பதிவு செய்த நாள் : ஜூன் 04,2010,00:52 IST
தூத்துக்குடி: ""மன்னார் வளைகுடா தீவுகளுக்கு, சுற்றுலா படகுகளை இயக்கும் திட்டம் இல்லை,'' என, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர், அருணா பாசு சர்க்கார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் நேற்று, மீனவர்களுக்கான மீன்வள பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மன்னார் வளைகுடாவின், 21 தீவுகளிலுள்ள பவளப்பாறைகளை பாதுகாக்க, அதை சுற்றி, "போயா' என்ற கடல் மிதவை விரிக்க, மத்திய அரசு தான் முடிவெடுத்தது. மன்னார் வளைகுடா, அறக்கட்டளை முடிவெடுக்கவில்லை. மீனவர்கள் எதிர்ப்பு காரணமாக, அங்கு கடல் மிதவைகள் போடப்படவில்லை. பாக்., வளைகுடா பகுதியிலுள்ள பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட அரிய கடல்வாழ் உரியினங்களை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக, அப்பகுதிக்கு, கண்ணாடி இழை படகுகள், இயக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது முதற்கட்டமாக, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து, பாக்., வளைகுடா கடல் பகுதிக்கு, இருபடகுகள் இயக்கப்படுகின்றன. ஒரு படகில் எட்டு பேர் வரை, பயணம் செய்யலாம். கட்டணமாக, தலா 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடலில் மொத்தம் 25 நிமிடம், அரிய கடல்வாழ் உயிரினங்கள் காண்பிக்கப்படும். இப்படகில் இரு ஓட்டுனர்கள் இருப்பர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், "கான்ட்ராக்ட்' அடிப்படையில், இந்த படகை இயக்கி வருகின்றனர். சுற்றுலாவிற்காக, மேலும் ஐந்து படகுகள் வாங்கப்படவுள்ளன. ஒரு படகின் விலை, அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய். அதில், லைப் ஜாக்கெட் (உயிர்காக்கும் சட்டை) உள்ளிட்டவை இருக்கும்.
இதற்கு, பாம்பனில் நல்ல வரவேற்புள்ளதால், தூத்துக்குடி கடலிலும், இதுபோன்ற சுற்றுலா படகுகளை விடுவது குறித்த திட்டம், பரிசீலனையில் உள்ளது. இச்சுற்றுலா படகுகளை, மன்னார் வளைகுடா தீவுகளுக்கு, இயக்கும் திட்டம் இல்லை. எனவே, தங்களது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுமோ என்ற அச்சம், மீனவர்களுக்கு தேவையில்லை. மன்னார் வளைகுடாவில் பவளப்பாறை வளர்ச்சி குறித்து, ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அருணா பாசு சர்க்கார் கூறினார்.
மன்னார் வளைகுடா தீவுகளை, அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்து, அங்கு சுற்றுலா படகுகளை இயக்கி, மீன்பிடி தொழிலுக்கு, அப்பகுதியில் தடைவிதிக்கவுள்ளதாக, தகவல்கள் வெளியாயின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள், நாளை, படகு மற்றும் கிராமங்களில், கறுப்புக்கொடி ஏற்றி, போராட்டம் நடத்தப் போவதாக, அறிவித்துள்ள சூழ்நிலையில், அறக்கட்டளை இயக்குனர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment