7.மன்னார்வளைகுடாவில் உள்ள 21 தீவுகளை சுற்றுலாதலமாக்கும் திட்டம் தற்போது இல்லை
தூத்துக்குடி : மன்னார்வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளை சுற்றுலாதலமாக்கும் எந்தவித திட்டமும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளைக்கு இல்லை என்று அதன் இயக்குனர் தெரிவித்தார்.
இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் அருணா பாசு சர்க்கார் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது; கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு அறக்கட்டளை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுவரையிலும் 80 மீனவ கிராமங்களை அறக்கட்டளை தத்து எடுத்து மீனவர்களின் மேம்பாட்டிற்கு தேவையானவற்றை செய்து வருகிறது. எந்த ஒரு சமுதாயமும் முன்னேற படிப்பு அவசியம். அதனை கருத்தில் கொண்டு மீனவ மக்கள் தொழில்நுட்ப கல்வி மற்றும் மொரைன் பயாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் படிப்பதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்து வருகிறது.
இதற்கு தேவையான முழு கல்வி கட்டணத்தையும் அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது. 21 தீவுகளையும் சுற்றி போயா மிதவைகள் அமைப்பது என்பது மத்திய அரசின் திட்டமாகும். இதற்கும் அறக்கட்டளைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இது பற்றி மீனவ சமுதாய மக்கள் வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறையை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மீனவ சமுதாயம் மக்கள் மீன்பிடித் தொழிலோடு வேறுவகையிலும் வருமானத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கடற்கரையோர சுற்றுலாவிற்கு அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுலா பயணிகளை கண்ணாடி இழை படகுகள் மூலம் சுமார் 25 நிமிடம் கடற்பகுதிக்குள் சென்று பார்க்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
இதனை நிர்வகிக்கும் பணியினை மீனவ சமுதாய மக்களிடமே ஒப்படைக்க உள்ளோம். இதன் மூலம் மீனவ சமுதாய மக்களுக்கும் அறக்கட்டளைக்கும் வருவாய் கிடைக்கும். தற்போது ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இரண்டு படகுகளை இயக்கி வருகிறோம். இந்த படகுகளில் செல்லும் போது கடலுக்கு அடியில் உள்ள மீன்கள், அறிய வகை உயிரினங்கள், பவளப்பாறைகள், தாவரங்கள் போன்றவற்றை பற்றி சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளலாம். தூத்துக்குடி பகுதியிலும் விரைவில் இந்த சுற்றுலா படகு திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மன்னார்வளைகுடாவில் உள்ள 21 தீவுகளையும் சுற்றுலாதலமாக்கும் எந்த திட்டமும் தற்போது இல்லை. மீனவர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத் தான் போயா மிதவைகளை கடலுக்குள் விடப்பட்டுள்ளது.
இதனை தாண்டி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரத்தில் அக்குவாரியம் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகளை சிறிய வேன்கள் மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு அழைத்து செல்லும் திட்டம் விரைவில் அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment