Friday, June 4, 2010

ஜூன் முதல் மீன்பிடிக்க தடை: மீனவர்கள் கவலை
By ரெ. ஜாய்சன் , 29 May 2010 01:03:50 PM IST
தூத்துக்குடி, மே 28: மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளில் ஜூன் முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் என்ற செய்தி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜூன் 5-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மன்னார் வளைகுடா உலக முக்கியத்துவம்வாய்ந்த கடல்சார் உயிர்ப்பல்வகைமைகளுக்கு புகலிடமாக உள்ளது.

உலகளவில் வளமான பகுதியாகக் கருதப்படும் இங்கு, ஏராளமான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக மத்திய அரசு 1980-ம் ஆண்டு அறிவித்தது.

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் 560 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. தூத்துக்குடி குழுவில் 4, வேம்பார் குழுவில் 3, கீழக்கரை குழுவில் 7, மண்டபம் குழுவில் 7என மொத்தம் 21 தீவுகள் இந்தப் பூங்கா பகுதியில் உள்ளன.

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இத் தீவுப் பகுதிகளுக்கு மீனவர்களோ, பொதுமக்களோ செல்ல அனுமதி கிடையாது.

இந்த தீவுகளை ஒட்டி பவளப்பாறைகள், கடல் புற்கள் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன. இவை மீன்களின் முக்கிய உறைவிடமாக விளங்குவதால், இத் தீவுகளை ஒட்டி மீன்கள் அதிகம் காணப்படும்.

இதனால், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த பகுதியில் 5 தலைமுறைகளாக மீன் பிடித்து வருகின்றனர்.

இதுநாள் வரை மீனவர்களுக்கு பெரிய அளவில் அதிகாரிகள் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. எனவே, மீனவர்கள் இந்த தீவு பகுதிகளில் சுதந்திரமாக மீன்பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் 26-ம் தேதி ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளுக்கும் பொதுமக்கள் படகில் சென்று வர
ஜூன்முதல் வாரத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படும் என்றும், தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், தீவு பகுதிகள் முழுவதும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் முழுக் கட்டுப்பாட்டில்கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இது தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்ணின் மைந்தர்களையும், பாரம்பரிய மீனவர்களையும் மீன்பிடித் தொழிலில் இருந்து அந்நியப்படுத்திவிட்டு, சுற்றுலாப் பயணிகளையும், வெளிநாட்டினரையும் தீவுப் பகுதிகளில் அனுமதிக்கும் இச்செயல் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றார் கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
சுற்றுலாவையும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள், உப்பளங்கள் போன்றவற்றை அனுமதித்துவிட்டு, மீன் பிடித்தலுக்குத் தடை போடும் உள்நோக்கம் என்ன என்பது குறித்து சந்தேகம் எழுகிறது.

அரசும், அறிவியலாளர்களும், சுற்றுச்சூழல் நிபுணர்களும் மன்னார் வளைகுடா கடல் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி, அரிய உயிரினங்கள் வாழும் பகுதி என கண்டறியும் முன்னரே, அறிவிக்கும் முன்னரே பாரம்பரிய மீனவர்கள் நூற்றாண்டு காலமாக தீவுகளையும், கடல் வளத்தையும் பாதுகாத்து வந்தனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தற்போது 21-ம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கடல்வள மேலாண்மை திட்டங்கள், இந்திய- நார்வே மீன்பிடி திட்டங்கள், நவீன மீன்பிடி முறைகள், இயந்திரமயமாக்குதல், பவளப்பாறை அழிப்பு, கடலோர மணல் கொள்ளை, சேது சமுத்திர திட்டம், பாசி வளர்ப்பு போன்ற கடல் வளத்தை அழிக்கும், உயிர்ச் சூழலை கொடுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பு திட்டங்களை அனுமதித்து மன்னார் வளைகுடா கடல் வளத்தை அழித்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தொழிலுக்கு தடை விதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, மீனவ மக்களுக்கு எதிரான, தேச பாதுகாப்பை கேள்வி குறியாக்கும்.

இயற்கையை அழிக்கும் இச்செயலை உடனடியாக கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி உலக சுற்றுச்சூழல் தினமானஜூன் 5-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தொழில் புறக்கணிப்பு போராட்டம் செய்கின்றனர்.

மேலும், ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களில் உண்ணாவிரத போராட்டங்களும் அன்றைய தினம் தொடங்கப்படும் என்றார் அவர்.

இது தொடர்பாக மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குநரும், தலைமை வனப் பாதுகாவலருமான அருணாபாசு சர்க்காரிடம் கேட்ட போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவில் உள்ள தீவுகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது குறித்து கேட்டபோது, இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் மீனவர்கள், பொதுமக்கள் செல்ல ஏற்கெனவே தடை உள்ளது. அந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என்றார் அவர்.

No comments:

Post a Comment