Tuesday, June 15, 2010

TUTY DINAMALAR brings out a detailed background for the FISHERS' Protest on 01.06.2010

1.மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகள் சுற்றுலா தலமாகிறது அரசு முடிவுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் கடும்

தூத்துக்குடி: மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளையும் சுற்றுலாதலமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இதனை கண்டித்து வரும் 5ம் தேதி முதல் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு போகாமல் தொழில் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 21 தீவுகள்; மன்னார் வளைகுடாவில் தற்போது சுமார் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வான்தீவு, கோசுவாடி தீவு, விலாங்குசல்லி தீவு, காரைசல்லி தீவு, உப்பு தண்ணீர் தீவு, புளுனிசல்லிதீவு, நல்லதண்ணீர் தீவு, அணைப்பார் தீவு, வாலிமுனை தீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழைத் தீவு, முல்லைத் தீவு, முயல்தீவு, மனோலிதீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, குருசடை தீவு, சிங்கிலி தீவு என மொத்தம் 21 தீவுகள் உள்ளது. இந்த தீவுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் காட்டு இன குதிரை, முயல், நாய் போன்ற விலங்குகள் வசித்து வந்தன. இது தவிர இந்த தீவுகளில் அரியவகை மூலிகைகளும், தாவர வகைகளும் முன்பு இருந்ததாக தெரியவருகிறது. மன்னார்வளைகுடா பகுதியில் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது ஓய்வு இடமாக இந்த தீவுகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டில் 21 தீவுகளையும் தேசிய கடல்வளப் பூங்கா என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் மீனவர்களுக்கு சில கட்டுபாடுகளையும் விதித்தது. ஆரம்பத்தில் சில மீனவ சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

சுனாமியை தடுத்த தீவுகள்; இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியின் போது தான் இந்த தீவுகளின் மகிமை வெளி உலகிற்கு தெரியவந்தது. பல கடற்பகுதியில் சுனாமியின் கொடூரம் அதிகமாக இந்தாலும், மன்னார்வளைகுடா பகுதியில் அதன் தாக்கம் வெகு குறைவாகவே இருந்தது. அதற்கு காரணம் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளையும் சுற்றி இயற்கையாகவே அமைந்துள்ள பவளப்பறைகள் தான். இந்த பவளப்பறைகளுக்கு சுனாமியின் தாக்கத்தை தடுக்கும் சக்தி உண்டு என்பதை அப்போது அனைவரும் அறிந்து வியந்தனர். இதன் பின்னர் இந்த தீவுகளின் மீது அரசின் பார்வை அதிகரித்தது. மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையினர் இந்த தீவுகளின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கினர். இந்த தீவுகளை சுற்றிலும் செயற்கையான பவளப்பாறைகளை உருவாக்கினர்.

சுற்றுலா தலமாகிறது தீவுகள் தீவுகளில் அதிக அளவில் செடிகளை நட்டு பராமரிக்க தொடங்கினர். தீவு பகுதியையும், அதனை ஒட்டியுள்ள பவளப்பாறைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் கோயா மிதவைகளை மிதக்கவிட்டனர். இந்த மிதவைகளுக்கு உட்பகுதியில் மீனவர்களும், படகுகளும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த பிரச்னை தற்போது வரையிலும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தீவு பகுதிகளை சுற்றுலா தலமாக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. 21 தீவுகளையும் தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிந்து, இதன் மூலம் சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

மீனவர்கள் எதிர்ப்பு : 21 தீவுகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வர செயற்கைஇழை படகுகள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 21 தீவு பகுதிகளை ஒட்டியும் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு கடலோர மக்கள் கூட்டமைப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்த அமைப்பின் அமைப்பாளர் புஷ்பராயன் கூறும்போது, இந்த பகுதியில் இன்றளவிலும் சுமார் 2 லட்சம் மீனவ மக்கள் மீன்பிடித்தொழில் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். காலம், காலமாக கடல்வளத்தையும், உயிர்சூழலினையும் பாதுகாத்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த 21 தீவுகளுக்கும் பொதுமக்கள் படகுகளில் சென்று வர ஜூன் மாதம் முதல் அனுமதிவழங்கப்படும் என்றும் , அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மீனவ மக்களை அந்நியப்படுத்தும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். மண்ணின் மைந்தர்களை, பாரம்பரிய மீனவர்களை கடல்தொழிலில் இருந்து அந்நியப்படுத்திவிட்டு, மீன்பிடித் தொழிலை தடை செய்துவிட்டு சுற்றுலா பயணிகளையும், வெளிநாட்டினரையும் தீவுப்பகுதியில் அனுமதிக்கும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடல்வளப்பாதுகாப்பிற்காக செயல்படுகின்றோம் என்ற போர்வையில் கடல்வளத்திற்கும், மீனவர் நலனுக்கும் எதிராக செயல்படும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையினையும், அதன் இயக்குனரின் செயல்பாட்டினையும் கடலோர மக்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. சுற்றுலாவினையும், வளர்ச்சிதிட்டங்கள் என்ற பெயரில் சுற்றுசூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள், உப்பளங்கள் போன்றவற்றை அனுமதித்துவிட்டு, மீன்பிடித்தலுக்கு தடைபோடும் உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழும்புகிறது. நமது நாட்டில் எங்கெல்லாம் சுற்றுலாவாக அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இய ற்கை வளங்கள் பாழ்பட்டுபோய்தான் உள்ளது. இயற்கையை அழி க்கும் இச்செயலினை உடனே கைவிடவேண்டும். இந்தியாவின் ஏற்றுமதியில் 25 சதவீத அந்நிய செலவாணி ஈட்டி வருவது மீன்பிடித் தொழில் தான். மீனவ மக்களுக்கு எதிரான, தேசபாதுகாப்பை கேள்விகுறியாக்கும் அரசின் இந்த அறிவிப்பை கைவிட்டு மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளினை காக்க வலியுறுத்தி உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு போகாமல் தொழில் புறக்கணிப்பு போராட்டம் செய்ய உள்ளோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment