Tuesday, June 15, 2010

Dinamani reports on Fishers' Hunger Strike against Island Tourism at KEEZHAKARAI on 05.06.2010

06 Jun 2010 10:53:47 AM IST

கீழக்கரையில் மீனவர்கள் உண்ணாவிரதம்

ராமநாதபுரம்,ஜூன் 5: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வனச்சரகர் அலுவலகம் முன்பு மன்னார் வளைகுடா கடல்பகுதியில் உள்ள 21 தீவுகளில் மீனவர்களைப் பாதிக்கும் ஒளிரும் மிதவைகளைப் போடுவதை நிறுத்தக் கோரி, அனைத்து கிராம மீனவர்கள் சார்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு மீனவர்கள் சங்க கடலாடி,திருப்புல்லாணி வட்டாரத் தலைவர் பி.எம். கருப்பையா தலைமை வகித்தார்.
துணைச் செயலாளர்கள் ராஜம்மாள்,காசிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் ஜோசப் வரவேற்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தினை மாவட்டத் தலைவர் பால்ச்சாமி துவக்கிவைத்துப் பேசியதாவது:
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டப் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித் தொழிலை பாதிக்கும் வகையில், மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள 21 தீவுகளில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவில், வனச்சரக அலுவலர்களால் ஒளிரும் மிதவைகள் போடவுள்ளதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழக அரசின் புதிய பல்வேறு உத்தரவுகளால் பாரம்பரிய மீனவர்கள் படகுகளில் சென்று மீன்பிடிக்க முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மேலும் மீனவப் பெண்கள் கடல்பாசிகள் சேகரிப்பதிலும், இந்த ஒளிரும் மிதவை போடுவதால் பல இடையூறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வனச்சரகர்களின் இப்போக்கை கைவிட வேண்டும்.
தவறும் பட்சத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்ட மீனவக் குடும்பங்களையும் ஒன்றிணைத்து பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் கீழக்கரை,மண்டபம்,ராமேஸ்வரம்,ஏர்வாடி உள்பட பல்வேறு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மீனவச் சங்க பெண்கள் அணித் தலைவர் மீனாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment