப்படும். இப்படகில் இரு ஓட்டுனர்கள் இருப்பர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், "கான்ட்ராக்ட்' அடிப்படையில், இந்த படகை இயக்கி வருகின்றனர். சுற்றுலாவிற்காக, மேலும் ஐந்து படகுகள் வாங்கப்படவுள்ளன. ஒரு படகின் விலை, அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய். அதில், லைப் ஜாக்கெட் (உயிர்காக்கும் சட்டை) உள்ளிட்டவை இருக்கும். இதற்கு, பாம்பனில் நல்ல வரவேற்புள்ளதால், தூத்துக்குடி கடலிலும், இதுபோன்ற சுற்றுலா படகுகளை விடுவது குறித்த திட்டம், பரிசீலனையில் உள்ளது. இச்சுற்றுலா படகுகளை, மன்னார் வளைகுடா தீவுகளுக்கு, இயக்கும் திட்டம் இல்லை. எனவே, தங்களது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுமோ என்ற அச்சம், மீனவர்களுக்கு தேவையில்லை. மன்னார் வளைகுடாவில் பவளப்பாறை வளர்ச்சி குறித்து, ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அருணா பாசு சர்க்கார் கூறினார்.மன்னார் வளைகுடா தீவுகளை, அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்து, அங்கு சுற்றுலா படகுகளை இயக்கி, மீன்பிடி தொழிலுக்கு, அப்பகுதியில் தடைவிதிக்கவுள்ளதாக, தகவல்கள் வெளியாயின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள், நாளை, படகு மற்றும் கிராமங்களில், கறுப்புக்கொடி ஏற்றி, போராட்டம் நடத்தப் போவதாக, அறிவித்துள்ள சூழ்நிலையில், அறக்கட்டளை இயக்குனர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment