04 Jun 2010 10:52:41 AM IST
கடல்வாழ் உயிரினங்களை அழிக்கும் வலைகளை பயன்படுத்தக்கூடாது: துணைவேந்தர்
தூத்துக்குடி, ஜூன் 3: கடல்வாழ் உயிரினங்களை அழிக்கக்கூடிய வலைகளை மீனவர்கள் பயன்படுத்தகூடாது என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ப. தங்கராசு வியாழக்கிழமை தெரிவித்தார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீனவ சமூகமும் பொறுப்பார்ந்த மீன்வளப் பாதுகாப்பும் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு தங்கராசு மேலும் பேசியதாவது:
மீனவர்கள் 45 நாள் மீன்பிடி தடைக்கு பின்பு சில தினங்களுக்கு முன்பு கடலுக்கு சென்றனர். அவர்களின் மனதிருப்திக்கு ஏற்ப மீன்கள் கிடைக்கவில்லை என மீபத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதற்கு காரணம் கடல்வாழ் உயிரினங்களை அதிகளவில் தொடர்ந்து பிடித்ததே ஆகும்.
நாட்டில் 30 லட்சம் பேர் கடலையும், கடல்வாழ் உயிரினங்களையும் சார்ந்து வாழ்கின்றனர். அதுபோல 16 லட்சம் பேர் காடுகளையும், அதில் உள்ள உயிரினங்களையும் சார்ந்து வாழ்கின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடல் வளத்தையும், காடு வளத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
1970 முதல் 2000 வரை சிற்றினங்களில் 40 சதவீதம் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் 40 ஆண்டுகள் போனால் மேலும் 40 சதவீதம் குறையும். இதன் மூலம் அதை சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடல் வளத்தை பாதுகாக்க மீனவர்கள் கடல்வாழ் உயிரினங்களை அழிக்கக்கூடிய வலைகளை பயன்படுத்தக்கூடாது. சிறிய மீன்கள் பிடிபட்டால் கடலில் விட்டுவிட வேண்டும். ஐ.நா. சபை அண்மையில் சிவப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 16,928 சிற்றினங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 21 சதவீதம் பாலூட்டிகள், 12 சதவீதம் பறவைகள், 31 சதவீதம் ஊர்வன, 30 சதவீதம் நீரில் வாழ்வன ஆகும். நீரில் வாழ்வனவற்றில் 37 சதவீதம் மீனினங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரிய வகை உயிரினங்களை அழிவில் இருந்து காப்பாற்ற மன்னார் வளைகுடா அறக்கட்டளை, மீன்வளக் கல்லூரி போன்றவை தெரிவிக்கும் யோசனைகளை மீனவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
முகாமில் சிறப்பு விருந்தினராக மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குநரும், தலைமை வனப்பாதுகாவலருமான அருணா பாசு சர்க்கார் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் எம்.சி. நந்திஷா, மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க துறை இயக்குநர் வை.கி. வெங்கடரமணி பங்கேற்றனர்.
மீன்வள உயிரியல் மற்றும் மீன் பிடிப்பியல் துறை தலைவர் மு. வெங்கடசாமி வரவேற்றார். இணை பேராசிரியர் தொ. பிரான்சிஸ் நன்றி கூறினார். மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© Copyright 2008 Dinamani
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment