Friday, June 4, 2010

அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க தேசியப் பூங்கா ஜூன் முதல் வாரத்தில் அமைக்கப்படும்- ஆட்சியர்
ராமநாதபுரம், மே 27: அரியவகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான தேசியப் பூங்கா வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அமைக்கப்படும் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பவளப்பாறைகள் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியதாவது:

தீவிரவாதம், கடத்தல், ஊடுருவல் போன்றவற்றிலிருந்து கடலோரப் பகுதிகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பு குறித்து மாதந்தோறும் கடலோர கிராமங்களில் உள்ள மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோட்டாட்சியர் தலைமையில் கிராமக் கூட்டம் நடத்தப்படவேண்டும்.

அக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 21 தீவுகள், வேம்பார்,கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகமாக வாழும் பகுதி தேசியப் பூங்காவாக ஜூன் முதல் வாரத்தில் அமைக்கப்படும். இந்தத் தீவுகளுக்கு படகுகள் மூலம் வரலாம்.

ஆனால் கண்டிப்பாக அந்தப் பகுதிகளில் மீன்பிடித்தல் கூடாது என்பதை மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் தெரிவிக்கவேண்டும்.

மீன்பிடி படகுகளுக்கு உரிய அங்கீகாரம் இருக்கிறதா என்பதை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து தங்கள் துறைகளைச் சேர்ந்த படகுகளைப் பயன்படுத்தி மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் எஸ்.பி. பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி கே.பாலசுப்பிரமணியம், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையின் இயக்குநர் அருணாபாசு சர்க்கார், கடலோர காவல்படையின் கமாண்டர்கள் சைனி, திவாரி, வனக் காப்பாளர் சுந்தரக்குமார், வனப் பாதுகாவலர் மல்லேசப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment