Friday, June 4, 2010

தீவுகளை சுற்றுலாத்தலமாக்குவதற்கு எதிர்ப்பு


தூத்துக்குடி : மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றுலாத்தலமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர மீனவர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 5ம் தேதி மீனவ கிராமங்களில் கருப்புகொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்க உள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வடபகுதி மீனவர் சங்க செயலாளர் ஜான்சன் நிருபர்களிடம் கூறியதாவது;மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றுலா தலமாக்கும் முயற்சியில் அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியில் நாட்டுபடகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சார்பில் 5ம் தேதி நாட்டுபடகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்பினை தெரிவிக்க உள்ளோம். வேம்பார் முதல் தூத்துக்குடி வரையிலும் உள்ள சுமார் 1.5 லட்சம் மீனவர்களும், ஆயிரம் நாட்டுபடகுகளும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். மீனவர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை, தற்போது மீனவர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. 21 தீவுகளை சுற்றிலும் உள்ள பவள பாறைகள் அழிவிற்கு மீனவர்கள் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தூத்துக்குடியில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள் உட்பட பல பெரிய கட்டடங்கள் பவளப் பாறைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபடுபவர்களை எல்லாம் விட்டு விட்டு கடலில் மீன்பிடிக்க செல்லும் அப்பாவி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தால் யுனஸ்கோ ரூ.100 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிமீ., வரையிலும் கடல் பகுதியில் சாம்பல் துகள்கள் மிதந்து வருகிறது. இதற்கு மிகப்பெரிய கம்பெனிகள் தான் காரணம். 21 தீவுகளையும் சுற்றுலா தலமாக்கினால் கடல் வளமும், மீன் வளமும் பாதிக்கபடுவதோடு, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கூறினார். அப்போது வடபகுதி பொருளாளர் இஸ்மாயில், தூத்துக்குடி மாவட்ட கரைமடி மீனவர் சங்கத் சேர்ந்த கணேசன், மீன் சார்பு தொழிலாளர் சங்க தலைவர் ஜார்ஜ் கோமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment